கடல் எனக்கு அலுக்கவில்லை.
இந்தப் பொழுதில்கூட அருகில் போய்விட்டால் என்னை மழலையாய் மாற்றிவிடுகிறது கடல். சிறியதும் பெரியதுமாக மீண்டும் மீண்டும் எழுவதும் தரையைத் தீண்டித் தழுவுவதும் ஊடி விலகுவதும் மீண்டும் தழுவுவதுமாக நாடகமாடுகிறது கடல். மரணம் விதிக்கப்பட்ட இளம் காதலர்கள் மூச்சு நின்று போகும்வரை இறுகத் தழுவிக்கொள்வதுபோல், அலை கரையைத் தழுவி முடிந்தவரை முன்னேறி இறுதி மூச்சை விடுகிறது.
கரையிலிருந்து நீர் வார்ந்துபோகும் சிறு இடைவெளியில் நண்டுகளும் எண்ணிலடங்காத உயிரினங்களும் இரை தேடி ஓடுவதும், ஈரம் தோய்ந்த மண்ணில் கடல் எலிகள் மின்துளைப்பானின் லாகவத்துடன் சடுதியில் புதைந்து மறைந்துவிடுவதும், ஒரு காலத்தில் கடலைத் தம் வீடாய் வரித்திருந்த சங்குகளும் சிப்பிகளும் சுமந்திருந்த கவசங்கள் அலைகளினூடே உயிர் பிரிந்த கூடுகளாக மல்லாந்து, உருண்டு, வேகமெடுத்து ஓடி மூழ்குவதுமாக ஆர்வமூட்டுகிறது கடல்.
பேரலையைத் தொடர்ந்து ஒரு சிற்றலை மெதுவாய் வந்து அழுகிற மழலையைக் கொஞ்சுவதுபோல் கரையைத் தொட்டுச் செல்லமாய் அடிக்கும். நீண்ட நாள் சேர்த்த செல்வத்தைக் கணப்பொழுதில் பெரும்பாடு கரைத்து விடுவதுபோல் கரையில் காவல் நிற்கும் மணல்மேடுகளைச் சிறிது சிறிதாய்க் கரைத்த பின்னும் திருப்தியின்றி, மீண்டும் மீண்டும் தாக்கி இடிகரையை உண்டாக்கும் அலைகள். தாழை தாவரத்தின் தாங்குவேர்களும் ராவணன் மீசை தாவரமும் நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் புற்களும் படர்தாவரங்களும் தங்களைத் தாங்கி நிற்கும் மணல் குன்றுகளைக் காக்க அலையுடன் ஜீவமரணப் போராட்டங்களை நடத்துகின்றன.
ஒரு சமயம் படிகம்போல வெண்தரையைக் காட்டும் தெளிநீர். மெலிதான இளம் பச்சையும் இளநீலமுமாய்த் தெளிந்து, கண்ணயரும் பச்சிளம் குழந்தையைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுவதாகப் பாவிக்கிறது கடல். அப்பால் உறைநீலமாகத் தொடுவானம்வரை நீண்டு வியப்பூட்டுகிறது கடற்பரப்பு. இடையிடையே கைதேர்ந்த ஓவியன் அநாயாசமாய் வீசும் தூரிகையின் பதிவுகளாகக் காய்ந்துபோன இலைச்சருகின் வண்ணம். இளங்காற்றின் வீச்சில் அலைப்பரப்பில் நுரைத்து எழும் மெலிதான வெண்திட்டுகள். மெதுவாக உருக்கொடு உயர்ந்து வளைந்து மடித்து வீசியடிக்கும் அலைகளை, அந்தச் சிறுகணத்தின் காட்சியை மனத்துக்குள் நிழற்படமாகப் பிடித்துவிட முயன்று முயன்று தோற்றுப்போகிற சுகம். கைநிறைய அள்ளிவந்து என் முகத்தில் உப்பைத் தெளிக்கும் கடற்காற்று.
இளங்காற்றும் மணற்பரப்பும் ஓயாது நிகழ்த்தும் சல்லாபத்தின் பதிவுகளாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் பட்டு மணல்வெளியில், அது பொறுமையாக எழுதியும் மாய்த்தும் மீண்டும் எழுதும் கோலங்கள். காற்று வரிவரியாய்க் கிழித்திருக்கும் மணல் மெத்தையை உதைத்துச் சிதறடித்தபடி மாலைப் பொழுதில் அதன்மேல் நடந்து போகும் சுகம்.
நடுப்பகலின் வேனிலிலும் இதமான தழுவலாய்க் காலை நனைத்துச் செல்லும் அலைகளின் குளிர்ச்சி. சிற்பியின் நேர்த்தியை வெல்லும் வடிவமைப்புடன் தேசிய நெடுஞ்சாலையை நினைவுபடுத்தும் துறவி நண்டுகளின் தடங்கள். மணல் வெளியில் சர்க்கஸ் சாகச வீரனின் துல்லியத்துடன் இடமும் வலமும் திரிந்து ஓடி நம் அண்மைக்கு அஞ்சி சிறுசிறு குழிகளில் ஓடி ஒளிகிற குழிநண்டுகள்.
முன்னிரவும் மாலைப் பொழுதும் கைகுலுக்கிக் கொள்ளும் வேளையில் தொடுவானத்தில் நீறுபூத்த நெருப்புப் பந்தாய் ஜால வடிவங்கள் காட்டிக் கடற்குளியலுக்குத் தயாராகும் சூரியன். படுவோட்டுக்கும் இரவு மீன்பிடித்தலுக்கும் தொலைவுப் பயணம் மேற்கொள்ளும் காவிப்பாய் விரித்த கட்டுமரங்கள் தொலைவில் கறுப்புப் பிரமிடுகளாக வரிசை காட்டும் அழகு. வாழ்க்கை ஓட்டத்தை முடித்துக்கொடு கரையொதுங்கிய சிறுசிறு ஜீவன்களும் தாழம்பூவும் பரப்பும் வாசங்களின் அசாதாரணக் கலவை. அலைக்கு அப்பால் கவிழ்ந்து மிதக்கும் மரங்களில் வரிசையாய் அமர்ந்திருந்து கதைபேசும் கடற்புள்களின் கூட்டம்.
(அடுத்த வாரம்: கடலுக்குள் ஒரு பட்டணம்)
கட்டுரையாளர், பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் – வள அரசியல் ஆய்வாளர் தொடர்புக்கு: vareeth59@gmail.com