வணிக வீதி

என்னவாகும் புல்லட் ரயில் திட்டம்?

நீரை மகேந்திரன்

கனவு காணுங்கள் என்றார் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம். கனவு கண்டார் பிரதமர் மோடி. சாதாரண கனவல்ல. சுமார் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பிற்கான கனவு. அந்த கனவுக்கான செலவில் 80 சதவீதத்தை ஜப்பான் அளிப்பதற்கு ஏற்றுக் கொண்டது. கனவில் 20 சதவீதம்தான் இந்தியாவின் பங்கு.

கனவை செயல்படுத்த திட்டமிட்டபடி இன்னும் ஐந்து ஆண்டுகள் வேண்டும்.  என்றாலும் என்ன செய்வது? இப்போது அந்த கனவு சாத்தியமாகுமா என்பதே கேள்விக் குறியாக நிற்கிறது. பிரதமர் கண்ட கனவின் பெயர் புல்லட் ரயில் திட்டம். குஜராத்தின் அகமதாபாத்துக்கும் மும்பைக்கும் இடையேயான 508 கிலோமீட்டருக்கு புல்லட் ரயில் திட்டத்திற்கு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார்.

இந்தியாவின் முகத்தை உலக அரங்கில் மாற்றப்போகும் தொழில்நுட்பம், வேலை
வாய்ப்பு அதிகரிக்கும், வர்த்தகத்தில் பெரும் பாய்ச்சல் இருக்கும் என அரசு அறிவித்தது. ஆனால் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து இப்போது வரை எந்த நகர்வும் இல்லை. திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் உள்ளதால் பணிகள் நடைபெறவில்லை. அதனினும் முக்கியமானது இதன் காரணமாக ஜப்பான் அளிப்பதாகச் சொன்ன முதலீடும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தாமதமாகும் திட்ட செயல்கள்

இந்த திட்டத்தை அறிவித்தபோதே பல தரப்பிலிருந்தும் மாறுபட்ட கருத்துகள் எழுந்
தன. ஆனால் அரசு தரப்பிலிருந்து எதுவும் கண்டுகொள்ளப்படவில்லை. நிலைமை என்னவெனில் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்த  2018-ம் ஆண்டு நவம்பர் வரைதான் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது.

இதில் 10 சதவீதம்கூட தற்போதுவரை கையகப்படுத்தவில்லை என்பதுதான். திட்டத்துக்குத் தேவையான நிலத்தில் 0.9% வரை மட்டுமே கையகப்படுத்தியிருப்பதாக தேசிய அதிவேக ரயில் கழகம் லிமிடெட் (National High-Speed Rail Corporation Limited) குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டத்துக்காக குஜராத்தில் 350 ஹெக்டேர் நிலமும் மகாராஷ்டிராவில் 1100 ஹெக்டேர் நிலமும் மொத்தமாக 1500 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டது. இவை பெரும்பாலனவை விவசாய நிலங்கள்.

மகாராஷ்டிர மாநிலத்தில் சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பழத்தோட்டம் நிறைந்துள்ள விவசாய நிலம். இதனால் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கியுள்ளதுடன் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கியின் ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல், இந்தியாவில் நிலம் கையகப்படுத்துவதில் எந்த சிக்கலும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறினார். ஆனால் குஜராத்தில் 196 கிராமங்களும் மகாராஷ்டிராவில் 104 கிராமங்களும் புல்லட் ரயில் திட்டத்தால் பாதிக்கப்படுவதாக  வழக்கு விவரங்களில் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் மட்டும் 2500 குடும்பங்கள் வீடுகளை இழப்பார்
கள். நிலம் கையகப்படுத்துவதாக எந்த அறிவிப்பும் இதுவரை எங்களுக்கு அளிக்கவில்லை இந்த என இந்த மக்கள் சொல்கின்றனர். குஜராத்தின் வல்சாட் (Valsad) மாவட்டத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக உள்ளது. தொடர்ந்து மூன்று நாள்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளனர். இது போன்ற எதிர்ப்புகள் காரணமாக வீடுகளுக்கான இழப்பீட்டை 25 சதவீதம் உயர்த்துவதாக குஜராத் அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் புல்லட் ரயில் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தல் பணிகள் மிக மந்தமாக நடந்துவருவதால் இந்த பணியை மேற்கொண்டுள்ள ஜப்பானின் ஜிக்கா (JICA (Japan International Cooperation Agency) நிறுவனம் முதலீட்டுக்கான நிதியை நிறுத்தியுள்ளதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், புல்லட் ரயில் மட்டுமல்ல, நாடு முழுவதும் எந்த உள்கட்டமைப்பு திட்டத்துக்கும் நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் இல்லை. ஜிக்கா நிறுவனம் இந்திய அரசுடனான ஒப்பந்தப்படி ஆண்டு வாரியான முதலீட்டை 3 பில்லியன் டாலரிலிருந்து 5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

நிலம் கையகப்படுத்துவதற்கான எதிர்ப்பில் இந்த முறை முக்கிய நிறுவனமான கோத்ரெஜ் நிறுவனமும் கை கோர்த்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் விக்ரோலி என்ற இடத்தில் உள்ள 8.6 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் தங்களுக்கு 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளதுடன், மாற்று திட்டத்தினையும் முன்வைத்துள்ளது. இந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. தவிர குஜராத் விவசாய அமைப்புகள் மூலம் மேலும் ஐந்து வழக்குகள்  குஜராத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முதலீடு வரவில்லை

இந்த நிலையில்தான் ஜிக்காவின் முதலீடு நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த காலாண்டிலேயே விடுவிக்கப்படவேண்டிய தொகை இப்போதுவரை வரவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜப்பான் பிரதமர் குஜராத் வந்தபோது முதல் தவணையாக அளித்த ரூ.125 கோடிக்கு பின்னர் நிதி ஒதுக்கவில்லை என்று குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர். நிலம் கையகப்படுத்துவதில் எந்த முன்னேற்றமும் இல்லையெனில் அடுத்த கட்ட நிதி வருவது சிரமம்தான் என்கின்றனர். தவிர மத்திய மாநில அரசுகள் இணைந்து ஒதுக்க வேண்டிய நிதியும் ஒதுக்கப்படவில்லை.

திட்டம் அறிவிக்கப்பட்டபோது, கட்டமைப்பு துறை சிறப்பு திட்டங்களுக்கு (The special purpose vehicle (SPV) ஒதுக்கப்படும் நிதியிலிருந்து 500 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதற்கு பின்னர் இந்த திட்டத்துக்கான நிதி திரட்டப்படவில்லை என்கிறனர்.

ஜிக்காவின் நிதி வரவு குறித்து கூறியுள்ள குஜராத் மாநில தலைமைச் செயலாளர் ஜே.என்.சிங், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான அடுத்த கட்ட நிதி குறித்து கவனித்து வருகிறோம். எனினும் இது எங்கள் கண்காணிப்பில் நடக்கும் திட்டம் இல்லை.

எப்போது வேண்டுமானாலும் நிதி வரலாம் என்று குறிப்பிடுகிறார். ஆக திட்டத்துக்கான நிதி ஆதாரத்தில் இப்போதுவரையிலும் குழப்பம்தான்.

புல்லட் ரயில் உருவானால் இந்த 508 கிலோமீட்டர் தூரத்தை 2 மணி நேரத்துக்குள் செல்லலாம் என திட்ட அறிக்கை கூறுகிறது. ஆனால் நடைமுறையில் இரண்டு நகரங்களையும் இணைக்கும் தற்போதைய  வேக ரயில் வழித்தடத்தில் நஷ்டம்தான் என்கிறது மேற்கு ரயில்வே துறை.

பின்தங்கிய ரயில்வே

புல்லட் ரயிலுக்காக செலவிடப்படும் மொத்த தொகையைக் கணக்கிட்டால் தோராயமாக ஒரு கிலோமீட்டருக்கான கட்டமைப்பு தொகை ரூ. 216 கோடி செலவிடவேண்டும். ஆனால்  நமது வழக்கமான வேக ரயில் கட்டமைப்பை உருவாக்க ஒரு கிலோமீட்டருக்கு  25 கோடி முதல் 30 கோடி ரூபாய் போதும். இந்த மொத்த தூரத்துக்கும் புதிய பாதை அமைக்க 12,000 - 16,000 கோடி ரூபாய் செலவிட்டாலே போதும் என்கிறார் குஜராத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற  ரயில்வே பொறியாளர் அலோக் குமார்.

இதே கருத்தைதான் மெட்ரோமேன் ஸ்ரீதரனும் கூறியிருக்கிறார். பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் நமது ரயில்வே துறை 20 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது. அதை மேம்படுத்த வேண்டும். ஆனால் அதற்கு புல்லட் ரயில் தீர்வல்ல, அதில் சாமானியர்கள் பயணிக்க முடியாது.

நமது இப்போதைய தேவை ரயில்கள் நேரத்துக்கு இயங்குவதற்கான நடவடிக்கைகள், தொழில்நுட்ப ரீதியான வளர்ச்சி, சுத்தமான, நவீனமான ரயில் பெட்டிகள்தான். இந்திய ரயில்கள் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.

எல்லா கருத்துகளும் ஒரு முடிவை நோக்கி நகர்த்துகின்றன. அது, இந்தியாவுக்கு எந்த ரயில் தேவை என்பதை உணர்த்துகிறது. இருக்கும் கட்டமைப்பை மேம்படுத்துவதா அல்லது கட்டமைப்பை உருவாக்குவதற்காக புதிய சிக்கல்களை தோற்றுவிப்பதா என்பதுதான்.

புல்லட் ரயிலுக்கான ரூ.80,000 கோடி கடனுக்கு அடுத்த 15 ஆண்டுகள் இந்தியா கடனை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்பது ஜப்பானுடனான ஒப்பந்தம். ரயில்வே வளர்ச்சியில் 20 ஆண்டுகள் பின்னோக்கியுள்ளோம் என்பது நிதர்சனம்.

- maheswaran.p@thehindutamil.co.in

SCROLL FOR NEXT