ஓ
ரளவுக்கு ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களுக்கு வைப்பு நிதி (எப்டி) மற்றும் கடன் சார்ந்த மியூச்சுவல் பண்ட்கள் தவிரவும் சில வாய்ப்புகள் இருக்கின்றன. இவர்கள் நிறுவனங்கள் வெளியிடும் மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் (என்சிடி) முதலீடு செய்யலாம். அதிகபட்சம் தர மதிப்பீடு மற்றும் அதிக வருமானம் கொடுக்கும் இத்தகைய கடன் பத்திரங்கள் பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் வர்த்தகமாகின்றன.
நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நீண்ட கால நிதியை இது போல கடன் பத்திரங்கள் மூலம் திரட்டுவார்கள். பொதுவாக ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு இந்த பத்திரங்கள் வெளியிடப்படும். இந்த பத்திரங்களை வைத்திருப்பவர்களுக்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும். சந்தையை பொறுத்து வட்டி விகிதம் இருக்கும். தற்போது வட்டி விகிதம் குறைவாக இருக்கும் சூழலில் 8.5 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.
சிறு முதலீட்டாளர்களுக்கென சில நிறுவனங்கள் கடன் பத்திரங்களை வெளியிட்டிருக்கின்றன. திவான் ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், இந்தியாஇன்போலைன் ஹவுசிங் பைனான்ஸ், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ், எஸ்ஆர்இஐ எக்யூப்மென்ட் பைனான்ஸ், டாடா கேபிடல் பைனான்ஸியல் சர்வீசஸ், எஸ்பிஐ, முத்தூட் பைனான்ஸ், மணப்புரம் பைனான்ஸ், ரெலிகர் பின்வெஸ்ட், எஸ்.ஆர்.இ.ஐ. இன்பிரா பைனான்ஸ் மற்றும் எம் அண்ட் எம் பைனான்ஸியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் சந்தையில் அதிகம் வர்த்தகமாகின்றன.
சந்தையில் வர்த்தகமாகும் பத்திரங்களில் முதலீடு செய்யும் பட்சத்தில் விலை மற்றும் கூப்பன் விகிதத்தை மட்டும் பார்த்து முதலீடு செய்யக்கூடாது. மூன்று விஷயங்களை அடிப்படையாக வைத்தே உங்களது முதலீடுகள் இருக்க வேண்டும்.
அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிடும் பத்திரங்களில் ரிஸ்க் குறைவு. ஆனால் தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரங்கள் திவால் ஆவதற்கான வாய்ப்பு இல்லை என்று சொல்ல முடியாது. அதனால் முதலீட்டுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதுபவர்கள் அதிக தரமதிப்பீடு இருக்கும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யலாம்.
திவான் ஹவுசிங் பைனான்ஸ், இந்தியா புல்ஸ், எஸ்பிஐ, எம் அண்ட் எம் பைனான்ஸியல் சர்வீசஸ் மற்றும் என்டிபிசி ஆகிய நிறுவனத்தின் கடன் பத்திரங்களுக்கு அதிகபட்ச மதிப்பீடான `ஏஏஏ’ வழங்கப்பட்டிருக்கிறது.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ், எஸ்ஆர்இஐ எக்யூப்மென்ட் பைனான்ஸ், எடில்வைஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம்பைனான்ஸ் ஆகிய நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு `ஏஏ+’ மதிப்பீடு கிடைத்திருக்கிறது. ஐஎப்சிஐ மற்றும் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனங்களின் கடன் பத்திரங்களுக்கு `ஏஏ-’ மதிப்பீடு கிடைத்திருக்கிறது.
கடன் பத்திரங்கள் வெளியிடும் சமயத்தில் வாங்கும்போது நிலையான வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டிருக்கும். அவை முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். ஆனால் வர்த்தகமாகும் பத்திரங்களில் வட்டி விகிதம் இருக்காது அறிவிக்கப்பட்டதை விட அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம். அதனால் முதிர்வு சமயத்தில் என்ன விகிதம் (ஒய்டிஎம்) கிடைக்கும் என்பதை தெரிந்துகொள்வது முக்கியம்.
ஹெச்டிஎப்சி செக்யுரிட்டீஸ் நிறுவனத்தின் கணிப்பு படி `ஏஏஏ’ தரமதிப்பீடு இருக்கும் பத்திரங்களுக்கு 8.50 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையும், `ஏஏ+’ மற்றும் `ஏஏ-’ தரமதிப்பீடு உள்ள கடன் பத்திரங்களுக்கு 9% முதல் 12 சதவீதம் வரையும் கிடைக்கும் என்றும் கூறியிருக்கிறது.
எவ்வளவு பங்குகள் வர்த்தகமாகிறது என்பதும் முக்கியம். வர்த்தகம் நடக்கவில்லை என்னும் பட்சத்தில் அந்த பத்திரங்களை விற்பது கடினமாகிவிடும். ஹெச்டிஎப்சி செக்யுரிட்டீஸ் தகவல்படி 296 பத்திரங்கள் வர்த்தகமாகின்றன. இதில் 20 கடன் பத்திரங்கள் மட்டுமே தினசரி 300-க்கும் மேற்பட்ட யூனிட்கள் வர்த்தகமாகின்றன.