வணிக வீதி

பெண்களுக்கு சலுகை அளிக்கும் டொயோடா பயிற்சி பள்ளி

செய்திப்பிரிவு

வாகன உற்பத்தி நிறுவனங்கள் காலத்துக்கு ஏற்ப தங்களது சேவைகளை விரிவுபடுத்துவதை வழக்கமாக வைத்துள்ளன. விற்பனைக்கு பிறகான சேவைகளை வீட்டிற்கே வந்து அளிப்பது முதல் ஆப்ஸ் மூலமான  ஆலோசனைகள் வரை பலவித சேவைகள் வாகன உரிமையாளர்களுக்குக் கிடைக்கின்றன. அந்த வகையில் டொயோடா கார் நிறுவனம் தனது சேவையை விரிவாக்கும் வகையில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தங்களது டீலர்கள் மூலம் இந்த பள்ளிகளை டொயோடா நடத்தி வருகிறது. சென்னையில் ஹர்ஷா டொயோடா நிறுவனம் இந்த பள்ளியை தொடங்கியுள்ளது.

பாதுகாப்பான ஓட்டுநர் - பாதுகாப்பான பயணம் என்கிற முழக்கத்தினை முன்வைத்து இந்த பயிற்சி பள்ளிகளை டொயோடா தொடங்கியுள்ளது. ஓட்டுநர் பயிற்சி அளிப்பதில் சர்வதேச தரத்தினை இந்த பயிற்சி பள்ளிகள் அளிக்கும்.

குறிப்பாக போக்குவரத்து ஒழுங்கு, சாலை விதிகளை மதிப்பது, சாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் போன்றவற்றில் எந்த விதமான சமரசமும் இல்லாமல் பயிற்சி அளிக்கும் விதமாக இதனை வடிவமைத்துள்ளது.

போக்குவரத்து மேலாண்மை, விதிகள் மற்றும் ஒழுக்கம்,  பாதுகாப்பான மற்றும் சரியான ஓட்டுநர் முறைகள், சாலைக்குச் செல்வதற்கு முன்னால் உண்மையான வாகனம் ஓட்டும் அனுபவத்தை வழங்கும் சிமுலேஷன் பயிற்சி, சாலையில் நடைமுறை ஓட்டும் பயிற்சி, பல்வேறு சாலை மற்றும் காலநிலை நிலைமைகளில் ஓட்டுவது போன்றவையும் இந்த பயிற்சியில் அடக்கம்.

உங்கள் காரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்கிற வகையில் கார்களின்  அடிப்படை பராமரிப்பு மற்றும் பழுது நீக்குதல்,  அவசர நேரத்தில் கையாளுதல் போன்றவற்றையும் வழங்குகிறது.

சிமுலேஷன் பயிற்சியில் ஒரே இடத்தில் நிற்கும் மாதிரி காரில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற வருபவர்கள் இதிலேயே ஓட்டும் முறைகளை முழுமையாக கற்றுக் கொள்ள முடியும். இந்தியாவில் கார் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஊருக்கு ஊர் இருந்தாலும், சிமுலேஷன் பயிற்சி என்கிற வசதி சிறிய பயிற்சி பள்ளிகளில் இருப்பதில்லை. அதுபோல கார்களின் இன்ஜின்கள் செயல்படும் விதத்தை செயல்முறையாக கற்றுத் தருகிறார்கள். இந்த கட்டமைப்புகளால் டொயோடாவின் பயிற்சி பள்ளிகள் முன்மாதிரியான பயிற்சி பள்ளியாக உள்ளன.

சென்னையில் உள்ள டொயோடா டீலர்கள் மூலம் இந்த பயிற்சிகள் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இங்கு பயிற்சி பெற கட்டணமாக ரூ.5000, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் பெண்களுக்கு 50 சதவீத சலுகையும் வழங்கப்படுகிறது. பயிற்சி பெறுபவர்களை அழைத்து வருவதற்கான வாகன வசதியும் அளிக்கப்படுகிறது.

மோட்டார் வாகன சட்டத்தில் அரசு மாற்றங்களைக் கொண்டுவர உள்ள நிலையில் பயிற்சி பள்ளிகளின் கட்டமைப்பிலும் மாற்றங்கள் அவசியமாக உள்ளன. இதனால் எதிர்காலத்தில் டொயோடாவின் பயிற்சி பள்ளிகளுக்கான தேவை அதிகரிக்க உள்ளது. பாதுகாப்பான பயணத்துக்கு இது டொயோடாவின் பங்களிப்பு.

SCROLL FOR NEXT