வணிக வீதி

சபாஷ் சாணக்கியா: தொடர்பு எல்லைக்கு உள்ளே...

சோம.வீரப்பன்

திருக்குறளில் நட்பு பற்றிய குறட்பாக்கள் எத்தனை தெரியுமா?  நட்பு, நட்பு ஆராய்தல், பழமை (நீண்ட நாள் நண்பரின் பிழைகளைப் பொறுத்தல்), தீ நட்பு, கூடாநட்பு என ஐந்து அதிகாரங்கள். அதாவது 50 குறள்கள்!

இவற்றில் நல்ல நண்பர்களின் குணங்களைக் காட்டும் வள்ளுவர் , நட்பிற்குத் தவிர்க்க வேண்டியவர்களைப் பற்றியெல்லாம் தனியாக விவரிக்கிறார். இது தவிர, சிற்றினஞ் சேராமை, பெரியாரைத் துணைக்கோடல் என இரு அதிகாரங்களில் 20 குறட்பாக்கள் வழியாக, யார்  யாருடன்  தொடர்பே கூடாது, யார் யாரைத் தேடிப் போய் சேர்ந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் கூட  எடுத்து சொல்கிறார்!

வரவு செலவு கணக்குப் பார்த்து நட்பு கொண்டாடுபவனை  விலை மாதர்களுக்கும், திருடர்களுக்கும் சமம் என்கிறார் அவர். நண்பனுக்கு அவசர காலத்தில் உதவாதவனை , போர்க்களத்தில் தன் மேல் அமர்ந்துள்ள வீரனை, கீழே தள்ளி விட்டு ஓடும் பயிற்சியில்லாத குதிரைக்கு ஒப்பிடுகிறார்.

ஐயா, வள்ளுவருக்கு ஏன் இவ்வளவு கோபம்? நட்பிற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? பொய்யா மொழிப்புலவருக்குத் தெரியாதா என்ன ? மனிதனை ஆளாக்குவதும், சீரழிப்பதும் அவனது சேர்க்கை தானே?அதனால் தானே ‘சேரிடம் அறிந்து சேர்' என்றாள் ஔவைப் பாட்டி!

இக்காலத்திலும், நாம் நல்லவன் என நினைக்கும் ஒருவன் சரியாக நடந்து கொள்ளாதிருந்தால் ‘அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. அதனால் தான் இப்படி' எனப்பலர் சொல்லக் கேட்டு இருப்பீர்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த மைக்கேல் மதன காமராஜன் திரைப்படம் ஞாபகம் இருக்கிறதா? ஒரு முழுநீள நகைச்சுவைப் படம் என்பதால், அடிக்கடி தொலைக்காட்சியில் ஒளிபரப்புவார்கள். பார்த்து இருப்பீர்கள். ரசித்திருப்பீர்கள்.

கமல்ஹாசன், இப்படத்தில், திருடன் மைக்கேல், தொழிலதிபர் மதனகோபால், சமையல்காரன் காமேஸ்வரன் மற்றும் தீயணைப்பு வீரர் ராஜு என நான்கு வேடங்களில் நடித்து இருப்பார். ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளாக இருந்தாலும், வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்க்கப் படுவதால், அந்த நால்வரின்  குணங்களும் மிகவும் வித்தியாசப்படும்.

மைக்கேல் எதற்கும் துணிந்த திருடனாகவும், மதனகோபால் படு ஸ்டைலான மேல் தட்டுப் பணக்காரராகவும், காமேஸ்வரன் பாலக்காட்டுத் தமிழ் பேசும் அப்பாவி  சமையற்காரனாகவும், ராஜு மெட்ராஸ் தமிழ் பேசும் துறுதுறுப்பான இளைஞராகவும் சித்தரிக்கப் பட்டு இருப்பார்கள்.

அதாவது அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலை அப்படி! 1970களில் வெளிவந்து , மாபெரும் வெற்றி கண்டு, இந்தி மசாலாப் படங்களுக்கு வழியமைத்த 'யாதோங் கி பராத்'  திரைப்படத்திலும் இதே போலத் தான்!  ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று குழந்தைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வளர்வதால், அவர்களது குணாதிசயங்கள் மாறுபடும். எம்ஜிஆரின் ‘நாளை நமதே ' இதைத் தழுவி எடுக்கப்பட்டது தான்.

இது மாதிரி பல திரைப்படங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. இவற்றின் திரைக்கதைகளில் ஓர் அடிப்படை உண்மை கையாளப்பட்டுள்ளது. வளரும் சூழ்நிலை சரியில்லை என்றால், வளர்ப்பு சரியாக இல்லாவிட்டால், வளரும் குழந்தையின் குணமும் சரியாக இருக்காது! திருடர்களுடன் வளர்பவன் திருடுவதைச் சரியென்றே நினைப்பான்.கொலைகாரர் கூட்டத்தில், கொல்லத் தயங்குபவன் பயந்தாங்கொள்ளி!

எனவே தான், பல பெற்றோர்கள், தம்  குழந்தைகள், சிறுவயது முதலே பண்பாளர்களுடன் பழகவேண்டும், நல்ல பழக்க வழக்கங்கள் வர வேண்டுமெனக் கவலைப்படுகின்றனர். அதற்காக அதிகச் செலவானாலும், தொலைதூரமாக இருந்தாலும் பரவாயில்லையென்று, சிறந்த பள்ளிக்கூடங்களைத் தேடித் தம் பிள்ளைகளைப் படிக்க வைக்க முயலுகின்றனர்.

ஹார்ப்பர் லீ எனும் அமெரிக்க நாவலாசிரியை சொல்வது போல, நம்மால் நமது உறவினர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது, ஆனால் நண்பர்கள் விஷயத்தில் அந்தக் கட்டாயம் இல்லையே!  நாம் யார் அருகில் இருக்கிறோம், நம்மைச் சுற்றி யார் இருக்கிறார்கள்,நாம் யாருடன் தொடர்பு வைத்துக் கொள்கிறோம் என்பவை எல்லாம் முக்கியமானவை, நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவை, இருக்கக் கூடியவை!

`அந்த ஆள் சங்காத்தமே வேண்டாம்' எனச் சில பேரைப் பற்றிச் சொல்வார்கள். சரி தானே? எதுக்குக் கொஞ்சமாகப் பழகணும், அப்புறம் அதிகமாகக் கஷ்டப்படணும்?அலுவலகத்தில் 40 பேர் உல்லாசப்பயணம் செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள். பேருந்தில் யார் அருகில் அமர்வீர்கள்? சிலரைக் கண்டு விலகி ஓடுவீர்கள் இல்லையா? கொஞ்ச நேரம் தானே என்று நினைத்துக் கொண்டால் துன்பம் தொடருமே?

குடித்து விட்டு பலவிதமாகக் கும்மாளம் போடுபவர்களுடன் ஒரே அறையில் தங்கினால் நீங்கள் தப்ப முடியுமா?  கம்பெனி கொடுத்து தொடங்கியவர்கள் தானே பலரும்? ‘நிலைக் கண்ணாடி எதிர் நிற்பவரின் முகத்தைக் காட்டும். அது போலவே. ஒருவரின் நண்பர்கள் அவரது குணத்தைப் பிரதிபலித்து, அவரது மனப் போக்கை வெளிப்படுத்துவார்கள்.

எனவே நட்பு வட்டாரத்தையும் தொடர்புகளையும் உண்டாக்குவதில் எச்சரிக்கை தேவை 'என்கிறார் சாணக்கியர்.

- somaiah.veerappan@gmail.com

SCROLL FOR NEXT