`சுற்றந்தழால்' எனும் சொல் கேள்விப்பட்டதுண்டா? அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா? மூளையைக் கசக்க வேண்டாம். இது திருக்குறளில் ஓர் அதிகாரத்தின் தலைப்பு! ‘தம் சுற்றத்தாரை நீங்க விடாமல் அணைத்துக் காத்தல்' என்பது இதன் பொருள். நமக்குப் பரிச்சயமான ' காக்கை கரவா கரைந்துண்ணும்...' எனும் குறள் இந்த அதிகாரத்தில் தான் இடம் பெற்றுள்ளது.
இவ்வதிகாரத்தில் வள்ளுவர், ஒருவன், தம்முடன் இருப்பவர்களை எப்படி கட்டிக் காப்பது என பத்து குறட்பாக்களின் வழியாக விளக்குகிறார். இவற்றில் கடைசியில் அமைந்த 530வது குறளில் அவர் சொல்வதைப் பாருங்கள். ‘கூடவே இருந்து, பின்னர் காரணம் இல்லாமல் பிரிந்து போய், அதன் பின்னர் திரும்பி வந்தவனை, அரசன் அல்லது தலைவன், பொறுமையாய் ஆராய்ந்து பார்த்து ஏற்றுக் கொள்வது நல்லது ' என இந்தக் குறளுக்குப் பலர் பொருள் சொல்வார்கள்.
இது என்ன இன்றைய காலகட்டத்தில் உள்ள அரசியல்வாதிகளுக்குச் சொல்வது போலவே இருக்கிறதே என்கிறீர்களா? அதை விடுங்கள். இது குறித்து சாணக்கியர் சொல்வதைக் கேளுங்கள்.
`முன்னர் தீங்கு விளைவித்துவிட்டு பிரிந்து சென்றவன், மீண்டும் தன்னிச்சையாக வாருவானாகில், அரசன், அவனுடைய நோக்கத்தை ஆராய்ந்து அவனை எச்சரிக்கையாகக் கையாள வேண்டும் ' என்பது சாணக்கியர் அறிவுரை! என்ன, வள்ளுவரும் சாணக்கியரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி சொல்லி இருக்கிறார்களே என்கின்றீர்களா? பின்னே என்ன? இது போன்றவை நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்தும் சூழ்நிலைகள் அல்லவா?
தமிழ் நாட்டில் பிரபலமான ஒரு ஜவுளி நிறுவனத்தில், தொழிலாளர்களை ஊக்குவிப்பதற்காக என்னைப் பேச அழைத்து இருந்தார்கள். அந்நிறுவனத்தின் முதலாளியிடம் , கூட்டத்தில் நான் எதைப்பற்றி பேசுவது சரியாக இருக்கும் எனக் கேட்டேன். அவர் அந்த விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார்.
‘நான் மிகவும் யோசித்து, சிரமப்பட்டு, செலவழித்து தான் தனது பிராண்டை வளர்த்தேன்' எனத் தொடங்கியவர், ஆனால் என்னிடம் பணிபுரிபவர்கள் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் வியாபார நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டுவிட்டு, வேறு நிறுவனத்தினர் சில ஆயிரம் சம்பளம் அதிகம் கொடுத்தால் , அந்நிறுவனத்திற்கு உடனே தாவி விடுகிறார்கள்' எனச் சொல்லி வருத்தப்பட்டார்.
தொடர்ந்து, ‘அது போல் நம்மிடம் அனுபவம் பெற்றவர்களை தம் நிறுவனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைப்பவர்கள், அதிகச் சம்பளம் கொடுக்கக் காரணம் நம் வியாபார இரகசியங்களை, யுக்திகளைத் தெரிந்து கொள்வது தானே தவிர, அப்பணியாளர்களின் சிறப்புத் திறமைகள் அல்லவே. இதைப் புரிந்து கொள்ளாமல், புரிந்து கொண்டாலும், கொள்கையின்றி தன்னலம் கருதுவதால், சில பணியாளர்கள் அவர்கள் விரிக்கும் வலையில் விழுந்து விடுகிறார்கள் ' என்றார்.
ஐயா, மீதிக் கதை அவர் சொல்லாமலே நமக்குத் தெரிந்தது தானே?அவர்களைப் பறித்துக் கொண்டவர்கள் பிறகு என்ன செய்வார்கள்? நம்ம ஆளின் விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கறந்து கொண்ட பின்,கழட்டி விட்டு விடுவார்கள் இல்லையா?
இதைத்தான் அந்தப் பணியாளர்களுக்கு எடுத்துச் சொல்லும்படி கூறினார் அந்தத் தொழிலதிபர். இருக்கும் இடத்தில் விசுவாசமாக உழைத்தால் நாளாவட்டத்தில் சம்பளத்துடன் இலாபத்திலும் பங்கு கிடைக்கும், நிறுவனம் பங்கு வெளியிட்டால் அது பணியாளர் என்ற முறையில் கிடைக்க வாய்ப்புண்டு, மொத்தத்தில் நீண்ட காலம் மனது சஞ்சலிக்காமல், முதலாளிக்குத் துரோகம் இழைக்காமல் தொடர்வது நல்ல பலன் தரும் என்பதை எடுத்துச் சொன்னோம்.
அவரது நிறுவனத்தில் கடந்த பத்து ஆண்டுகளில், பல பணியாளர்கள் அந்த மாதிரி அதிகச் சம்பளத்திற்கோ, அல்லது மற்ற காரணங்களுக்கோ சென்றது உண்டு என்றும், அதில் சிலர் மீண்டும் அவரிடமே திரும்பி வந்து சேர்ந்து கொள்ள விரும்புவார்கள் என்றும் சொன்னார் அவர். சரி, நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்? திரும்பி வந்தவரைச் சேர்த்துக் கொள்வீர்களா, மாட்டீர்களா?
நம்ம தொழிலதிபர் இதைக் கையாளும் விதம் வள்ளுவரும் சாணக்கியரும் சொல்லியபடியே இருந்தது! அதாவது அவருடன் உயர் பதவியில் இருந்தவர் அவ்வாறு வெளியில் சென்று திரும்பினால், அதற்கான காரணத்தை பொறுமையாக ஆராய்வாராம். வருபவன் உள்ளத்தில் ஒன்றை வைத்துக் கொண்டு வேறு ஒரு காரணத்தைச் சொல்லக் கூடும். யார் கண்டார்கள்? அந்த ஆள் மாற்று நிறுவனத்திற்கு உளவு சொல்வதற்காக் கூடத் திட்டமிட்டு வரலாம்.
பொதுவாகப் போனவன் போனவன் தான் எனும் கொள்கையைத் தான் கடைப்பிடிப்பாராம். திரும்பச் சேர்த்துக் கொள்வது மிக அரிதாக இருக்குமாம்.
‘உலகம் பெரிது, வேறு எவ்வளவோ இடங்கள் அவனுக்கு உண்டு, நமக்கு எவ்வளவோ ஆட்கள் கிடைப்பார்கள்.அப்படியிருக்க மீண்டும் அந்த ஆளைச் சேர்த்துக் கொள்வதாக இருந்தால் அவன் அசாதாரணத் திறமை உடையவனாக இருக்க வேண்டும். அத்துடன்அவனது நோக்கம் நமக்கு மிகத் தெளிவாகப் புரிய வேண்டும்' என்றார் அவர். என்ன, சாணக்கியர் சொல்வது தானே இது?
- somaiah.veerappan@gmail.com