மரபணு மாற்றமில்லா உணவு, பாரம்பரிய விதை திருவிழா தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்யாலாயா பள்ளியில் பிப்ரவரி 9 அன்று நடந்தது. பாதுகாப்பான உணவு கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தத் திருவிழா 'விதை சத்தியாகிரகம்' எனும் கருத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
அந்தத் திருவிழாவில் இடம்பெற்றிருந்த மரபணு மாற்றமில்லா பாரம்பரிய விதை அங்காடிகள், மரபணு மாற்றமில்லா இயற்கை வழி உணவு அங்காடி, மரபணு மாற்றமில்லா பாரம்பரிய பருத்தி அங்காடி, விதை பரிமாற்ற அங்காடி உள்ளிட்ட இயற்கை சார் அங்காடிகள் பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தன. இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட கைராட்டை பயிற்சியில் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
சிறு தானிய நாள்காட்டி
இந்தத் திருவிழாவில், நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான 'பாதுகாப்பான உணவு கூட்டமைப்பு' சிறு தானிய நாள்காட்டி ஒன்றையும் வெளியிட்டது. அதில் சிறுதானியங்கள் குறித்த குறிப்புகள், ஊட்டச்சத்து விவரங்கள், கவனம் ஈர்க்கும் சமையல் குறிப்புகள் போன்றவை இடம்பெற்றிருந்தன.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு நிகழ்வில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் உறுப்பினரான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், முன்னாள் இஆப. அதிகாரியான திருமதி ஷீலா நாயர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அவர்கள் ஆற்றிய உரை பாரம்பரிய விதை, மரபணு மாற்றமில்லா உணவு, இயற்கை விவசாயம் போன்றவற்றின் தேவையை அழுத்தமாக எடுத்துரைக்கும் விதமாக இருந்தது.
தங்க அரசி எனும் ஆபத்து
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் பேசும்போது, "நாங்கள் மரபணு தொழில்நுட்பத்திற்கு எதிரானவர்கள் அல்ல; அதை உணவுப் பொருட்களில் கொண்டு வரும்போதே எதிர்க்கிறோம். ஏற்கனவே உள்ள மரபணுவுடன், அதற்குத் தொடர்பு இல்லாத நுண்ணுயிரைச் சேர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகளை நாம் அறிய முடியாது. மரபணு மாற்றப்பட்ட விதைக்கும், ஹைபிரிட் விதைக்கும் வித்தியாசம் உள்ளது. ஒவ்வொரு மரபும் ஒரு என்சைம் வெளியிடும். ஆனால் மரபணு மாற்று விதைகள் மக்களுக்கு அலர்ஜி உள்ளிட்ட நோய்களை ஏற்படுத்தும். இது மட்டுமல்லாமல் மரபணு மாற்றப்பட்ட செடிகளின் இலை தழைகள் மண்ணில் மக்கும்போது, அவை மண்ணில் உள்ள நல்ல நுண்ணுயிர்களையும், மண்புழுவையும் பாதிக்கும். இது நிலத்தின் நலத்தைக் குறைக்கும். முக்கியமாக, மரபணு மாற்றப்பட்ட செடிகளின் பூக்களால் தேனீக்களும் வண்டுகளும் பாதிக்கப்படும்" என்று தெரிவித்தார்.
"ஒரு காலத்தில் உப்பு என்பது நேரடியாகத் தெருவில் விற்பனை செய்யப்படும் பொருளாக இருந்தது. எப்போது அயோடின் உப்பு வந்ததோ, அதன் பின்னர் உப்பு என்பது தொழிற்சாலையில் உருவாக்கி, விற்கப்படும் பொருளாக மாறியது. இன்று இதே நிலை அரிசிக்கும் ஏற்படும் அபாயத்தை 'தங்க அரிசி' உருவாக்கி இருக்கிறது. அரிசியைப் பொடித்து மாவாக்கி, அதில் இரும்புச் சத்தை சேர்த்து, மீண்டும் அரிசியாக்கி 'தங்க அரசி' என விற்கப்படுக்கிறது. இதன் காரணமாக, வரும் நாள்களில் அரிசியை விவசாயிகள் நேராக விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்." என்று அவர் தெரிவித்தது வருநாள்களில் நாம் சந்திக்க இருக்கும் வரவிற்கும் ஆபத்தை அடிகோலிட்டு காட்டியது.
விழிப்புணர்வு அவசியம்
மழை நேரடியாக மண்ணில் விழுந்தால் மழைநீர் மண்ணுக்குச் சொந்தம்; அந்த நீர் மண்பானையில் விழுந்தால், அது அதன் உரிமையாளருக்குச் சொந்தம். அந்த மண்பானை பெரும் நிறுவனம் தந்ததாக இருந்தால், அந்த தண்ணீர் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமாகி விடும். மரபணு மாற்றப்பட்ட பயிர் என்பது பெரும் நிறுவனத்துக்குச் சொந்தமான மண்பானையில் விழும் மழைநீரைப் போன்றது. இந்த ஆபத்தான சூழல் குறித்த விழிப்புணர்வுடன் நாம் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வு அழுத்தமாக எடுத்துரைத்தது. முக்கியமாக, நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தை அது வலியுறுத்தியது.