உயிர் மூச்சு

நம்மாழ்வார் மொழி

ஆதி

நம்மாழ்வார் நினைவு நாள்: டிச.30

தமிழகத்தில் இயற்கைவழி வேளாண்மை பெருமளவு பரவலாவதற்குக் காரணமாகவும் பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் திகழ்ந்தவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார். அவருடைய மூன்றாவது நினைவு நாளில் (டிசம்பர் 30) அவர் நமக்கு விட்டுச் சென்ற சில முக்கிய வேளாண் அறிவுரைகள்:

“5,000 கோடி கடன் வாங்கின விஜய் மல்லையா தற்கொலை பண்ணிக்கலை. அவருக்குக் கடன் கொடுத்த வங்கி ஆபீஸருங்க யாரும் தற்கொலை பண்ணிக்கலை. அந்தக் கடனைக் கொடுக்கச் சொன்ன நம்ம அமைச்சருங்க தற்கொலை பண்ணிக்கலை. ஆனா, நமக்கெல்லாம் சோறு போடுற நம்ம ஏழை உழவன் சில ஆயிரம் கடனைத் திருப்பிக் கட்ட முடியாம தற்கொலை பண்ணிக்கிறான். ஏன்னா, உழவனுக்கு மானம்தான் பெரிசு!''

“மக்களிடம் பழகிய பின்னர்தான், நான் கற்றவை எல்லாம் அறிவே இல்ல. உண்மையான அறிவு மக்களிடம்தான் இருக்குங்கிறது புரிஞ்சுது”

“புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த ஒரு பெண்மணி, 'அடி காட்டுல, நடு மாட்டுல, நுனி வீட்டுல... அது என்ன?' என்று என்னிடம் ஒரு விடுகதை போட்டார். எனக்கு விடை தெரியலை. 'நெல்லு அறுக்கும்போது அடிக்கட்டையை வயக்காட்டுலயே விட்டுடுறோம். நடுவுல இருக்குற வைக்கோலை மாட்டுக்குக் கொடுக்கிறோம். நுனியில் இருக்கிற நெல்லை வீட்டுக்கு எடுத்துட்டுப் போறோம்' என்று அந்தப் பெண் விடையைச் சொன்னார். இந்த நிலை மாறி இன்னைக்கு வைக்கோலை எரிக்கிறோம். நெற்பயிரின் உயரத்தைக் குறைக்கிறோம். மாட்டுக்கான உணவையும் மறுக்கிறோம். இதுதான் விவசாயம் சந்திக்கிற பிரச்சினைக்கு மூலக் காரணம்.”

“பசு கன்று போடும், ஆடு குட்டி போடும், அதுக்கு பதிலா கம்பெனிங்க வாங்கச் சொல்லும் டிராக்டர் குட்டி போடுமா?

“அரிசியை மட்டுமே மானிய விலைல கொடுப்பதால பசியை ஒழிக்க முடியும். ஆனால், சத்துப் பற்றாக்குறையை ஒழிக்க முடியாது. கிராமப்புறத்துல இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தாத காரணத்தால, மக்கள் நகரங்களை நோக்கி நகர்றாங்க. கிராமப்புறங்கள்ல வேலைவாய்ப்பும் வருவாயும் குறையுது. அதனால கிராமப்புற மக்களுக்குச் சத்துணவு பற்றாக்குறை ஏற்படுது. அரசாங்கத்தின் வளர்ச்சித் திட்டம் அனைத்தும் நிலத்தை விட்டு மக்களை வெளியேற்றுவதா இருக்கு.”

“என்னுடைய நோக்கங்கறது, இந்த நாட்டுல உணவு உற்பத்தி செஞ்சி குவிக்கிற 52% பேரு சிறு விவசாயிங்க மேலதான். நாட்டோட பசியைத் தீர்க்குற அவங்களோட நிலமை ரொம்ப மோசமா இருக்கு. மேலும் மேலும் வறுமையில தற்கொலைக்குத் தள்ளப்படுற புழுதியிலும் புழுதியாய் இருக்கிற அந்த விவசாயிங்கள, ஒருபடி மேல உயர்த்தி விடணும். அதே போல என்னை மாதிரி ஆயிரம் பேரைக் கண்டறிஞ்சு அவங்களுக்குப் பயிற்சி கொடுத்து, நாடு முழுவதும் பரவ விடணும்.”

“நம்முடைய முயற்சிங்கிறது விதையைப் போல, அதை விதைச்சுக்கிட்டே இருப்போம். முளைச்சா மரம், இல்லேன்னா மண்ணுக்கு அது உரம்.”

“விதைத்தவன் உறங்கினாலும், விதைகள் உறங்காது.”

SCROLL FOR NEXT