புதிய சொகுசு கார்களின் விற்பனையை விட உபயோகப்படுத்தப்பட்ட`செகன்ஹேண்ட்’ சொகுசு கார்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் செகன்ட் ஹேண்ட் சொகுசு கார்களின் விற்பனை இருமடங்கு உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டில் புதிய ரக சொகுசு கார்களின் விற்பனை 12 சதவீதமாக இருந்தது. ஆனால் செகன்ட் ஹேண்ட் கார்களின் விற்பனை 22 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புதிய ரக சொகுசு காரான ஸ்கோடா சூபர்ப் காரை வாங்குவதை விட 3 ஆண்டு பழைய மாடல் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மாடல் காரை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக உபயோகப்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமே 12 ஆயிரம் செகன்ட்ஹேண்ட் கார்களை விற்பனை செய்துள்ளது. பொதுவாக இத்தகைய கார்களின் விலை ரூ. 15 லட்சத்தில் தொடங்குகிறது. இந்த விலைக்கு மிகவும் உயர் தரத்திலான செடான் காரைத்தான் வாங்கமுடியும். ஆனால் வாடிக்கையாளர்கள் சொகுசு காரை அது உபயோகப்படுத்தப்பட்டதாயிருந்தாலும் வாங்குவதற்கு தயங்குவதில்லை.
புணே மற்றும் கோல்ஹாபூரிலிருந்து மும்பைக்கு காரில் வரும் வர்த்தகர்கள் பெரும்பாலும் சொகுசு காரில் வந்து செல்வதையே விரும்புகின்றனர். இவர்களின் தேர்வும் உபயோகப்படுத்திய கார்களாகவே இருக்கின்றன. இதுபோன்ற உபயோகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் பஞ்சாப், ஜெய்ப்பூர், சண்டீகர், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் அதிகம் புழங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள என்சிஆர் பிராந்தியத்தில் புதிய ரக சொகுசு கார்களுக்கான தேவை 40 சதவீத அளவுக்கு அதிகரித்துள்ளது.
தங்களது பட்ஜெட்டிற்குள் சொகுசு காரை வாங்க விரும்புவோர் பெரும்பாலும் மெர்சிடஸ் பென்ஸ் காரை தேர்வு செய்வதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ரோலண்ட் ஃபோல்கர் தெரிவித்துள்ளார்.
மூன்று ஆண்டு பழமையான கார் ரூ. 15 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையான விலையில் கிடைப்பதால் புதிய காரை வாங்குவதை விட இத்தகைய கார்களை தேர்வு செய்வது சிறந்ததாக இருக்கும் என்ற கருத்து மேலோங்கியிருப்பதும் ஒரு காரணம் என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
சொகுசுக் கார்களின் விலை ரூ. 35 லட்சம் முதல் ரூ. 1.20 கோடி வரை உள்ளன. இவற்றின் தேய்மான மதிப்பீடு 20 சதவீதம் என்று வைத்துக் கொண்டால் முதல் இரண்டு ஆண்டுகள் பழைய வாகனங்கள் இதைவிட குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன. அதுவும் வாடிக்கையாளர்களுக்கு சாதகமாக உள்ள விஷயம்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் தற்போது செகன்ட் ஹேண்ட் கார் சந்தை விற்பனை வளர்ச்சியடைந்து வருகிறது. ஒரு புதிய கார் விற்பனையாகும் அதே வேளையில் 3 செகன்ட் ஹேண்ட் கார்கள் விற்பனையாவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஒரு புதிய கார் விற்பனையாகும் நேரத்தில் 2 உபயோகப்படுத்தப்பட்ட சொகுசு கார்கள் விற்பனையாவதால் இங்கு செகன்ட் ஹேண்ட் விற்பனை சந்தை விரைவான வளர்ச்சியை எட்டி வருகிறது.