வணிக வீதி

சபாஷ் சாணக்கியா: கற்றுக்கொள்வோம்...கழுதையிடம்!

சோம.வீரப்பன்

உங்களிடம் 20 பறவைகளின் பெயர்களைச் சொல்லுங்கள் எனக் கேட்டால் உடனே சொல்லி விடுவீர்களா?

பெரும்பாலானோர்  10 பறவைகளின் பெயர்களைச் சொல்வதற்கே தடுமாறி விடுவோம். 2016-ல் எடுத்த ஒரு கணக்கின்படி, இந்தியாவில் மட்டுமே சுமார் 1,250 வகையான பறவைகள் இருக்கின்றனவாம். உலகம் முழுவதையும் எடுத்துக் கொண்டால் 9,000முதல் 10,000 விதமான பறவைகள் இருக்குமாம்.

சில பறவைகள் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிலோ  மீட்டர்கள் பறந்து இடம் பெயர்கின்றன எனக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். நம்ம வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, சைபீரியாவிலிருந்து வண்ண மூக்கு நாரைகளும் (painted storks) கனடாவிலிருந்து நீலச் சிறகிகளும் (garganeys) ஆஸ்திரேலியாவிலிருந்து சாம்பல் கூழைக்கடாக்களும்  (grey pelicans) வருகின்றன தெரியுமா?

பறவைகளிடம் உள்ள விநோதமான செயல்பாடுகளில் இந்த வலசைப் போதல் மிகவும் முக்கியமானது. ஆண்டுதோறும் தங்களது வசிப்பிடங்களில் குளிர்காலம் தொடங்கும்போது, வெப்பமான இடங்களை நோக்கி அவை இடம்பெயர்கின்றனவாம். இரை தேடல், இனப்பெருக்கம் ஆகியவற்றுக்காக ஏதுவான சூழலைத் தேடி இந்தப் பறவைகள் வலசை செல்கின்றனவாம்.

வலசை செல்வதற்கு சில வாரங்கள் முன்பு நிறைய இரையை உட்கொண்டு விட்டு, அதைக் கொழுப்பாக மாற்றி உடலில் சேமித்து வைத்துக் கொள்ளுகின்றனவாம். பின்னர் அதை ஆற்றலாக மாற்றி நீண்ட தூரம் பறக்கின்றனவாம். இப்பறவைகள் மீண்டும் மீண்டும்  ஒரே இடத்திற்கு வலசை வருகின்றன என்பதும் வியப்பானது. ஆர்டிக் ஆலா போன்ற பறவைகள் ஒரே முயற்சியில் செல்ல வேண்டிய 12,000 கிலோமீட்டர் தொலைவையும் கடக்க வல்லவைகள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

இதெல்லாம் என்ன சாதாரண முயற்சியா, செயல்பாடா? நம்மை மாதிரி , பறவைகளால் மாதத்திற்கு அரிசி பருப்பு வாங்கி கொட்டி வைத்துக் கொள்ள முடியாதில்லையா? அவ்வப்பொழுது உணவு தேடணும். பருவம் மாறினால்,வீடு, அதாங்க கூடு மாத்தணும்!  நமக்கோ ஏசி ,தொலைக்காட்சி ரிமோட்டை எழுந்து எடுப்பது கூட அல்லவா சுமையாக அலுப்பாக  இருக்கிறது?

இந்த மிருகங்கங்களின் வாழ்க்கையும் கடினமானது தானேங்க. காட்டில் வாழும் வனவிலங்குகளின் கதையே தனிங்க. தாம்  இரை தேடுவதுடன், மான் போன்ற பல மிருகங்கள் தாம் மற்ற மிருகங்கங்களுக்கு இரையாகி விடாமல் தப்பித்தும் வாழ வேண்டுமே. சரி, வீட்டு விலங்குகளான மாடு, குதிரை, கழுதை போன்றவை செய்யும் வேலைகள் கொஞ்சநஞ்சம் அல்லவே. அவைகளை வாயில்லாப் பிராணிகள் எனச் சொல்லிவிட்டு, அவை படும் கஷ்டங்களைக் கண்டு கொள்ளாமல், மென்மேலும் அவற்றிடம் வேலை வாங்குவோர் நம்மில் பலர்.

`எலும்பு உடையுமளவு களைத்திருந்தாலும் பொதி சுமக்கும் திறமை, பருவ நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் அலட்டிக் கொள்ளாத இயல்பு, எந்தச் சூழ்நிலையிலும் திருப்தியாகவே இருப்பது ஆகிய மூன்று குணங்கள் நாம் கழுதையிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை’ என்கிறார் சாணக்கியர்.

கழுதையை நாம் தாழ்வாகவே கருதுகிறோம். ஆனால் அவற்றிடமும் நாம், மனிதர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய நற்பண்புகள் மூன்று உள்ளன எனச் சாணக்கியர் சொல்வது சிந்திக்க வேண்டியது. எந்த வேலையாக இருந்தாலும் உடல் நோகுமென்று தவிர்ப்பதும், அடுத்தடுத்து சுகம் தேடுவதும், சோம்பேறியாக இருந்து காலம் தள்ளுவதுமாக இருப்பவர்களுக்கான அறிவுரை அல்லவா இது?

உலகின் பெருந்தலைவர்கள் எல்லோருமே தூக்கத்தை, ஓய்வெடுப்பதைக் குறைத்துக் கொண்டு உழைக்கும் நேரத்தைக் கூட்டிக் கொண்டவர்களே. அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த பொழுது, இரவு 11 மணிக்கு தொலைபேசி அழைப்புகள் என்பது வெள்ளை மாளிகையில் சர்வ சாதாரணமாம். இரவு 1 மணி வரை மின்னஞ்சல்கள் வருமாம். அவர் இரவு 2 மணிக்குத் தான் தூங்கச் செல்வாராம்.

அடுத்தடுத்து செய்யவேண்டியவை என நீண்ட பட்டியல் வைத்திருந்த எடிஸன் தூங்கியதும் 3, 4 மணி நேரங்கள் தானாம். `தூக்கம் என்பது நேரத்தை வீணடிப்பது, பண்டையக் குகை மனிதனிடமிருந்து வந்த பாரம்பரியம் அது’ என்கிறார் ஜேம்ஸ் மாஸ் தனது ‘Power Sleep' எனும் நூலில்.

அடுத்து, இந்தச் சிரமங்களைப் பெரிது படுத்தாமல் திருப்திபட்டுக் கொள்ளும் குணம். இருப்பதை, கிடைத்ததை வைத்துச் சமாளிப்பது; கிடைக்காததை நினைத்து ஏங்காமல் இருப்பது. `போதுமென்மனம் தான் மிகப்பெரும் செல்வம்’ என்று சொன்னது யார் தெரியுமா? நோபல் பரிசை நிறுவிய பெருஞ் செல்வந்தரான ஆல்பிரட் நோபல்!

பின்னே என்னங்க? எவ்வளவு கிடைத்தால் போதும்? எவ்வளவு இருந்தால் போதாது?

`மனத்திருப்திக்கான வழி  நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது அல்ல. அந்த  நெருப்பைச் சற்று மட்டுப்படுத்துவதே ஆகும் ' என்கிறார் ஆங்கில போதகர் தாமஸ் ஃபுல்லர். சாணக்கியர் சொல்வது போல, கழுதையிடமிருந்தாவது நாம் அந்த மூன்று நற்குணங்களையும் கற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?

-

SCROLL FOR NEXT