உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 51: செலவின்றி பண்ணை வளத்தைப் பெருக்கலாம்

பாமயன்

இரண்டு பயிர்களை அருகருகே வளர்க்கும்போது இரண்டுக்கும் கிடைக்கும் நன்மை, தீமைகள் பற்றிக் கவனித்து, அவற்றை ஒரு தனிப் பட்டியலாகத் தயாரித்துக்கொள்ளலாம். அதற்குப் பயிர்களின் பணிகளை வைத்து, சில அடிப்படைக் கோட்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.

1. மக்களின் உணவுக்கான பயிர்கள்

2. கால்நடைகளின் உணவுக்கான பயிர்கள்

3. மண்ணுக்கு உணவளிக்கும் பயிர்கள்

4. குறைந்த இடத்தில் விளைச்சல் தரும் கொடி வகைப் பயிர்கள் - கொடிகள் செங்குத்தாக வளர்ந்து தரையை மிச்சப்படுத்துகின்றன

5. கொடிகளைத் தாங்கி நிற்கும் பயிர்கள்

6. மண்ணுக்குள் இருந்து சத்தை வெளிக்கொண்டுவரும் ஆழமான வேர்களைக் கொண்ட பயிர்கள்

7. மண்ணை மூடிவைக்கக்கூடிய போர்வைப் பயிர்கள் (மூடாக்கு போல) - இவை ஈரப்பதத்தைக் காக்கின்றன, களைகளைக் கட்டுப்படுத்துகின்றன

8. பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் பயிர்கள், பூச்சிவிரட்டியாகப் பயன்படும் பயிர்கள்

இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்யும் பயிர்களை முறையாக இணைப்பதன் மூலம் பண்ணையின் வளத்தை அதிகரிக்கலாம்.

பல விலங்கினங்களையும் இந்த இணக்கத் தொகுதிக்குள் சேர்க்கலாம். குறிப்பாகப் பழத்தோட்டங்களில் கோழிகள் உலாவி வரும்போது, கீழே விழுந்த பழங்களை அவை உடனடியாகத் தின்று சுத்தம் செய்துவிடும். அதனால் பழ ஈ போன்ற தொல்லைகள் தவிர்க்கப்படும். கூடுதலாக, மண்ணுக்குச் சாணமும் கிடைக்கும்.

மரக்கா போன்ற வெட்டுமரம் வளர்க்கும் இடங்களில் மரப்பட்டைகளுக்குள் சில புழுக்கள் இருந்துகொண்டு மரத்தை அழித்துவிடக் கூடும். இத்தகைய இடங்களில் தேன் தரும் பூக்களை வளர்த்தால், அவை பறவைகளை ஈர்க்கும். பறவைகளில் குறிப்பாக மரங்கொத்தி போன்றவை, இப்படிப்பட்ட மரப்பட்டைகளுக்குள் ஒளிந்திருக்கும் புழுக்களை வேட்டையாடித் தின்றுவிடும்.

ஈரம் படிந்த நிலங்களில், அதிகம் தண்ணீர்த் தேங்கும் தோட்டங்களில் நத்தைகளின் தொல்லை இருக்கும். நத்தைகளைக் கட்டுப்படுத்துவதில் வாத்துகள் முக்கியப் பங்காற்றுகின்றன. மயில்கள் தொல்லை தரும் இடங்களில் நாய்களை வளர்த்துப் பழக்கப்படுத்திவிட்டால், மயில்களை அவை விரட்டிவிடும். பொதுவாக ஊர்ப்புறங்களில் மயில்கள் பெருகியதற்குக் காரணம், நரிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதுதான். மயில்களுக்கு இயற்கை எதிரிகள் இல்லாமல் போனதே இதற்குக் காரணம்.

(அடுத்த வாரம்: பண்ணையத்தில் பாங்கமைப்பு)

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர் தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

SCROLL FOR NEXT