இந்தியா பொருளாதார ரீதியாக உலகின் 5-வது பெரிய நாடாக வளர்ந்துள்ளது. அதேசமயம், ஊட்டச்சத்துக் குறைபாடுமிக்க குழந்தைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடாகவும் இந்தியா உள்ளது. ஒருபக்கம் பொருளாதார வளர்ச்சி. இன்னொருபுறம், ஊட்டச்சத்துக் குறைபாடு. இந்தியாவின் இந்த முரண்பாட்டை எப்படி புரிந்துகொள்வது?
சுதந்திரம் அடைந்த சமயத்தில், இந்தியா தொழில், கல்வி, சுகாதாரம் உட்பட நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையான கட்டமைப்பில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. மக்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்தவற்குக்கூட வெளிநாடுகளின் உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருந்தது. ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா பொருளாதார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக உலக அரங்கில் கவனிக்கத்தக்க இடத்தை அடைந்துள்ளது. அதேசமயம், தரமான கல்வி, சுகாதாரம், பாலின சமத்துவம், நீதி சார்ந்து இந்தியா இன்னும் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம்.
பருந்துப் பார்வையில் நாட்டின் இயக்கத்தை அணுகும்போது, இந்தியாவின் முன்னகர்வில் மாநிலங்களின் பங்களிப்பை காணத் தவறுகிறோம். மாநிலங்களின்முன்னெடுப்பு இல்லாமல், இந்தியாவின் வளர்ச்சி சாத்தியமில்லை.
இந்தியாவில் தற்சமயம் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் உள்ளன. நிலப்பரப்பு, மக்கள் தொகை, கலாச்சாரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் வேறுபட்டவை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்த அரசியல், பொருளாதாரக் கொள்கைகள் உள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பயணம் அமைகின்றன. அவற்றின் பின்தங்கலும்தான்.
இந்தியாவின் போக்கைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் நாம் மாநிலங்களின் இயக்கத்தை புரிந்துகொள்ள வேண்டும். வளர்ச்சிக்கான முக்கிய காரணிகளான தொழில், வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, சட்டம் - ஒழுங்கு, பாலின சமத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் ஒவ்வொரு மாநிலமும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் செலுத்துகின்றன என்பதை ஆராய்வதன் மூலம் இந்தியாவின் முன்னகர்வில் அம்மாநிலங்களின் பங்களிப்பு என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும்.
இந்தத் தொடர் அதன்பொருட்டுதான். வளர்ச்சிக் காரணிகளில் முன்னிலையில் இருக்கும் மாநிலங்கள் என்னென்ன, பின்தங்கி இருக்கும் மாநிலங்கள் என்னென்ன, அதற்கான காரணங்கள் என்ன?.. இவை அனைத்தையும் தரவுகளின் அடிப்படையில், அடுத்த வாரம் முதல் ‘வணிக வீதி’ பக்கத்தில் இந்தப் புதிய தொடரில் பார்க்கலாம்.