வணிக வீதி

கல்விக்காக கடல் கடக்கும் தலைமுறை

செய்திப்பிரிவு

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்பது பழமொழி. ஆனால் திரவியம் தேடப்போகிறார்களோ இல்லையோ கல்வியைத் தேடி ஓடுகிறது ஒரு தலைமுறை. சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தில், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கல்வி பயிலச் செல்வது அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.

2013-14-ம் ஆண்டில் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் செலவு செய்த தொகை 190 கோடி டாலர். இது 2017-18 நிதியாண்டில் 280 கோடி டாலராக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவுக்கு படிக்க வரும் அளவு குறைந்துள்ளது. குறிப்பாக 2015-16 நிதியாண்டில் 55.7 கோடி டாலராக இருந்த வெளிநாட்டு மாணவர்களின் செலவினம், 2017-18 நிதியாண்டில் 47.9 கோடி டாலராக குறைந்துள்ளது.

2014-15-ம் ஆண்டுகளில் அமெரிக்காவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,32,888 பேர். இது 2016-17 ஆண்டில் 1,86,267 ஆக உயர்ந்துள்ளது. இதுபோல ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டில் 60,000 ஆகவும், கடந்த ஆண்டில் 68,000 அதிகரித்துள்ளது.

இதுவே இந்தியாவுக்கு கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்திய மனிதவள அமைச்சகம் மக்களவையில் தெரிவித்த தகவலில் கூறியுள்ளது. 2016-ம் ஆண்டில் 37,947 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2017-ம் ஆண்டில் 36,887 ஆக குறைந்துள்ளது.

வெளிநாடுகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் மேலும் அதிகரிக்கவே செய்யும். குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குச் செல்வது அதிகமாக உள்ளது.  இதற்கு முக்கிய காரணம் விசா உள்ளிட்ட நடைமுறைகளில் மாணவர்களுக்காக சில விதிகள் தளர்த்தப்படுகின்றன. குறிப்பாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் விசா நடைமுறைகள் மாணவர்களுக்கு எளிமைப் படுத்தப்படுகின்றன. வேலைவாய்ப்புகளும் அங்கேயே கிடைக்கின்றன.

செலவு குறைவு

வெளிநாடுகளில் கிடைக்கும் தரமான கல்வி, இந்தியாவில் கல்விக்காக செலவிடும் தொகையில் வெளிநாடுகளில் படிக்கும் வாய்ப்பு, மூன்றாவதாக வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள் மாணவர்களுக்கு அளிக்கும் சலுகைகளும் முக்கிய காரணங்களாக உள்ளன. கல்வி உதவித் தொகை போன்ற சலுகைகளை முன்னதாகவே பயன்படுத்திக் கொண்டால் செலவு குறைவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இதுபோன்ற காரணங்களால் வெளிநாட்டு உயர்கல்வி நிலையங்களை இந்திய மாணவர்கள் நாடுகின்றனர். ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிடுகையில் கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இந்தியாவிலிருந்து மாணவர்களை ஈர்ப்பதில் அதிக முனைப்பு செலுத்தியுள்ளன.

இந்த நாடுகள் இந்திய மாணவர்களுக்கு சலுகை அளிப்பதற்கு மற்றொரு காரணம் இந்தியாவிலிருந்து வரும் மாணவர்கள் அந்த நாடுகளில் அதிகம் செலவு செய்கின்றனர். இது அந்த நாடுகளுக்கான மிகப் பெரிய வாய்ப்பு என்கின்றனர் கல்வித்துறை வல்லுநர்கள்.

இந்த சிக்கலை இந்தியா எதிர்கொள்ள வேண்டுமெனில், இந்தியாவிலிருந்து சர்வதேச அளவில் தரமான கல்விகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும். குறிப்பாக ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக் கழகங்கள் அதிகரிக்க வேண்டும். தரமான கல்வி இங்கேயே அளிக்கப்பட வேண்டும். வெளிநாட்டு மாணவர்களை ஈர்ப்பதற்கு மட்டுமல்ல, இந்திய மாணவர்களை தக்க வைப்பதற்கும் இந்தியா தரமான கல்வி நிறுவனங்களை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் நிற்கிறது.

இந்தியா இந்த தேவையை புரிந்து கொண்டு கல்வி நிறுவனங்களை உருவாக்குவதும், மேம்படுத்துவது மட்டுமே இந்த சிக்கலுக்கு தீர்வாக இருக்கும்.

SCROLL FOR NEXT