கோவை: 2020-21 - ம் ஆண்டுக்கான மருத்துவ சுற்றுலா குறியீட்டில் உலகளவில் இந்தியா 10-வது இடத்திலும், ஆசிய அளவில் முதல் 5 இடங்களிலும் உள்ளது. இந்தியாவில் 55 ஜெ.சி.ஐ. உலக தர சான்றிதழ் பெற்ற மருத்துவமனைகளும், 1600-க்கும் அதிகமான தேசிய அங்கீகார வாரியத்தின் சான்றிதழ் பெற்ற மருத்துவமனைகளும் உள்ளன.
இந்தியாவில் மருத்துவ சிகிச்சைக்கு வந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த 2020-ம் ஆண்டில் 1.83 லட்சமாக இருந்தது. கடந்த 2023-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 6.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வரும் 2026-ல் மருத்துவ சுற்றுலா வர்த்தகம் 13 பில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மருத்துவ சுற்றுலா வேகமாக வளர்ந்து வரும் நிலையில், நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து கோவை 2-ம் இடத்தில் உள்ளது. கோவை அரசு கலைக் கல்லூரியின் சுற்றுலா மற்றும் பயண மேலாண்மைத்துறை தலைவர் சங்கீதா கூறும்போது, “கோவை சிறந்த மருத்துவமனைகள், மருத்துவர்களை கொண்ட நகரமாகும்.
மேலும் வங்கதேசம், பாகிஸ்தான் உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற கோவைக்கு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் சிறந்த மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மருத்துவ சுற்றுலா மூலம் மருத்துவமனைகள், ஹோட்டல், வாகன போக்குவரத்து துறைகளை சேர்ந்தவர்களும் வேலைவாய்ப்பு பெறுகின்றனர்” என்றார்.
கோவை மாவட்ட பயண முகவர் சங்கத்தின் தலைவர் கே.பாரதி கூறும்போது, “மருத்துவ சுற்றுலாவில் கோவை நகரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. வளைகுடா மற்றும் ஆப்பிரிக்கா, இலங்கை உட்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சிகிச்சை பெற வருகின்றனர்.
சிகிச்சை பெற வருவோர் 1 மாதம் வரை ஹோட்டல்களில் தங்குகின்றனர். இதனால் ஹோட்டல்கள், விடுதிகள், போக்குவரத்து என சேவை துறையினருக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியும் கணிசமாக உயர்ந்து வருகிறது” என்றார்.
கோவை அரசு கலைக் கல்லூரி சுற்றுலா துறையில் மருத்துவ சுற்றுலா தொடர்பான ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு வரும் உதவி பேராசிரியர் ஜெனிபர் கூறியதாவது: உலக அளவில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மருத்துவ சுகாதாரத் துறையில் வலுவான உள்கட்டமைப்பை கொண்டுள்ளன. ஆனால், அந்த நாடுகளில் சுகாதாரத் துறைக்கு என தனி அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வருகின்றன.
சிறப்பு மருத்துவ சிகிச்சை பெற முன்பதிவு செய்து மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. வளரும் நாடுகளை பொறுத்தவரை இந்தியா சிறந்த மருத்துவ உள்கட்டமைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற மாதக்கணக் கில் காத்திருக்க தேவையில்லை. முன் பதிவு செய்து உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசித்து சிகிச்சை பெறலாம்.
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள், தனியார் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனைகள் என நகரம் தொடங்கி கிராமம் வரை சிறந்த சுகாதார கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இந்தியாவிலேயே சுகாதார கட்டமைப்பின் முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளது. தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வரும் கோவை நகரம் சிறந்த கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.
கோவை நகரமும் மருத்துவ சுற்றுலாவில் தவிர்க்க முடியாத நகரமாக உருவெடுத்து வருகிறது. மருத்துவ சுற்றுலா வர்த்தகத்தில் இந்திய அளவில் கோவை மாவட்டம் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகிறது. கோவை நகரில் நிலவும் தட்பவெப்ப சூழ்நிலையும் இதற்கு ஒரு முக்கியமான காரணமாகும். சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிவடையும் போது, மருத்துவ சுற்றுலாவுக்காக வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் கோவை நகரத்திற்கு அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை பொறுத்தவரையில் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள், வங்கதேசம் உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற வருகின்றனர். கோவை நகரத்தில் நோயாளிகளிடம் அரபு மொழியில் பேசுவதற்கு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் உள்ளனர்.
பல் மருத்துவம், இதயவியல், எலும்பியல், அறுவை சிகிச்சை, நரம்பியல், புற்று நோய், கண் மருத்துவ சிகிச்சை, எடை குறைப்பு சிகிச்சை, முடிமாற்று சிகிச்சை, மார்பக சிகிச்சை உள்ளிட்டவற்றுக்கு இங்கு வருகின்றனர். இந்தியாவில் சிறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் போன்ற பல்வேறு நிபுணர்கள் உள்ளனர். அதே வேளையில் இந்தியாவைச் சேர்ந்த மருத்துவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர்.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனைகளில் பணிபுரியும் இந்திய மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதாவது 10-ல் ஒரு மருத்துவர் இந்தியராக உள்ளார். ஆஸ்திரேலிய மற்றும் கனடாவில் பணிபுரியும் மருத்துவர்களில் ஐந்தில் ஒருவர் இந்தியராக உள்ளார். தமிழகத்தில் மருத்துவ சுற்றுலா வர்த்தகம் தொடர்பான வெளிப்படைத்தன்மையான தரவுகள் இல்லை. எனவே சுற்றுலாதுறை தமிழகத்துக்கு வரும் மருத்துவ சுற்றுலா பயணிகளின் தரவுகளை பெற வேண்டும்.
மலேசிய நாட்டைப் பொறுத்தவரையில் மருத்துவ சுற்றுலாவுக்காக வரும் பயணிகளின் தரவுகளை வெளிப்படைத்தன்மையுடன் அங்குள்ள மருத்துவமனைகள் வைத்துள்ளன. அதுபோல இந்தியாவிலும் அந்த நிலை வர வேண்டும். மருத்துவ சுற்றுலாவை பொறுத்தவரையில் நேரடியாக 10 சதவீதம் பேருக்கும், மறைமுகமாக 25 சதவீதம் பேருக்கும் வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. குறிப்பாக மருத்துவச் சுற்றுலா வர்த்தகத்தை பொறுத்தவரையில் இந்திய அளவில் தமிழகம் 10 முதல் 15 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.