உலக அளவில் பிரபலமாக விளங்கும் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களில் பெனலி பிராண்டுக்கு முக்கிய இடம் உண்டு. இத்தாலியைச் சேர்ந்த பெனலி நிறுவனம் தனது சூப்பர் பைக்குகளை இந்தியச் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஹைதராபாதில் அசெம்பிளி ஆலை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக தெலங்கானா மாநில அரசுடன் இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இரண்டு கட்டங்களாக ஆலையை அமைக்க உள்ளது. முதல் கட்டமாக 3 ஏக்கர் நிலத்தில் அசெம்பிளி யூனிட் அமைக்கப்படும். ஹைதராபாத் அருகே மெட்சல் எனுமிடத்தில் இந்த ஆலை அமைய உள்ளது.
இந்த ஆலை ஆண்டுக்கு 10 ஆயிரம் மோட்டார் சைக்கிளை அசெம்பிள் செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். இது அடுத்த இரண்டு மாதங்களில் அதாவது அக்டோபர் மாதம் முதல் செயல்படத் தொடங்கும். இரண்டாம் கட்டமாக முழுவதுமான ஆலை 20 ஏக்கர் பரப்பில் அமைய உள்ளது. இதற்கான இடத்தை நிறுவனம் தேடி வருகிறது.
இந்தியாவில் ஆதிஷ்வர் ஆட்டோ ரைட் இந்தியா என்ற நிறுவனத்துடன் பெனலி கூட்டு சேர்ந்துள்ளது. ஆதிஷ்வர் நிறுவனமானது மஹாவீர் குழும நிறுவனங்களுள் ஒன்றாகும். விற்பனை உள்ளிட்ட பணிகளை ஆதிஷ்வர் நிறுவனம் மேற்கொள்ளும். இத்தாலியிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்வது மற்றும் பிரீமியம் பைக்குகளை அப்படியே இறக்குமதி செய்வது உள்ளிட்டவற்றுக்கான அங்கீகாரத்தை ஆதீஷ்வர் நிறுவனம் பெற்றிருக்கும்.
ஆண்டுக்கு 3 ஆயிரம் மோட்டார் சைக்கிளை விற்பனை செய்ய இந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரையில் இந்நிறுவனம் 5,600 மோட்டார் சைக்கிளை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.
முழுவதுமான ஆலை அமைப்பதற்கான இடத்தையும் தெலங்கானா மாநிலத்திலேயே இந்நிறுவனம் தேடி வருகிறது.
இந்தியாவில் சாதாரண ரக மோட்டார் சைக்கிளின் விற்பனை ஆண்டுக்கு 10 சதவீத அளவுக்கு வளர்ச்சி கண்டு வருகிறது. ஆனால் சூப்பர் பைக்குகளின் சந்தை ஆண்டுக்கு 30 சதவீதம் முதல் 40 சதவீத வளர்ச்சியை எட்டி வருகிறது. தற்போது பிரீமியம் ரக பைக் சந்தையில் பெனலி 21 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவில் பிரீமியம் பைக்குகளின் விற்பனை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் ஆலை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. ஏற்கெனவே பிரிட்டனின் டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இங்கு தனது தயாரிப்புகளை களமிறக்கியுள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிளை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் பெனலி நிறுவனம் அமைக்க உள்ள அசெம்பிளி ஆலை, நிறுவனம் நிர்ணயித்துள்ள இலக்கை எட்டுவதற்கு நிச்சயம் உதவும்.