வணிக வீதி

அலசல்: இனியேனும் ஆதார் குழப்பம் தீருமா?

செய்திப்பிரிவு

இந்தியாவில் ஆதார் அடையாளத்தை அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பினை அளித்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில், அரசியல் சட்டப்படி ஆதார் சரியானது தான் என்று தீர்ப்பளித்தாலும் அதன் பயன்பாடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

அரசின் அனைத்து திட்டங்களுக்கும், சலுகைகளுக்கும் ஆதார் கட்டாயம் என வலியுறுத்தப்பட்டதை எதிர்த்து இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் வழக்கு தொடரப்பட்டன. தவிர பான் எண், வங்கிக் கணக்கு, மொபைல் எண் போன்றவற்றுக்கும் இணைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இவற்றை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, உச்ச நீதிமன்றம்  விசாரித்து வந்தது.

பல்வேறு நிலைகளைத் தாண்டி கடைசியில்  உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.  கடந்த வாரத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்ளிட்ட நான்கு நீதிபதிகள் ஒருமித்த கருத்தையும், நீதிபதி சந்திரா சூட் மாறுபட்ட கருத்தையும் தெரிவித்துள்ளனர். எனினும் ஆதார் அடையாளத்தை அரசு பெறுவதற்கு எந்த தடையுமில்லை என்பதுதான் தீர்ப்பின் முடிவு.

எனினும் நீதிபதி சந்திரா சூட் தனது தீர்ப்பில், ஆதார் இல்லாமல் இந்தியாவில் தற்போது வாழமுடியாது என்ற சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்றத்துக்குச் சட்டம் இயற்ற உரிமை இருப்பதுபோல் மக்களின் தகவல்களைப் பாதுகாக்கவும் உரிமை இருக்கிறது. அவ்வாறு பாதுகாக்கத் தவறினால் அது பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என கடுமையாக  விமர்சித்துள்ளார்.

 செல்போன் எண்களுடன் ஆதாரை இணைத்தது தவறு. இது தனிமனித சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் உருவாக்கக்கூடியது.  செல்போன் நிறுவனங்கள் மூலம் தனிமனித விவரங்கள் திருடுபோக வாய்ப்புகள் உள்ளன. தனி மனித உரிமை, தகவல் சுதந்திரம் உள்ளிட்டவற்றை மீறுவதாக ஆதார் உள்ளது.  தனிமனித விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆதார் ஆணையத்துக்கு உள்ளது. ஆனால், ஆதார் ஆணையம் அப்படிப் பாதுகாப்பதுபோல் தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார்.

அரசின் திட்டங்கள், மானிய உதவிகள் உரிய பயனாளிகளை சென்றடைவதற்கு ஆதார் அடையாளத்தை பயன்படுத்தலாம். ஆனால் ஆதார் அடையாளம் இல்லை என்பதால் அரசின் சலுகைகளை மறுக்கக்கூடாது என அரசுக்கு உத்தரவிட்டிருப்பதுடன்,  ஆதார் அடையாளத்தை நிறைவேற்றும் யுஐடிஏஐ அமைப்புக்கும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

 தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற ஆதார் விவரங்களை அழிக்க வேண்டும் என்றும் நீதிபதி ஒய்.வி. சந்திர சூட் கூறியுள்ளார்.

அனைத்து தேவைகளுக்கும் ஆதார் கேட்பதை கட்டாயமாக்க முடியாது. அதன் அடிப்படையில் உரிமைகள் மறுக்கக்கூடாது. முக்கியமாக தனியார் நிறுவனங்களிடம் மக்களின் விவரங்கள் செல்லக்கூடாது என்பதுதான் தீர்ப்பின் சாரம்.  10 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கிற்கு தற்போது உச்ச நீதிமன்றம் தீர்வு அளித்துள்ளது. வரவேற்க வேண்டிய தீர்ப்பு.

SCROLL FOR NEXT