நீங்கள் கடன் சார்ந்த முதலீடுகளில் ஆர்வமான நபராக இருக்கும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையை கடந்த வாரம் கவனித்திருப்பீர்கள். குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கையால் முதலீட்டாளர்களுக்கு பெரிய பயன் இல்லை.
கடந்த ஓர் ஆண்டில் மட்டும் கடன் சந்தையில் வட்டி விகிதம் 1.50 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. 10 ஆண்டு கால அரசாங்க கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் 8 சதவீதத்துக்கு மேல் உயர்ந்திருக்கிறது. சில முக்கியமான நிறுவனங்கள் மூன்று ஆண்டு கால டெபாசிட்டுக்கு 8.5 சதவீதம் முதல் 9 சதவீதம் வரை வட்டி வழங்குகின்றன. தற்போதைய நிலையில் நிரந்தர வருமானம் கொடுக்கும் மூன்று முக்கியமான திட்டங்கள் உங்களுக்கு...
கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில், எப்எம்பி (Fixed Maturity Plans) திட்டங்களை முதலீட்டாளர்கள் கவனிக்கலாம். வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் சமயங்களில் இந்த பண்ட்களில் முதலீடு செய்து முதிர்வடையும் வரை காத்திருக்கலாம். இதர கடன் திட்டங்களை விட எப்எம்பி திட்டங்கள் மூன்று வகைகளில் சிறந்தவை. வட்டி விகித ஏற்ற இறக்கங்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. எம்எம்பி திட்டம் மூலமாக முதலீடு செய்யப்பட்டிருக்கும் கடன் பத்திரங்கள் முதிர்வடையும் போது நிர்ணயம் செய்யப்பட்ட வட்டியை வழங்குவதால் பாதிப்பு இல்லை.
எப்எம்பி திட்டங்களுக்கான செலவு விகிதம் மிகவும் குறைவு. இதர கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் 1 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை செலவு விகிதம் இருந்தால், இந்த திட்டங்களில் 0.10% முதல் 0.50 சதவீதம் வரை செலவு விகிதம் வசூலிக்கப்படுகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலான எப்எம்பி திட்டங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில், கிடைக்கும் வருமானத்துக்கு நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படும். பணவீக்க சரிகட்டலுக்கு பிறகும் வரி விதிக்கப்படும் என்பதால் குறைந்த தொகையே வரியாக செலுத்த வேண்டி இருக்கும். ஒரு மாதம் முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான எப்எம்பி திட்டங்கள் உள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு மேலே உள்ள திட்டங்களில் முதலீடு செய்வது நல்லது. `ஏஏஏ’ மற்றும் `ஏஏ-’ தர மதிப்பீட்டு நிறுவன பத்திரங்களில் முதலீடு செய்வதால் 8.5 முதல் 9 சதவீதம் வரை வருமானம் கிடைக்கும்.
சந்தையில் வட்டி விகிதம் உயரும் போது, சில என்பிஎப்சி நிறுவனங்களும் தங்களுடைய டெபாசிட்களுக்கான வட்டியை உயர்த்தி இருக்கின்றன. அனைத்து என்பிஎப்சிகளும் டெபாசிட் திரட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ள என்பிஎப்சி-கள் மட்டுமே டெபாசிட் திரட்ட முடியும். என்பிஎப்சி டெபாசிட்கள் கொஞ்சம் ரிஸ்க் என்பதால் தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். அதிக வட்டிக்காக குறைந்த தரமதிப்பீடு உள்ள நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டாம். லாபத்தை பெருக்க தொடர்வட்டி முறையில் முதலீடு செய்யலாம்.
ஆன்லைனில் முதலீடு செய்யும் போது சில நிறுவனங்கள் கூடுதல் வட்டி வழங்குகின்றன. உதாரணத்துக்கு மஹிந்திரா பைனான்ஸ் 8.75 சதவீத வட்டி (33 மாதங்கள்) வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 0.10 சதவீதம் கூடுதலாக வழங்குகிறது. பஜாஜ் பின்சர்வ் நிறுவனம் 15 மாத டெபாசிட்களுக்கு 7.85 சதவீத வட்டி வழங்குகிறது. 2 முதல் 3 ஆண்டுகள் வரையில் 8.15 சதவீதமும், மூன்று ஆண்டுகளுக்கு மேல் முதலீடு செய்யும் போது 8.4 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக 0.35 சதவீதம் வழங்குகிறது. வட்டி விகிதம் உயரும் சூழல் இருப்பதால் ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரையில் டெபாசிட் செய்வதே நல்லது.
வட்டி விகிதம் எப்படி செல்லும் என்னும் நிச்சயமற்ற சூழல் இருப்பதால், மொத்த தொகையையும் எப்எம்பி அல்லது பிக்ஸட் டெபாசிட்டில் போடுவது நல்லதல்ல. ஒரு வேளை வட்டி விகிதம் உயரும் பட்சத்தில் முதலீடு செய்வதற்கு உங்களிடம் பணம் இல்லாமல் போகலாம். அதனால் கடன் சார்ந்த முதலீட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்கினை குறுகிய கால கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்களில் முதலீடு செய்யலாம். தற்போதைய சூழலில் அல்ட்ரா ஷார்ட் டியூரேஷன் பண்ட்ஸ், லோ டியூரேஷன் பண்ட்ஸ் மற்றும் மணி மார்கெட் பண்ட்ஸ் ஆகியவை சிறந்த வாய்ப்பாகும். முதலீடு செய்யும் போது கடந்த கால வருமானத்தை மட்டும் பார்க்காமல், சராசரி வருமானம், குறைந்த செலவு விகிதம் மற்றும் தரமான முதலீடு உள்ளனவா என்பதையும் பார்த்து முதலீடு செய்யவும். வரும் காலத்தில் வட்டி விகிதம் உயரும் போது இதிலிருந்து எப்எம்பி அல்லது பிக்ஸட் டெபாசிட்களுக்கு மாற்றிக்கொள்ளவும்.
-