உயிர் மூச்சு

கான்கிரீட் காட்டில் 03: வண்ணத்துப்பூச்சிக்கு சிமெண்ட் தரை பிடிக்குமா?

ஆதி வள்ளியப்பன்

சென்னை மந்தைவெளி ரயில் நிலையத்துக்கு அருகே ஒரு நாள் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பழுப்பு நிற வண்ணத்துப்பூச்சி தரையில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. வழக்கமாக வண்ணத்துப்பூச்சிகள் பூக்களிலோ தாவரங்களிலோ உட்கார்வதைப் பார்க்கலாம். மண் தரையிலும் வண்ணத்துப்பூச்சிகள் உட்காரும், தாது உப்புகளை உட்கொள்வதற்காக இப்படிச் செய்யும். ஆனால், நான் பார்த்த வண்ணத்துப்பூச்சியோ கான்கிரீட் தரையில் உட்கார்ந்துகொண்டிருந்தது.

அதன் இறக்கைகளில் சிறிய ஆந்தைக் கண் போன்ற முத்திரைகள் காணப்பட்டன. அது இறக்கையை மடித்த நிலையிலும், இறக்கையை விரித்த நிலையிலும் படமெடுத்துக்கொண்டேன். அதன் பெயரையும் பண்புகளையும் நண்பர்கள் உதவியுடனும் வழிகாட்டிப் புத்தகம் மூலமாகவும் பின்னர் அறிந்துகொள்ள முடிந்தது.

30CHVAN_LemonPansy02.jpg இறக்கை மூடிய தோற்றத்தில் பழுப்பு வசீகரன்right

அதன் பெயர் பழுப்பு வசீகரன், ஆங்கிலத்தில் Lemon Pansy, அறிவியல் பெயர் Junonia lemonais. பழுப்பு நிறத்தில் வசீகரமாக இருப்பதால் இந்தப் பெயர். மேல், கீழ் இறக்கைகள் இரண்டிலும் கண்களைப் போன்ற புள்ளிகளைக் கொண்டிருப்பது இவற்றின் தனி அடையாளம். சாதாரணமாக நான்கு கண்கள் தென்படலாம்.

இறக்கையின் அடிப்பகுதியில் கண் போன்ற புள்ளிகள் சில நேரம் இல்லாமலும் இருக்கலாம். இதைத் தவிர அலையலையான பழுப்பு நிற வரிகள் இறக்கைகளில் தென்படும். மயில் வசீகரன், மஞ்சள் வசீகரன் ஆகிய வண்ணத்துப்பூச்சிகள் இதேபோன்ற தோற்றத்தைக்கொண்டிருந்தாலும், அவை தனி வகைகள்.

பழுப்பு வசீகரன் ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், மழைக் காலத்திலும் மழைக்குப் பின்னும் அதிகமாகத் தென்படும். மழைக் காலத்தில் இதன் நிறம் பளிச்சென்று இருக்கும். வெயில் காலத்தில் நிறம் மங்கிக் காணப்படும். அப்போது காய்ந்த இலைகளைப் போன்ற உருமறை தோற்றத்தைப் (Camouflage) பெறுவதற்கு இந்த அம்சம் உதவுகிறது.

நாடு முழுவதும் திறந்தவெளிகள், புல்வெளிகள், தோட்டங்கள், சாலைகளில் பரவலாகக் காணப்படக் கூடியது. தாழ்வாக, சுறுசுறுப்பாகப் பறக்கும். தாழ்வான பகுதிகள் அல்லது தரையில் ஓய்வெடுக்கும்போது இறக்கைகளை விரித்து வைத்து உட்காரும்.

காங்கிரீட் தரையில் அது நீண்ட நேரம் உட்கார்ந்ததற்குக் காரணம் தெரியவில்லை என்று குறிப்பிட்டிருந்தேன். வெயிலில் காய்வதற்காக அது இப்படிச் செய்திருக்க வேண்டும் என்கிறது வழிகாட்டிப் புத்தகம்.

SCROLL FOR NEXT