கோவை: நவீன தொழில்நுட்பங்கள் மூலம் புதுமையான சிந்தனை கொண்ட வணிக யுக்தியை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்படும் தொழில்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என அழைக்கப்படுகின்றன. இந்தியாவின் மக்கள் தொகையில் 6 சதவீதத்தை கொண்ட தமிழ்நாடு உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 2-ம் இடத்திலும், உற்பத்தி ஏற்றுமதியில் 3-வது பெரிய மாநிலமாகவும் உள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சமச்சீரான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தி புதிய தொழில்முனைவோர்களை உருவாக்கி அதிக வேலைவாய்ப்பு வழங்குவதில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) துறை முனைப்புடன் செயல்படுகிறது. இத்துறைக்கு அடித்தளமாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வருகையால் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரித்து வருகிறது.சர்வதேச அளவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்த ஸ்டார்ட் அப் ஜெனோம் மற்றும் உலக தொழில்முனைவோர் ஒருங்கிணைப்பு அமைப்பின் அறிக்கை வெளியாகி உள்ளது.
அதில், ஆசிய பிராந்தியத்தில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழல் உள்ள நகரங்களின் பட்டியலில் சென்னை 18-வது இடத்தில் உள்ளது. தமிழக அளவில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை 1,350 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (டிபிஐஐடி) பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்களின் எண்ணிக்கை 9,500 ஆக உள்ளன.
சென்னையில் 50 சதவீதமும், கோவையில் 15 சதவீதமும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மீதியுள்ள ஸ்டார்ட் அப்கள் இதர மாவட்டங்களில் உள்ளன. தமிழ்நாடு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கோவை மண்டல மையத்தின் (கோவை, நீலகிரி) மாவட்ட திட்ட ஒருங்கிணைப் பாளர்கள் காயத்ரி, ராஜசேகர் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 9,500 ஆக அதிகரித்துள்ளது.
கோவையில் சுமார் 1,350 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன. இதில் 52 துறை வாரியான பிரிவுகள் அடங்கும். குறிப்பாக ஐ.டி. நிறுவனங்கள் 12.7, சுகாதாரம் 9.3, வேளாண்மை 7.1, உணவுத்துறை 6.3, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 3.4, விண்வெளி மற்றும் ராணுவம் 1.7 சதவீத பங்களிப்பை வழங்குகின்றன. கோவையில் சுமார் 22 இன்குபேஷன் மையங்கள் மூலம் ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டுதல், மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிதி ஆதாரம் ஆகியவை பெற்றுத்தருதல் போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன.
கோவை மண்டல ஸ்டார்ட் அப் மையத்தைப் பொறுத்தவரையில், புத்தொழில் நிறுவனங்களுக்கு சுமார் ரூ.8.75 கோடி பங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு புத்தொழில் முனைவோர்களுக்கு ஆதார நிதி வழங்கும் திட்டத்தில் ரூ.1.30 கோடியும், எஸ்சி, எஸ்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.7.45 கோடியும் புத்தொழில் நிறுவனங்களில் பங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மகளிர் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் ஆதார நிதி வழங்கப்படுகிறது. எஸ்சி, எஸ்டி நிறுவனங்களின் தன்மைக்கு ஏற்ப ரூ.25 லட்சம் முதல் ரூ.4 கோடி வரை ஆதார நிதி பங்கு முதலீடாக வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பம் மற்றும் புத்தொழில் சார்ந்து தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நிதி ஆதாரம் பெற்றுத் தரப்படுகிறது. புத்தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியால் கோவை நகரில் தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
பெண்களின் ஸ்டார்ட் அப்கள்: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 9,500 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெண்களின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 2022-ம் ஆண்டில் மத்திய அரசின் ஸ்டார்ட் அப் இந்தியா தரவரிசை பட்டியலில் சிறப்பாக செயல்படும் மாநிலம் என்ற அங்கீகாரத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது.