கிரேசியசஸ் (டான்சானியா) அமரா (ஜார்ஜியா)  | படங்கள்: ஜெ.மனோகரன் | 
வணிக வீதி

இந்திய தொழில்முனைவோரின் திறமை வியப்பை ஏற்படுத்துகிறது: டான்சானியா, ஜார்ஜியா தொழில்முனைவோர் கருத்து

இல.ராஜகோபால்

கோவை: தமிழக அரசு சார்பில் கோவையில் எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், வாங்குவோர்- விற்போர் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் 2 நாட்கள் நடந்தது. இதில் வெளிநாடுகளை சேர்ந்த தொழில் துறையினர் பலர் பங்கேற்றனர். இதுகுறித்த அனுபவத்தை ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்டனர்

ஜார்ஜியா நாட்டில் செயல்படும் ‘அல்வாதி’ என்ற ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனத்தின் அதிகாரி அமரா கூறும் போது, “எங்கள் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் உதிரிபாகங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாட்டு கார்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்தியா பெரிய சந்தை என்பதால் எதிர்வரும் காலங்களில் இந்திய கார்களுக்கும் விநியோகிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. தொழில்துறையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இருநாடுகளுக் கிடையே நட்புறவை அதிகரிக்க இதுபோன்ற நிகழ்ச்சி்கள் உதவுகின்றன.

ஏற்றுமதி, இறக்குமதி அதிகரிக்கும் என நம்புகிறோம். நேரடி விமான சேவைகள் அதிகரித்தால் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்க இருநாடுகளுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. தமிழகத்துக்கு இதுவரை நான்குமுறை வந்துள்ளேன். கோவைக்கு வருவது இதுவே முதல் முறை. இங்குள்ள மக்களின் செயல்பாடு மிகவும் பிடித்துள்ளது. வெளிநாட்டினரை அன்புடனும், மரியாதையுடனும் நடத்துகின்றனர்” என்றார்.

டான்சானியா நாட்டை சேர்ந்த வானியா குழும நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிரேசியசஸ் கூறும்போது, “எங்கள் நிறுவனம் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் அது தொடர்பான தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. டான்சானியா, துபாய் ஆகிய இரு நாடுகளில்எங்கள் நிறுவனம் செயல்படுகிறது.

கோவையில் நடக்கும் தொழில்துறை நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். கோவை தொழில்முனைவோரின் திறமை, தொழில்நுட்பம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வில் வாங்குவோர்- விற்போர் நேரடியாக சந்திக்க வாய்ப்பு கிடைக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு எங்கள் நிறுவனங்களின் பொருட்களை விற்பனை செய்து வருகிறோம். நல்ல வரவேற்பு உள்ளது. அதனால் எதிர்காலத்தில் தொழில் உறவு மேலும் அதிகரிக்கும்” என்றார்.

SCROLL FOR NEXT