உங்களது குடும்ப உறுப்பினரை அறுவை சிகிச்சைக்காகவோ அல்லது உள் நோயாளியாகவோ மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடும் இக்கட்டான சூழலின் இறுதியில், உங்களது காப்பீட்டு நிறுவனம் மருத்துவ செலவுக்கான தொகையைத் தர தாமதம் செய்வது அல்லது தொகையைத் தர மறுப்பது போன்ற நிகழ்வுகள் நடைபெறலாம். மருத்துவ செலவுக்கான தொகையை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெறும் நடைமுறையை எளிதாக்குவதற்கு நீங்கள் சில வழிமுறைகளைக் கையாளவேண்டும்.
முன்னரே ஏற்பட்ட நோய் மற்றும் வாழ்வியல் பழக்கவழக்கங்களை முறையாக தெரிவிக்காமல் இருப்பது தொகையைத் திரும்பப் பெறுவதில் சிக்கல்களை உருவாக்கும். உடல்நல காப்பீட்டு திட்டத்துக்கு விண்ணப்பிக்கும்போதே உங்களது உடல்நலம் குறித்த அனைத்து தகவல்களையும் தெளிவாக தெரிவித்துவிடவேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக புகை பிடிப்பவர் அல்லது மது அருந்துபவராக இருந்தால் அதுபற்றிய தகவல்களையும் தெரிவிக்கவேண்டும்.
தற்பொழுது உங்களது உடல்நிலை எப்படி இருக்கிறது, ஏதேனும் நோய்கள் இருக்கிறதா போன்ற தகவல்களையும் அளிக்கவேண்டும். எடுத்துக்காட்டாக, சர்க்கரை அளவு, உயர் ரத்த அழுத்தம், இதயத்தின் நிலை மற்றும் தீவிர நோய்களுக்கு முன்னர் ஆட்பட்டது அல்லது அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டது போன்ற தகவல்களையும் தெரிவிக்கவேண்டும்.
இந்தத் தகவல்களை நீங்கள் முறையாக தெரிவித்தால், இந்த தகவல்களுக்கேற்ப உங்கள் பிரீமியம் தொகையை காப்பீடு அளிக்கும் நிறுவனம் முடிவுசெய்யும். மருத்துவ செலவுகளை திருப்பி அளிக்கமுடியாது என காப்பீட்டு நிறுவனங்கள் மறுப்பது இதன்மூலம் குறையும்.
பணம் அளிக்காமல் சிகிச்சை
உங்களது குடும்ப உறுப்பினரின் அறுவை சிகிச்சை முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்றாக இருந்தால் எந்த பணமும் அளிக்காமல் அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ள மருத்துவமனைகளை கண்டறியுங்கள்.
அறுவை சிகிச்சை குறித்த விவரங்களை குறைந்தபட்சம் 5 முதல் 7 நாட்களுக்குள் காப்பீட்டு நிறுவனத்துக்கு தெரியப்படுத்துங்கள். இதன்மூலம் குறிப்பிட்ட நோய்க்கு காப்பீட்டின் மூலம் பெறப்படும் தொகையைத் தவிர, மேலும் அதிகபட்ச தொகை தேவைப்படுமா என்பதை அறிந்துகொள்ள முடியும்.
திட்டமிடாமல் திடீரென அறுவை சிகிச்சை செய்துகொள்ளவேண்டி இருந்தாலும் முடிந்த அளவுக்கு நீங்கள் தயாராக இருக்கவேண்டும். காப்பீட்டு நிறுவனத்தின் சலுகை கிடைக்கும் மருத்துவமனைகளின் பட்டியலையும், காப்பீட்டு அட்டையையும் எப்பொழுதும் உடன் வைத்திருப்பது நல்லது. இதுபோன்ற திட்டமிடாத மற்றும் அவசர சிகிச்சை காலங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் காப்பீட்டு நிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
விழிப்புணர்வு மற்றும் ஆவணமாக்கல் சில குறிப்பிட்ட நோய்களுக்கான செலவை காப்பீடு எடுத்த எத்தனை நாட்களுக்குப் பிறகு காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பெற முடியும் போன்ற தகவல்களை பாலிசிதாரர் தெரிந்துவைத்திருக்க வேண்டும். அறைக்கான செலவு மற்றும் பிற செலவுகளுக்கு அதிகபட்சமாக எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதையும் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். சிகிச்சை முடிந்ததும், சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் மருத்துவமனையிலிருந்து பெறவேண்டும்.
டிஸ்சார்ஜ் தகவல்கள், மருத்துவரின் பரிந்துரைகள், மருந்தக ரசீதுகள், மருத்துவ சோதனைகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் மருத்துவமனையிடமிருந்து பெறப்படவேண்டும். ஒருவேளை காப்பீட்டு நிறுவனம் சலுகை அளிக்கும் மருத்துவமனையில், பணம் எதையும் அளிக்காமல் சிகிச்சை பெற்றிருந்தால் இந்த ஆவணங்கள் மருத்துவமனை தரப்பிலிருந்து காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுவிடும்.
இருப்பினும் இந்த ஆவணங்களின் நகலை நீங்கள் பெற்றுக்கொள்வது நல்லது. சரியான ஆவணங்களை சமர்ப்பித்தபின்பு 30 நாட்களுக்குள் மருத்துவ தேவைகளுக்கு செலவழிக்கப்பட்ட தொகை காப்பீட்டு நிறுவனங்களால் திருப்பி அளிக்கப்படவேண்டும் என்பது காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளில் ஒன்றாகும்.
காப்பீட்டை புதுப்பித்தல்
நோயால் பாதிக்கப்பட்டவர் மூத்த குடிமக்களாக இருக்கும்பட்சத்தில் செலவு செய்த முழுத் தொகையும் காப்பீடு வழியாக உங்களுக்கு கிடைக்காமல் போகலாம். எனவே அறுவை சிகிச்சை அல்லது பிற சிகிச்சைக்கு தேவைப்படும் தொகையில் 10-15 சதவீதம் தொகையை கையிருப்பு வைத்துக்கொள்வது நல்லது.
உங்களது உடல்நலக் காப்பீட்டை சரியான நேரத்தில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். காப்பீடு காலாவதி ஆவதற்கு ஒரு வாரம் முன்னதாக புதுப்பித்துக்கொள்வது நல்லது. காப்பீட்டு காலம் முடிந்து ஒரு நாள் கடந்திருந்தாலும் செலவு செய்த தொகை உங்களுக்குத் திரும்பக் கிடைக்காது. உங்களது காப்பீடு எப்போது காலாவதியாகும் என்கிற தகவலை தானியங்கி முறையில் நினைவூட்டும் வகையில் மொபைலில் பதிவு செய்து வைத்துக்கொள்வதன் மூலம் இந்த சிக்கலைத் தீர்க்கலாம்
- venkatasubramanian.k@thehindu.co.in