'அரசரின் புதிய ஆடை' எனும் கதையைச் சிறுவயதில் கேட்ட ஞாபகம் இருக்கிறதா?
ஹன்ஸ் ஆண்டர்ஸன் என்பவர் 1837ல் எழுதியது அது. தற்பொழுது விக்கிப்பீடியாவிலும் படிக்கலாம்.
தற்பெருமை மிக்க பேரரசர் ஒருவர் புது விதமான ஆடைகளை அணிவதிலும் அவற்றைப் பிறருக்குக் காட்டி மகிழ்வதிலும் மிகுந்த நாட்டம் கொண்டிருந்தாராம். அவரை ஏமாற்ற நினைத்த இரு பித்தலாட்டக்காரர்கள் அவருக்குப் புது வித ஆடை ஒன்றைத் தைத்துத் தருவதாகவும், அந்த ஆடையைப் புதிய வகைத் துணி ஒன்றினால் நெய்யப் போவதாகவும் கூறினார்களாம். அந்தத் துணி தகுதியற்றவர்கள் மற்றும் முட்டாள்களின் கண்களுக்குத் தெரியாது என்று வேறு அந்த அரசரிடம் சொல்லி வைத்தார்களாம்.
அதனை நம்பிய அரசருக்குப் புதிய “ஆடைகளை” அணிவிப்பது போலப் பாசாங்கு செய்தார்களாம். அரசருக்கும் அவரது அவையோருக்கும் ஆடைகள் புலப்படவில்லையாம். இருந்தால் தானே தெரிவதற்கு? ஆனால் ஆடை ஒன்றும் கண்ணுக்குத் தெரியவில்லை என்று சொன்னால் தம்மைத் தாமே முட்டாள்கள் என ஒத்துக் கொள்வது போல ஆகிவிடும் என்று அஞ்சிய அவர்கள் எல்லோருமே, ஆடைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவது போல நடித்தனராம் !
அந்த ”ஆடைகளை” அணிந்து கொண்டு பேரரசர் தனது குடிமக்கள் முன் ஊர்வலமாக வேறு சென்றாராம். அவரது குடிமக்களும் அவர் நிர்வாணமாகச் செல்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையாம். அனைவரும் புதிய ஆடைகள் தங்கள் கண்களுக்குத் தெரிவது போல நடித்து அவற்றை வெகுவாகப் புகழ்ந்தனராம். ஆனால் கூட்டத்திலிருந்த அறியாச் சிறு குழந்தை ஒன்று மட்டும் “ஐயையோ அரசர் நிர்வாணமாகப் போகிறாரே” என்று கத்திவிட்டதாம். அதைப் பார்த்த வேறு சிலரும் அப்படி கத்தத் தொடங்கினராம். அதைக் கேட்ட பின்னர் தான், அரசர் தான் நிர்வாணமாக இருப்பதையே உணர்ந்தாராம்.
ஐயா, இந்தக் கர்வம் வந்து விட்டால், அது கண்ணை மறைக்கும், மானம் போகும் அளவுக்குப் போய்விடும் என்பதற்கு இந்தக் கதை ஒரு நல்ல உதாரணம். சாதாரணமாகப் பணக்காரர்களுக்கு, கலைஞர்களுக்கு, ஏன் அழகாக இருப்பவர்களுக்குக் கூட, ‘தான்' எனும் எண்ணமும், தனது செல்வம் எனும் ஆணவமும், தனது திறன் எனும் திமிரும், தனது அழகு எனும் கர்வமும் வருவதைப் பார்த்து இருப்பீர்கள். பெரும்பாலோர் அப்படித்தான். ஆனால் இந்த வகையில் மிக அதிகப் போதை தருவது என்னவோ, பதவியும் அது கொடுக்கும் அதிகாரமும் தானே!
‘The Industrial-Organizational Psychologist ' எனும் பத்திரிகையில் வந்துள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையின் படி, ஆணவக்காரர்கள் தங்களை மற்றவர்களை விட புத்திசாலிகளாகவும், உயர்ந்தவர்களாகவும் எண்ணிக் கொள்வார்களாம். தங்களின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்திக் கொள்வார்களாம், தாங்கள் செய்பவைகளே சரியானவை என நினைப்பார்களாம். அடுத்துள்ளவர்களைத் தாழ்வாக உணரச் செய்வார்களாம். பொறுப்பு எதுவும் ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம். மற்றவர்களையே குறை சொல்வார்களாம்.
யார் பேச்சையும் கேட்க மாட்டார்களாம். தங்கள் பணியைச் செவ்வனே செய்ய மாட்டார்களாம். மற்றவர்களுக்கு உதவுவது அரிதாம். என்ன, எனக்குத் தெரியும் அந்த ஆளை என்கின்றீர்களா?ஆமாங்க, நாம் ஒவ்வொருவரும் நம் வாழ்க்கையில் இந்த மாதிரி இறுமாப்புக் கொண்டவர்களை அரசாங்க அலுவலகங்களில் மட்டுமில்லை, நாம் பணி செய்யும் அலுவலகங்களிலும் சந்தித்துக் கொண்டு தானே இருக்கிறோம்?
‘நான் பார்த்த வரை, வேறு எந்தக் காரணத்தைக் காட்டிலும் ஆணவத்தால் தான் மிக அதிகமான தொழிலதிபர்கள் திசை மாறித் தோற்றுப் போகிறார்கள்' என்கிறார் அமெரிக்கத் தொழிலதிபரும் எழுத்தாளருமான ஹர்வே மக்பே !
நாம் சில சமயங்களில் இந்த மாதிரி ஆணவக்காரர்கள் வெற்றி அடைவதையும் பார்க்கிறோமே என்கின்றீர்களா? அவ்வெற்றி அவர்களையும் மீறி அவர்களுக்குக் கிடைத்ததாக இருக்கும் !.
கண்ணில்லாத அணிலுக்கும் சில சமயம் பழம் கிடைத்து விடுவதைப் போல! பொருளாதாரச் சூழல் சாதகமாக இருக்கும் பொழுது வேண்டுமானால் அவர்கள் பிழைத்துக் கொண்டு விடலாம். ஆனால் சோதனையான காலம் வந்து விட்டால், தப்பிக்க மாட்டார்கள். பூச்சிகளைப் போல் விழுந்து மடிவார்கள் என்கிறார்கள் மேலாண்மை வல்லுநர்கள்.
‘இறுமாப்புப் பிடித்தவன் தன்னை மிகச்சரியானவன் என நினைத்துக் கொள்கிறான். இந்த எண்ணமே அவனை அராஜகனாக மாற்றுகிறது. பின்னர் அதுவே, நல்ல மனிதனாக இருப்பது எனும் வாழ்வின் அடிப்படைக் குறிக்கோளுக்குக் குறுக்கே நிற்கிறது ' என்கிறார் லியோ டால்ஸ்டாய்.
உண்மை தானே? ‘யான், எனது’ எனும் செருக்கு உடையவனைச் சுற்றி ஒரு 'ஆமாம்' கூட்டம் கூடி விடுமல்லவா? அவர்கள் நாட்டு நடப்புக்களை, அலுவலகத்தின் உண்மை நிலைமைகளை தலைவனின் காதுகளுக்கு எட்ட விட மாட்டார்கள். நல்ல யோசனை எதுவும் சொல்லப் பயப்படுவார்கள், சொல்லவும் மாட்டார்கள்!
`ஆணவமும் இறுமாப்பும் கொண்டவனால் நல்லாட்சியைத் தர முடியாது' எனச் சாணக்கியர் சொல்வது அரசர்களைப் போலவே அதிகாரத்தில் உள்ள அனைவருக்கும் பொருந்தும் அல்லவா?
-