உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 14: முட்டையிட்ட அரிய தருணம்

ஏ.சண்முகானந்தம்

வண்ணத்துப்பூச்சிகளின் பலவிதமான செயல்பாடுகளைப் பதிவு செய்திருந்தாலும், அவை முட்டை இடுவதைப் பார்க்கும் வாய்ப்பு மட்டும் இல்லாமலே இருந்துவந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு களக்காடு பயணத்தில், ஒரு மலைச்சரிவுக்குச் சென்றிருந்தோம். அழகிய புல்வெளிகள் நிறைந்த அந்த மலைச்சரிவு கண்ணுக்கு இனிமையாகவும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தந்தது.

வெகு தூரத்தில் மேகங்கள் நிறைந்த நீல வானில் பறந்து கொண்டிருந்த பருந்தைத் துல்லியமாக அடையாளம் காண முடியவில்லை. அதனால் பூச்சிகளைத் தேடிப் புல்வெளிக்குள் மெல்ல ஊர்ந்து செல்லத் தொடங்கினேன். ஊசித்தட்டான், பட்டாம்பூச்சிகளைப் பதிவு செய்துகொண்டிருந்த நேரத்தில், புல்வெளிகளின் அடிப்பகுதியில் புதர் தாவிகள் இருப்பதைக் கண்டு, ஒளிப்படம் எடுக்க ஆரம்பித்தேன். புதர் தாவி பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சிகளைப் போன்றிருந்தாலும், மிகவும் சிறிய உடலமைப்பையே கொண்டிருக்கும்.

அந்தப் புதர் தாவிகளைப் பதிவு செய்துவிட்டு, இரண்டு மூன்று அடிகள் தவழ்ந்த நிலையிலேயே சென்றிருப்பேன். ஒரு புதர் தாவி, சிறிய செடியொன்றின் கீழ்ப் பகுதியில் வந்து அமர்ந்தது. புதர் தாவியின் மேல் கவனத்தைக் குவித்து, ஒளிப்படம் எடுப்பதற்குக் கருவியோடு நெருங்கினேன். நீண்ட காலமாகக் காத்திருந்த அரியதொரு காட்சி அன்றைக்குக் கிடைத்தது. தனது உடலின் இறுதிக் கண்டத்தை வளைத்து, சிறு செடியில் முட்டையை இட்டது அந்தப் புதர் தாவி. நான் படமெடுத்து முடித்தவுடன் அதுவரை என்னவோ எனக்காகவே காத்திருந்ததுபோல, சட்டென்று அது பறந்து போனது.

புல்வெளிகளின் அடிப்பகுதிகளில் ஒளிப்படம் எடுக்கும்போது, சிறுசிறு பூச்சிகளின் கடி, கை-கால்களில் முட்கள் குத்துவது எனப் பல இடர்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அன்றைக்கு அந்தப் புதர் தாவிப் பறந்து சென்ற பிறகே, உடலில் முட்கள் குத்தியிருந்த வலி எனக்குத் தெரிய ஆரம்பித்தது.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT