வணிக வீதி

புதிய மாடல்கள்: ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகம்

செய்திப்பிரிவு

மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு புதிய மாடல்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

125 சிசி திறன் கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. அத்துடன் எக்ஸ்ட்ரீம் 200ஆர் மாடல் மோட்டார் சைக்கிளையும் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் பருவ மழை சீராக இருப்பதால் பண்டிகைக் காலத்தில் விற்பனை அதிகமாக இருக்கும் என்று நிறுவனம் உறுதியாக நம்புகிறது. இந்த சமயத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் நோக்கில் புதிதாக இரண்டு வாகனங்களை அறிமுகம் செய்யப் போவதாக நிறுவனத்தின் தலைவர் பவன் முன்ஜால் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மாதத்தில் ஒன்றும், அக்டோபரில் ஒன்றும் என அடுத்தடுத்து அறிமுகம் செய்யப் போவதாக அவர் கூறினார்.

 இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் இந்நிறுவனம் 20 லட்சம் மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் தற்போது 2 லட்சம் கூடுதலாக விற்பனையாகியுள்ளது.

பேட்டரி வாகனங்கள் குறித்த ஆராய்ச்சியில் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், உரிய சமயத்தில் பேட்டரி வாகனங்களை நிறுவனம் அறிமுகம் செய்யும் என்றார் முன்ஜால்.

எக்ஸ்ட்ரீம் 200 ஆர் மோட்டார் சைக்கிள் ஏற்கெனவே வட கிழக்கு மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பண்டிகைக் காலத்தில் தேசிய அளவில் அனைத்து மாநிலங்களிலும் கிடைக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இது தவிர இந்த நிதி ஆண்டுக்குள் எக்ஸ்பல்ஸ் 200 அட்வெஞ்சர் மோட்டார் சைக்கிளையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது. எக்ஸ்பல்ஸ் மோட்டார் சைக்கிள் மற்றும் 125 சிசி ஸ்கூட்டர் ஆகிய இரண்டும் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ-வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT