வணிக வீதி

காற்று மாசை குறைக்குமா நிதி ஆயோக்-கின் பரிந்துரைகள்?

நீரை மகேந்திரன்

இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரங்களாக மாறி வருகின்றன. நல்ல காற்றுக்காக புதுடெல்லி மக்கள்தான் ஏங்குகிறார்கள் என நினைத்துக் கொண்டிருந்தால், இந்தியாவில் மேலும் பல நகரங்கள் புதுடெல்லியைவிட காற்று மாசுபாட்டில் மோசமாக உள்ளன என நிதி ஆயோக் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் காற்று மாசு தொடர்பான ஆய்வினை மேற்கொண்ட நிதி ஆயோக், `இந்தியாவின் சுவாசம்’ என்கிற ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் 10 நகரங்கள் காற்று மாசுவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்துகிறது. குறிப்பாக கான்பூர், பரீதாபாத், கயா, வாராணசி, பாட்னா நகரங்கள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன.

இதற்கடுத்து புதுடெல்லி, லக்னோ, ஆக்ரா, குர்காவ்ன், முசாபர்பூர் நகரங்கள் உள்ளன. இந்த நகரங்களுக்கும் சேர்த்து இந்தியாவில் காற்று மாசுவை குறைப்பதற்கான 15 பரிந்துரைகளை நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

உலக அளவில் புகை மாசுபாட்டின் காரணமாக ஒரு ஆண்டில் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். குறிப்பாக சுவாசம் நுரையீரல் தொடர்பான நோய்கள், கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் மக்களைத் தாக்குகின்றன, இந்தியாவை பொறுத்தவரையில் 5 சதவீதம் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரையில் அனைத்து நிலையிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பதை விளக்கியுள்ளது. குறிப்பாக இதற்கான நடவடிக்கைகளில் அனைத்து தரப்பினருக்கும் பங்கு பெற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

சுற்றுச்சூழல் தொடர்பான கொள்கைகளை சீரமைத்தல், தொழில்துறையில் கட்டுப்பாடுகள் மற்றும் மின்னுற்பத்திக்கான மாற்றுத் திட்டங்கள், புகை மாசுவை கட்டுப்படுத்துவதற்கான வர்த்தகத்தை ஊக்குவித்தல், மரங்கள் வளர்ப்பு, கழிவு மேலாண்மை, நகரங்களின் கழிவு நிர்வாகம், வீடுகளில் புகையில்லா எரிபொருள், வனத் தீயை கட்டுப்படுத்துவது, வாகன புகை கட்டுப்படுத்துவது என ஒவ்வொரு துறை சார்ந்தும், ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவற்றை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டிய அவசியமும் உள்ளது என நிதி ஆயோக் கூறியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டமைப்பு மற்றும் நிதி உதவி திட்டங்களை அறிவிக்க வேண்டும். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டும். மேலும் பொதுப் போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டு வருவதற்காக கொள்கைகளை மத்திய அரசு உருவாக்க வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களில் 15ஆண்டுகளுக்கு மேலாக உள்ள வாகனங்களை மாற்றி 2021-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவர வேண்டும்.

எலெக்ட்ரிக் பேட்டரி, சோலார் பவர் ரயில், எலெக்ட்ரிக் மோட்டார் தொழில்நுட்பங்களுக்கான ஆராய்ச்சி, அதை நகரங்களில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். புதுடெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களை குறைந்த மாசு கொண்ட மண்டலம் என அறிவிக்க வேண்டும். புகை மாசு அதிகம் உள்ள பகுதிகளில் தனியார் வாகனங்களை அனுமதிப்பதற்கு கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும். ஆனால் அதற்கு ஏற்ப பொதுப் போக்குவரத்தில் எலெக்ட்ரிக் வாகன திட்டங்களை உருவாக்க வேண்டும்.

எலெக்ட்ரிக் இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களை நிறுவனங்கள் அறிமுகம் செய்ய வேண்டும். அவற்றுக்கு மாறுவதற்கு அரசு சலுகைத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். இந்த வாகனங்களுக்கான அனுமதிகள், பதிவுகள் இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் இந்த நடவடிக்கைகளை தொடங்க வேண்டும். 2020-ம் ஆண்டுக்குள் அனைத்து பொதுப் போக்குவரத்து வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்களும் புகையில்லா வாகனமாக மாற்றப்பட வேண்டும்.

அதே நேரத்தில் தனிநபர் வாகனங்களுக்கான கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக வாகனத்துக்கான காப்பீடு, பார்க்கிங் வசதிக்கான கட்டணங்கள் போன்றவை அதிகரிக்க வேண்டும். பெரு நகரங்களில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சலுகை அளிக்க வேண்டும்.

அதிக தரம் கொண்ட நிலக்கரியை மட்டுமே மின் உற்பத்தி ஆலைகள் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் புகை அளவு குறையும். மின் உற்பத்தி நிறுவனங்கள், நிலக்கரி சுரங்கம் மற்றும் நிலக்கரி இறக்குமதி நிறுவனங்களுடன் அரசு அமைப்புகள் ஒருங்கிணைந்து இதனை மேற்கொள்ள வேண்டும். நகர்ப்புற தொழில் நிறுவனங்கள் டீசலில் இயங்கும் ஜெனரேட்டர்களை தவிர்க்க வேண்டும்.

தொழில்துறை நிறுவனங்களுக்கு காற்று மாசுக்கான குறியீடு அளித்து, அந்த நிறுவனங்களின் எரிபொருள் பயன்பாட்டினை கண்காணிக்க வேண்டும். புதிய நிறுவனங்கள் காற்று மாசு ஏற்படுத்தாத நிறுவனமாக உருவாவதை உறுதிப்படுத்த வேண்டும். கட்டுமான திட்டங்களை தொடங்கும்போதே பசுமை திட்டங்களுக்கு முயற்சிக்க வேண்டும். நகரப்பகுதிகளில் காற்றை சுத்திகரிப்பதற்கான டவர்களை உருவாக்க வேண்டும். ரெடிமேட் கான்கரீட் திட்டங்களுக்கு மாற்றமடைய வேண்டும்.

கோடைக்காலங்களில் விவசாயிகள் நிலங்களை தயார்படுத்த வைக்கோல்களை எரிக்கின்றனர். இதனால் டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா மாநிங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க வேண்டும் என்றால் விவசாயக் கழிவுகளை அதிக அளவில் கொள்முதல் செய்து அதை மறுசுழற்சி செய்ய வேண்டும்.

விவசாய கழிவு பொருட்களை மேலாண்மை செய்ய தனியார் துறையை ஊக்குவிக்க வேண்டும். கழிவுகளை எரிக்காத விவசாயிகளைக் கண்டறிந்து ஊக்கத் தொகை அளிக்க வேண்டும்.

இந்தியாவின் ஒரு ஆண்டில் 62 மில்லியன் டன் கழிவுகள் உருவாகிறது. ஆனால் அதில் 75-80 சதவீதம் வரையே சேகரிக்கப்படுகின்ன. 20 சதவீதம் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகிறது. இதனால் ஏற்படும் சூழல் சீர்கேட்டினை போக்க விழிப்புணர்வு திட்டங்களை மேற்கொள்வது அவசியம். கழிவுகளை பிளாஸ்டிக், உலோகம் என பிரிப்பது, மக்கும் கழிவு , மக்காத கழிவு, மின்னணு கழிவுகள் என வீடுகள் அளவிலேயே தரம் பிரிக்கப்பட வேண்டும். சாலைகளின் நடுவில் புகையை மட்டுப்படுத்தும் செடிகளை வளர்ப்பது, பாத சாரிகளுக்கு உயர்த்தப்பட்ட நடைபாதை, சாலைகளின் மனிதர்கள் மேற்கொள்ளும் தூய்மைப்பணியை குறைப்பது உள்ளிட்ட பரிந்துரைகளையும் அளித்துள்ளது.

வீடுகளில் புகை அளவை குறைப்பது முக்கியமானது. கிராமப்புறங்களில் பயோ-கேஸ் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் 2020-ம் ஆண்டுக்குள் உறுதி செய்ய வேண்டும் என குறிப்பிடுகிறது.

நாட்டில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் சூழலை பாதுகாப்பதற்கான உடனடி திட்டமாகவும், நீண்ட கால திட்டமாகவும் நிதி ஆயோக் இந்த பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. உண்மையில் புகை மாசுவுக்கு எதிராக இந்தியாவின் அனைத்து நகரங்களும் போராட வேண்டிய நேரம் இது என்பதுதான் நிதி ஆயோக் முன் வைக்கும் கருத்து.

-

SCROLL FOR NEXT