வணிக வீதி

இவர்களுக்கு `சர்க்கரை’ இனிக்கவில்லை

ராஜலட்சுமி நிர்மல்

தேவைக்கு அதிகமான சர்க்கரை உற்பத்தி காரணமாக சர்க்கரை விலைகள் சரிந்திருக்கின்றன. இதனால் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவரை சுமார் ரூ.20,000 கோடி அளவுக்கு நிலுவைத் தொகை இருக்கிறது. விதிமுறைகளின்படி கரும்புகளை வழங்கிய 14 நாள்களுக்குள் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஆனால் இது எப்போதாவது நடக்கும் நிகழ்வாகிவிட்டது.

சர்க்கரை ஆலைகளுக்கு உற்பத்தி மானியம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டதாக உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கடந்த வாரம் தெரிவித்தார். ஆனால் இது சர்க்கரை ஆலைகளின் பிரச்சினை அல்ல. கரும்புகளுக்கான விலை நிர்ணயப் பிரச்சினை.

ஓட்டு வங்கிக்காக மத்திய மாநில அரசுகள் குறைந்தபட்ச விலையை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக கரும்பு பயிரிடும் பரப்பளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தேவையை விட உற்பத்தி மிக மிக அதிகமாக இருக்கிறது. இதனால் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ஒவ்வொரு கிலோ சர்க்கரை உற்பத்திக்கும் 8 ரூபாய் அளவுக்கு சர்க்கரை நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. உத்தர பிரதேசத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளுக்கு 8 ரூபாயை விட இழப்பு அதிகமாக உள்ளது.

அதிக உற்பத்தி இருக்கும் என்பதை அரசு முன்கூட்டியே கணித்தது. சர்க்கரை ஆலைகள் இருப்பு வைக்க வேண்டிய சர்க்கரை அளவு வரம்பு நீக்கப்பட்டது. அதேபோல சர்க்கரை மீதான இறக்குமதி 100 சதவீதம் உயர்த்தப்பட்டது. ஆனால் இந்த நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. விலை தொடர்ந்து சரிந்துகொண்டே வந்தது.

சர்வதேச அளவிலும் சர்க்கரை விலை குறைவாக இருப்பதால், சர்க்கரை ஏற்றுமதியும் ஆலைகளுக்கு தீர்வாக அமையவில்லை. அதிக அளவிலான உற்பத்தி காரணமாக சர்க்கரை விலைகள் கடுமையாக சரியத்தொடங்கின. ஆரம்பத்தில் 2.5 கோடி டன் உற்பத்தி இருக்கும் என கணிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2.61 கோடி டன் என உயர்த்தப்பட்டது. இறுதியாக 2.93 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருந்தது. கடந்த 2017-18-ம் ஆண்டை விட 45 சதவீதம் அளவுக்கு உற்பத்தி அதிகரித்திருக்கிறது.

சர்வதேச அளவிலும் இந்த கூடுதல் உற்பத்தியை வாங்கும் திறன் இல்லை. ஐரோப்பிய யூனியன், சீனா மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் கூட சர்க்கரை உற்பத்தி அதிகமாகவே இருக்கிறது. ஐரோப்பிய யூனியன் கடந்த அக்டோபர் முதல் ஏற்றுமதி செய்யத் தொடங்கி இருக்கிறது. அமெரிக்க விவசாய துறை அமைச்சகம் சர்வதேச அளவில் 2017-18-ம் ஆண்டில் 18.49 கோடி டன் உற்பத்தி (இந்தியாவையும் சேர்த்து) இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் மொத்த நுகர்வு 17.4 கோடி டன் மட்டுமே. 98 லட்சம் டன் சர்வதேச உபரி என கணக்கிடப்பட்டிருக்கிறது.

சாதகமான சீதோஷ்ன நிலை காரணமாக சர்க்கரை உற்பத்தி அதிகமாக இருக்கிறது. எப்போதெல்லாம் பருவமழை நன்றாக இருக்கிறதோ அப்போதெல்லாம் சர்க்கரை ஆலைகளுக்கு திண்டாட்டம்தான். அதிக அளவிலான கரும்பு சந்தைக்கு வரும். தேவை உயராத வரையில் சர்க்கரை ஆலைகளுக்கு சிக்கல்தான்.

நீர் அதிகம் தேவைப்படும் பயிராக இருந்தாலும், கரும்பு பயிரிடும் விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 1971-72-ம் ஆண்டுகளில் 24 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு கரும்பு பயிரிடப்பட்டது. 1989-90களில் 34.4 லட்சம் ஹெக்டேராகவும், 2002-03-ம் ஆண்டுகளில் 45 லட்சம் ஹெக்டேராக இருந்தது. தற்போது 50 லட்சம் ஹெக்டேர் அளவுக்கு கரும்பு பயிரிடப்பட்டிருக்கிறது. 2009-ம் ஆண்டுக்கு பிறகு கரும்பு விவசாயிகளுக்கான ஆதார விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது.

1990களில் குவிண்டாலுக்கு ரூ.3-4 உயர்த்தப்பட்டது. 2000-ம் ஆண்டுகளில் ரூ.5-8 வரை உயர்த்தப்பட்டது. இடையே வறட்சி காலங்களில் இரட்டை இலக்கத்தில் உயர்த்தப்பட்டது. ஆனால் 2009-10-க்கு பிறகு ஆண்டுக்கு ரூ.10-25 வரை உயர்த்தப்பட்டது. இதில் உத்தர பிரதேச மாநிலம் சொந்தமாக விலை நிர்ணயம் செய்கிறது. இது குவிண்டாலுக்கு ரூ.50-100 வரை அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை மற்றும் அதன் உப பொருட்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை அடிப்படையாக வைத்து கரும்பின் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என வேளாண் பொருட்களுக்கான விலை நிர்ணய குழு பரிந்துரை செய்தது. சர்க்கரை ஆலைகள் புதிய நடைமுறைக்கு மாறும்பட்சத்தில் மாநிலங்கள் விலை நிர்ணயத்துக்கு புதிய விதிமுறையை உருவாக்க வேண்டி இருக்கும்.

-

SCROLL FOR NEXT