இந்திய உள்கட்டமைப்புத் துறையின் ஆதாரமாகக் கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வரும் நிறுவனம் ஐஎல் அண்ட் எஃப்எஸ் இப்போது திவாலாகும் நிலைக்குச் சென்றுள்ளது. இதனால் வங்கித்துறையின் அடுத்த தலைவலியாக மாறியுள்ளது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் இந்தியாவில் 121, வெளிநாடுகளில் 52 துணை நிறுவனங்களை வைத்துள்ளது. இது தவிர 12 இந்திய, மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் அசோசியேட் நிறுவனங்களாக உள்ளன. இதுதவிர 36 இந்திய, 6 வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து கூட்டு தொழிலிலும் ஈடுபட்டுள்ளது.
இதுவரை சாலைகள், ரயில்வே பாதைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், தொழிற்சாலைகள் என இந்நிறுவனம் செயல்படுத்திய திட்டங்களின் மதிப்பு ரூ. 1.8 லட்சம் கோடிக்கும் மேல். 2018-ம் நிதி ஆண்டில் இது ஈட்டிய லாபம் ரூ. 584.32 கோடி. நடப்பு நிதி ஆண்டின் கணக்குப்படி இதன் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.6,950.19 கோடி.
இப்படி இந்திய மொத்த உட்கட்டமைப்பையும் தீர்மானித்த சாம்ராஜ்யமாக வளர்ந்த இந்நிறுவனம், தற்போது அன்றாட செலவுகளைச் சமாளிக்கவே தள்ளாடிக்கொண்டிருக்கிறது.
வங்கிகள் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து கடன் வாங்கி, உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ஐஎல் அண்ட் எஃப்எஸ் கடன் வழங்கியிருக்கிறது. தற்போது இந்தக் கடன்கள் திரும்ப வராததால், சிக்கலில் மாட்டியிருக்கிறது.
இதன் மொத்த கடன் ரூ. 91 ஆயிரம் கோடி. இதில் வங்கிகளில் வாங்கியது மட்டுமே ரூ. 57 ஆயிரம் கோடி. கடந்த சில மாதங்களில் ரூ. 12 ஆயிரம் கோடி மதிப்பிலான கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தோல்வியடைந்துள்ளது. சிட்பியிடம் வாங்கிய ரூ. 1000 கோடி ரூபாய் கடனைக் கூட திருப்பிச் செலுத்த முடியவில்லை. வணிகப் பத்திரங்கள் மீதான தொகையையும் தரவில்லை. இவற்றுக்கெல்லாம் பின்னரே இந்நிறுவனத்தின் நிதி நிலைமை திவாலாகும் கட்டத்தில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஆனால், “திவால் எல்லாம் ஆகவில்லை. பணத் தட்டுப்பாட்டில்தான் இருக்கிறோம். அரசின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகை ரூ.16 ஆயிரம் கோடியைக் கொடுத்தால் தற்போதுள்ள பணத்தட்டுப்பாட்டை சமாளித்துவிட முடியும்” என்கிறது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ்ஸின் தற்போதைய நெருக்கடிக்கு காரணங்களாக, திட்டங்களுக்கு அரசு ஒப்புதல் கிடைப்பதில் தாமதம், தொடர் வட்டி விகித உயர்வு, திட்டங்களுக்கான தொகை நிலுவை போன்றவற்றை நிறுவனத் தரப்பு முன்வைக்கிறது.
திட்டங்களை முடிக்க காலதாமதம் ஆகும் போது வாங்கிய கடன் மீதான வட்டியும், திட்டங்கள் மீதான செலவினங்களும் அதிகமாகும் என்கிறது. ஆனால் இவை மட்டும்தான் காரணமா?
ஒவ்வொரு ஆண்டும் லாபம் ஈட்டிய நிறுவனம், அன்றாட செலவுகளுக்கே தள்ளாடும் நிலைக்கு வர காரணம் நிர்வாக குளறுபடிகள்தான். துணை நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதிலும், திட்டங்களை முடிப்பதிலும் சரியாக கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள். நிர்வாகத்திலும் பெரிய அளவில் மோசடிகள் நடந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
ஐஎல் அண்ட் எஃப்எஸ் நிறுவனங்களின் நிதி அறிக்கைகளிலும், நிர்வாகத்திலும் மோசடிகள் நடந்ததாகப் பல்வேறு புகார்கள் செபி, ரிசர்வ் வங்கி மற்றும் நிறுவன விவகாரங்கள் அமைச்சகம், நிதி அமைச்சகம் ஆகியவற்றுக்கு வந்துள்ளன.
இந்நிறுவனத்தின் சிக்கல்களுக்கு மற்றொரு காரணம், உள்ளூர் நிறுவனங்களுடன் இணைந்து உட்கட்டமைப்பு திட்டங்களைச் செயல்படுத்தும் போது, லாபம் ஈட்டும்வரையிலும் அந்த நிறுவனத்தைப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் வெளியேறிவிடும் போக்கை கடைபிடித்துவந்துள்ளது.
சமீபத்திய ராஜினாமா நடவடிக்கைகளும் நிர்வாகத்தின் நேர்மை மீது சந்தேகத்தை எழுப்புகிறது. 30 ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் பணியாற்றிய ரவி பார்த்தசாரதி உடல்நிலை சரியில்லையென தலைவர் பதவியை ஜூலையில் ராஜினாமா செய்தார். பெரும்பாலான கடன்களுக்குப் பொறுப்பு வகிக்கும் இந்நிறுவனத்தின் பைனான்ஷியல் சர்வீசஸ் துணை நிறுவனத்திலிருந்து சிஇஓ ரமேஷ் பாவா மற்றும் இயக்குநர் குழுவில் இருந்த ஐந்து பேரும் கூட்டாக ராஜினாமா செய்துள்ளனர்.
சமீபத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைபடி, இரண்டாண்டுகளுக்கு முன்னரே இந்நிறுவனத்தின் நிகர பண இருப்பு காலியாகியிருக்கிறது. ஆனால், பண வரவை சீர்செய்ய எந்த நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்கவில்லை. உட்கட்டமைப்பத்துறை பல லட்சம் கோடிகள் புழங்கும் துறை. சரியாகத் திட்டமிடப்படாவிட்டால் இழப்புகளும் அதிகமாகவே இருக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
மத்திய அரசு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்துவரும் நிலையில் ஐஎல் அண்ட் எப்எஸ் நிறுவனத்தின் நிதிச் சிக்கல் இந்தியபொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக உட்கட்டமைப்பு துறை நிறுவனங்கள் தொடர்ந்து வாராக்கடனால் திவாலாகும் நிலைக்குச் செல்வது வங்கித்துறைக்கு நல்லதல்ல.
மிக முக்கியமாக ஐஎல் அண்ட் எஃப் எஸ் நிலை, நிழல் வங்கிகளான வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் நிதிநிலையின் மீது பெரும் அச்சத்தை உண்டாக்குகிறது. ஏனெனில், வங்கிகளின் கடன் அளவைக் காட்டிலும் என்பிஎஃப்சிகள் வழங்கிய கடன்கள் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளன. ஐஎல் அண்ட் எஃப் எஸ் கடன்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை மற்ற என்பிஎஃப்சிகளின் கடன்களின் மீதும் சந்தேகத்தை கிளப்புகிறது.
ஐஎல் அண்ட் எஃப் எஸ் விவகாரத்தில் தற்போதைய உடனடி பாதிப்பு மியூச்சுவல் பண்ட் முதலீடுகளுக்குத்தான். பண்ட் நிறுவனங்கள் இதன் கடன் பத்திரங்களில் அதிக முதலீடு செய்திருப்பதால் அவை வீழ்ச்சியடைந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ``ஐஎல் அண்ட் எஃப் எஸ் சுதந்திரமாகச் செயல்படுகிறது. அது தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும், அரசு எதுவும் செய்யத் தேவையில்லை’’ என பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் கூறியுள்ளார். ஆனால், ஐஎல் அண்ட் எஃப் எஸ்-ஐ ஏதோ ஒரு சாதாரண தனியார் நிறுவனத்தைப் போல அணுக முடியாது என்று ரிசர்வ வங்கி இதனை “Systemically important" என்று வகைப்படுத்தியுள்ளது.
எனவே, திவால் சட்ட நடைமுறைகளின் மூலம் அல்லாமல் ‘ரிஸ்க் மேனேஜ்மென்ட்’ உள்ளிட்ட ஆக்கபூர்வமான வழிகளில் தீர்வு காணப்பட வேண்டும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
கடந்த சனிக்கிழமை ஐஎல் அண்ட் எஃப் எஸ் தனது நிதி நெருக்கடியைச் சமாளிக்க ரூ. 4,500 கோடி மதிப்புக்கு உரிமைப் பங்குகள் வெளியிடுவதாக அறிவித்தது. பங்குதாரர்களான உள்ள எல்ஐசி, ஓரிக்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த உரிமைப் பங்குகளை வாங்குவதாகத் தெரிவித்துள்ளன. ஆனால், இது தற்காலிக தீர்வாக மட்டுமே இருக்கும்.
இந்நிறுவனம் நெருக்கடியிலிருந்து வெளிக்கொண்டுவரப்படாவிட்டால் உட்கட்டமைப்பு, இந்தியப் பொருளாதாரம், வங்கித்துறை, முதலீட்டுச் சந்தை ஆகியவற்றின் சிக்கல்கள் தீர்க்க முடியாத நெருக்கடியை சந்திக்கலாம்.
- saravanan.j@thehindutamil.co.in