கிருஷ்ணகிரியில் சாலையோரம் தள்ளுவண்டி கடையில் தேங்காய்ப்பூ விற்பனையில் ஈடுபட்டுள்ள சிறு வியாபாரி. 
வணிக வீதி

கிருஷ்ணகிரி மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு ‘கைகொடுக்கும்’ தேங்காய்ப்பூ உற்பத்தி தொழில்!

எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: பொதுமக்களிடம் தேங்காய்ப்பூ நுகர்வு அதிகரித்துள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகளுக்குத் தேங்காய்ப்பூ உற்பத்தி தொழில் கைகொடுத்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று நீர் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டு 14 ஆயிரத்து 838 ஹெக்டேர் பரப்பளவில் நீண்டகாலம் பலன் தரும் தென்னை மரங்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் பெருமளவு போச்சம்பள்ளி பகுதிகளில் உள்ள பண்ணந்தூர், அகரம், அரசம்பட்டி, செல்லம்பட்டி, நாகரசம்பட்டி, பாரூர், காவாப்பட்டி, நெடுங்கல், வீரமலை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.

இங்கு அறுவடையாகும் தேங்காய் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ஹரியானா, குஜராத், ஒடிஸா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கு ஆண்டு முழுவதும் ஏற்றுமதியாகிறது.

இந்நிலையில், கடந்த, 2 ஆண்டுகளாக தேங்காய்ப்பூ உற்பத்தியில் தென்னை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பொதுமக்களிடம் நுகர்வு அதிகரித்துள்ளதால், சந்தையில் தேங்காய்ப்பூ விற்பனை அதிகரித்து வருகிறது.

இந்த சந்தை வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டு அரசம்பட்டி, பாரூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் தேங்காய்ப்பூ உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இவை கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது.

இதுதொடர்பாக பாரூர் பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: கடந்த 30 ஆண்டுகளாகத் தென்னை சாகுபடியில் ஈடுபட்டு வருகிறோம். தற்போது, தேங்காய்ப்பூவுக்குச் சந்தையில் நல்ல வாய்ப்பு உள்ளதால், அதன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு நன்றாக முற்றிய தேங்காயைத் தேர்வு செய்து ஒரு மாதம் வீட்டில் வைத்து பின்னர் நட வேண்டும்.

அதற்கு வாரம் ஒரு முறை தெளிப்பு நீர்ப் பாசனத்தில் தண்ணீர் விடவேண்டும். 3 மாதத்தில் செடி வளர்ந்து, 6-வது மாதத்தில் திரட்சியான தேங்காய்ப்பூ கிடைக்கும். சிறு வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்கள் இங்கு வந்து தேங்காய்ப்பூக்களை நேரடியாக ரூ.20 முதல் ரூ.30 வரை வாங்கிச் செல்கின்றனர்.

சில்லறை வியாபாரிகள் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்பனை செய்கின்றனர். இத்தொழில் மூலம் விவசாயிகள் மற்றும் நூற்றுக் கணக்கான சிறு, குறு வியாபாரிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கிடைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT