கடந்த 1998-ம் ஆண்டு ரத்தன் டாடா அவரது கனவு திட்டமான இந்தியாவின் முதல் பிரிமீயம் ஹேட்ச்பேக் டாடா இண்டிகா காரை டீசல் இன்ஜினில் அறிமுகப்படுத்தினார். அந்த காலகட்டத்தில் அதற்கு வரவேற்பு கிடைக்காத காரணத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஓராண்டிலேயே கார் வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி மோட்டார் வாகன நிறுவனமான போர்டுவிடம் விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்காக, ரத்தன் டாடா தனது குழுவுடன் அமெரிக்காவுக்கு சென்று போர்டு நிறுவனரான பில் போர்டை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த சந்திப்பின்போது ரத்தன் டாடா அவமானப்படுத்தப்பட்டார். ‘‘உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்புறம் எதற்கு இந்த கார் வர்த்தகத்தை தொடங்கி இப்படி அவதிப்படுகிறீர்கள்? என்று ரத்தன் டாடாவைப் பார்த்து போர்டு நிறுவனர் பில் போர்டு ஏளனமாக கேட்டதாக அந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
அதன் பின் அந்த ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டவி்லை. இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு உயர்ந்த லட்சியங்களுக்கு அடித்தளமிட்ட ரத்தன் டாடா, கார் வர்த்தகத்தை விற்கும் முடிவை கைவிட்டு பட்ட அவமானத்தை சாதனையாக மாற்றிக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியத்தை அவருள் விதைத்துக் கொண்டார். டாடா மோட்டார்ஸை உலகளவில் தவிர்க்க முடியா நிறுவனமாக கட்டமைத்தார் என்பது வரலாறு.
போர்டு சம்பவம் நடந்து சரியாக 9 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2008-ம் ஆண்டு அந்த நிறுவனம் கடும் நெருக்கடியில் சிக்கியது. அந்த நிறுவனத்துக்கு உதவும் வகையில், போர்டின் ஐகானிக் பிராண்டுகளான ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவரை (ஜேஎல்ஆர்) வாங்க ரத்தன் டாடா முன்வந்தார்.
இந்த ஒப்பந்தம் 2.3 பில்லியன் டாலர் மதிப்புடையது. அப்போது, போர்டு நிறுவனத்தின் தலைவர் பில் போர்டு கூறுகையி்ல், “ஜேஎல்ஆர் பிராண்ட்டை வாங்கியதன் மூலம் எனக்கு மிகப்பெரிய உதவியை செய்திருக்கிறீர்கள்” என ரத்தன் டாடாவிடம் பில் போர்டு மனநெகிழ்ச்சியுடன் கூறியதாக டாடாவின் குழுவில் இடம்பெற்றிருந்த பிரவின் கடில் ஒரு பொது நிகழ்ச்சியில் இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
தனக்கு நேரும் சோதனை, அவமானங்களை மன உறுதியுடன் எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றிக் காட்டுவதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ரத்தன் டாடா என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
டாடா குழும பங்குகளின் விலை 10% அதிகரிப்பு: ஜியோஜித் பைனான்சியல் சர்வீசஸ் தலைமை முதலீட்டு ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில், ‘‘கார்ப்பரேட் உலகின் ஜாம்பவான் ரத்தன் டாடா மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முதலீட்டாளர்கள் அவரது குழும பங்குகளில் முதலீடு செய்தனர். குறிப்பாக, டாடா ஸ்டீல், டிசிஸ், டாடா மோட்டார்ஸ், டாடா கன்ஸ்யூமர், இண்டியன் ஹோட்டல்ஸ், டாடா கெமிக்கல்ஸ், டாடா டெலிசர்வீசஸ் பங்குகளை அவர்கள் போட்டி போட்டு வாங்கினர்.
இதனால், டாடா கெமிக்கல்ஸ், டாடா டெலிசர்வீசஸ் உட்பட டாடா குழும நிறுவன பங்குகளின் விலை 10 சதவீதம் வரை அதிகரித்தன. ரத்தன் டாடா அவரது குழும நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, இந்தியாவின் வளர்ச்சிக்கும், லட்சக்கணக்கான சாதாரண முதலீட்டாளர்கள் பயனடையும் வகையில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். ” என்றார்.