வணிக வீதி

ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு ‘ரெட் அலர்ட்’

செய்திப்பிரிவு

இன்று உலக நாடுகள் அனைத்துமே பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளைச் சந்தித்துவருவதால், ஆரோக்கியமான வளர்ச்சி குறித்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விவாதத்தில் மிக முக்கியமான இடத்தில் ஆட்டோமொபைல் துறையும் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறை பொருளாதார வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு முக்கியமானதோ அந்த அளவுக்குச் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. 

இந்தியாவில் ஆண்டுக்கு தற்போது 2.5 கோடி அளவில் வாகனங்கள் உற்பத்தி ஆகின்றன. இது 2020ல் 3.5 கோடியாக இருக்குமென்று கூறப்படுகிறது. உற்பத்தி ஒவ்வோராண்டுக்கும் அதிகரிக்கும் அதே சமயம் பழைய வாகனங்களின் எண்ணிக்கையும் கணிக்க முடியாத அளவுக்கு அதிகரித்து வெறும் குப்பையாகக் குவிந்துவருகிறது. பயன்படுத்தாத நிலையில், விபத்துக்குள்ளான வகையில், காவல்துறையின் கட்டுப்பாட்டில் என அவற்றின் அளவு அதிகரித்து வருகிறது. விளைவு வளங்கள் பற்றாக்குறையும், சுற்றுச்சூழல் கேடும் தான்.

ஆட்டோமொபைல் உற்பத்தியில் வளங்கள், ஆற்றல், முதலீடு என அனைத்துமே பெருமளவில் செவிடப்படுகின்றன. உலகளவில் சராசரியாக ஒரு ஆண்டுக்கு ஒரு நபர் 16 டன் இயற்கை வளங்களை நுகர்கிறோம். இந்தியாவில் சராசரியாக ஆண்டுக்கு ஒரு நபர் 4 டன் அளவிலான வளங்களைப் பயன்படுத்துகிறோம்.

ஆட்டோமொபைல் வாகனங்களை ரீசைக்கிள் செய்வதன் மூலம், பெருமளவு வளங்களும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இதுகுறித்து இந்திய கப்பற் படையிலிருந்து ஓய்வுபெற்ற கேப்டன் என்.எஸ். மோகன் ராம் “Recycling End of Life Vehicles" என்ற புத்தகத்தில் விரிவாகக் குறிப்பிடுகிறார். ஆட்டோமொபைல் துறை குறித்தும், வெளிநாடுகளில் வாகனங்கள் ரீசைக்கிள் செய்யப்படுவது குறித்தும், அவற்றின் பலன் குறித்தும், இது இந்தியாவில் எப்படி கையாளப்படுகிறது என்பது குறித்தும் அலசுகிறார்.

mohan ramjpg என்.எஸ். மோகன் ராம்

ஒரு நான்கு சக்கர வாகனத்தில் 70 சதவீதம் ஸ்டீல் உள்ளது. ஒரு டன் ஸ்டீலை ரீசைக்கிள் மூலம் பாதுகாப்பதால் 1200 கிலோ இரும்புத் தாது, 500 கிலோ நிலக்கரி, 20 கிலோ சுண்ணாம்புக்கல் ஆகியவற்றை சேமிக்க முடியும். அதேபோல் ஒரு காரில் 7-8% அலுமினியம் இருக்கிறது. இதை ரீசைக்கிள் செய்வதன் மூலம் 95 சதவீதம் ஆற்றலை மிச்சப்படுத்தலாம். இப்படி ரீசைக்கிள் செய்வதன் மூலம், உற்பத்திக்குப் புதிதாக வளங்கள் பயன்படுத்துவது கணிசமாக குறையும். அதேசமயம் சுற்றுச்சூழல் மாசுபாடும் தடுக்கப்படும். ஏனெனில் வாகனங்களில் இயற்கைக்குக் கேடு விளைவிக்கும் திரவங்கள் அதிகம் உள்ளன.

பெரிய பெரிய கட்டிடங்கள், பாலங்கள் போல அல்லாமல், ஆட்டோமொபைல் வாகனங்களை எளிதில் ரீசைக்கிள் செய்ய முடியும். இந்தியாவின் தேசிய பருவநிலை மாற்றத்துக்கான செயல் திட்டத்தில் ஆட்டோமொபைல் ரீசைக்கிள் முக்கியமான முன்னெடுப்பாக உள்ளது. ஆனால், வாகனங்கள் ரீசைக்கிள் செய்யப்படுவது இன்னும் இங்கு ஆக்கபூர்வமான வகையில் செயல்படுத்தப்படவில்லை. சில இடங்களில் ரீசைக்கிள் செய்யப்பட்டாலும் அவை இயற்கையைப் பாதிக்காத வகையிலான தொழில்நுட்பத்திலும் தரத்திலும் செய்யப்படுவதில்லை.

இந்த வகையில் வளர்ந்த நாடுகளிடமிருந்து இந்தியா போன்ற வளரும் நாடுகள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் வாகனங்கள் ரீசைக்கிள் செய்யப்படுவதை வருமானம் ஈட்டும், வேலைவாய்ப்பு தரும் ஒரு முக்கியமான துறையாக அரசு கட்டமைத்திருக்கிறது. அதற்கென சட்டங்கள், விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. 

பழைய வாகனங்கள், ஸ்க்ராப்களை சேகரிப்பதிலிருந்து அவற்றை டிஸ்மாண்டில் செய்து, மறுபயன்பாட்டுக்குரிய பகுதிகளைப் பிரிப்பது, உலோகங்களைப் பிரிப்பது என பல்வேறு வகைகளிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.

இந்தியாவும் இதில் தீவிரமாகக் களமிறங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், எதிர்காலத்தில் சந்திக்கவிருக்கும் வளங்கள் பற்றாக்குறையைச் சமாளிக்கவும் இது மிகவும் உதவியாக இருக்கும். வாகன உற்பத்தியாளர், உரிமையாளர், அரசு, மற்றும் ரீசைக்கிள் நிறுவனம் என ஒவ்வொரு தரப்பினரும் இந்த விஷயத்தில் இணைந்து ஈடுபாட்டோடு செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம்.

SCROLL FOR NEXT