நீங்கள் சரியான நேரத்தில் கடனை செலுத்தி வருகிறீர்கள் என்னும் பட்சத்தில் உங்களுடைய வங்கி உங்களுக்குக் கடன் கொடுப்பதற்குத் தயாராக இருக்கும். ஆனால் அதுமட்டும் போதுமா? சில நிதி நிறுவனங்கள் அதிக சிபில் மதிப்பெண்ணை வைத்திருப்பவர்களுக்கு குறைந்த வட்டியிலும் கடன் கொடுக்கின்றன.
தனி நபரின் கடன் செலுத்தும் தன்மையை அடிப்படையாக வைத்து சிபில் மதிப்பெண் உருவாக்கப்படுகிறது. 300 முதல் 900-க்குள் சிபில் மதிப்பெண் இருக்கும். உங்களது சிபில் மதிப்பெண் அதிகமாக இருக்கும்பட்சத்தில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.
வாங்கும் கடனை திருப்பி செலுத்தும் வருமானம் இருக்கிறதா என்பதுதான் வங்கிகளின் முக்கியமான அளவுகோல், ஆனால் அதே சமயம் கிரெடிட் மதிப்பெண்ணும் கடன் வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். அதிக கிரெடிட் மதிப்பெண்ணுக்கு எவ்வளவு குறைவான வட்டி விகிதம் என்பது குறித்து தெளிவான கொள்கை இல்லை என்றாலும், சில வங்கிகள் கிரெடிட் மதிப்பெண்ணுக்கு ஏற்ப குறைந்த வட்டியை நிர்ணயம் செய்கின்றன.
உதாரணத்துக்கு பேங்க் ஆப் பரோடா வீட்டு கடனுக்கு சிறப்பு திட்டத்தை வைத்திருக்கிறது. சரியான நேரத்தில் கடனை திருப்பி செலுத்திவரும் ஒருவரின் சிபில் மதிப்பெண் 760-க்கு மேல் இருக்கும் பட்சத்தில் குறைந்த வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கும். இந்த வங்கியின் ரீடெய்ல் பிரிவு பொது மேலாளர் அசோக் அனேஜா கூறும் போது கிரெடிட் மதிப்பெண் 760-க்கு மேல் இருக்கும் பட்சத்தில் 8.35 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கும். அதேபோல 725 முதல் 759 வரை சிபில் மதிப்பெண் இருக்கும் பட்சத்தில் 8.85 சதவீத வட்டியில் வீட்டுக் கடன் கிடைக்கும். 724 மதிப்பெண்ணுக்கு கீழே சிபில் மதிப்பெண் இருக்கும் பட்சத்தில் 9.35 சதவீத வட்டியில் வீட்டுக்கடன் கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் எந்த விதமான கடன் வரலாறும் (credit history) இல்லாதவர்களுக்கு 8.85 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும் என்று கூறினார்.
சதவீத அடிப்படையில் பார்க்கும் போது குறைவாக இருப்பது போல தெரிந்தாலும், தொகை அடிப்படையில் பார்க்கும் போது பெரிய தொகையை சேமிக்க முடியும். உதாரணத்துக்கு 40 லட்ச ரூபாய் கடனை 30 ஆண்டுகளுக்கு வாங்குகிறீர்கள் என்னும் பட்சத்தில், உங்களது சிபில் மதிப்பெண் 760-க்கு மேல் இருந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய மாத தவணை ரூ.30,330 மட்டுமே. ஒருவேளை உங்களது சிபில் மதிப்பெண் 725 முதல் 759 வரை இருந்தால் நீங்கள் செலுத்த வேண்டிய மாத தவணை ரு.31,750 ஆகும். மாதத்துக்கு ரூ.1420 மீதமாகும். ஓர் ஆண்டுக்கு ரூ.17,040 மீதமாகும். ஒட்டு மொத்த 30 ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டால் ரூ.5.10 லட்சம் மீதமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் சிபில் மதிப்பெண் அடிப்படையில் கார்ப்பரேட் கடன் வழங்குகின்றன.
சிபில் மதிப்பெண் அடிப்படையில் கடன் வழங்கும் நடைமுறையை மற்ற வங்கி அல்லாத நிதி நிறுவனங்களும் பின்பற்றலாம் என பைசா பஸார் டாட் காம் நிறுவனத்தின் நிறுவனர் நவீன் தெரிவித்தார். இதனால் கடன் கொடுப்பவர் மற்றும் கடன் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
இன்னும் சில காலங்களில் அதிக சிபில் மதிப்பெண் வைத்திருப்பவர்கள், குறைந்த வட்டியில் கடன் வேண்டும் என்பதை வலியுறுத்தும் நிலையில் இருப்பார்கள் என்று பேங்க் பஸார் டாட் காம் நிறுவனத்தின் தலைமை தொழில் மேம்பாட்டு அதிகாரி நவின் சந்தானி கூறினார்.
அதிக சிபில் மதிப்பெண் வைத்திருப்பவர்கள் வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுடன் பேரம் பேச முடியும். ஆனால் சிபில் மதிப்பெண்ணை எப்படி உயர்த்துவது என்பதை திட்டமிட வேண்டும். சரியான நேரத்தில் முழுமையான கடன் தவணையையும் செலுத்த வேண்டும். கடன் தவணையை கால தாமதமாக செலுத்தும் போது மதிப்பெண் கடுமையாக குறையலாம்.
கடன் சார்ந்த பொறுப்பை ஒருவர் எவ்வாறு கையாளுகிறார் என்பதை வைத்துதான் சிபில் மதிப்பெண் வழங்கப்படுகிறது. அதேபோல கிரெடிட் கார்டை எப்படி பயன்படுத்துகிறார் என்பதும் கணக்கிடப்படுகிறது. உதாரணத்துக்கு ஒருவருடைய மொத்த கிரெடிட் கார்ட் வரம்பில் 40 சதவீதம் வரை பயன்படுத்தும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. இந்த எல்லையை தாண்டி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது மதிப்பெண் குறையலாம். மேலும் அதிக எண்ணிக்கையில் கிரெடிட் கார்டு இருப்பது, அதிகம் கடன் வாங்கி இருப்பது ஆகிய காரணங்களால் மதிப்பெண் குறையலாம்.
சிபில் மதிப்பெண் மீது கவனமாக இருங்கள். குறைந்த வட்டியில் கடன் பெறுங்கள்.
-