பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்கள் பெரும்பாலும் இயற்கையாக வளர்ந்த காடுகளை முற்றிலும் அழிக்காமல் சிறிது மாற்றங்கள் செய்தோ அல்லது ஒரு பகுதியில் நன்கு வளரும் பயன் தரும் மரங்களைத் தோட்டங்களில் நட்டோ உருவாக்கப்பட்டவை.
தற்போது இத்தகைய தோட்டங்கள் குறைந்தபட்சம் 400 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இடங்களிலும்கூட உருவாக்கப்படுகின்றன. முன்பே நாம் கண்டதுபோல் தென்னை மரங்கள் நிகோபார் பழங்குடியினருடைய பொருளாதாரத்தின் உயிர்நாடி. இருந்தாலும் பன்முகத்தன்மை கொண்ட வீட்டுத் தோட்டங்கள், ஒவ்வொரு பழங்குடியினக் குடியிருப்புப் பகுதியிலும் காணப்படும் இன்றியமையாத ஒரு நிலப் பயன்பாட்டு முறை.
இதைத் தவிர, அந்தமான் தீவுகளில் மேட்டுப்பாங்கான மற்றும் மலைச்சரிவுகளில் பின்பற்றப்படும் விவசாய முறைகள் பெரும்பாலும் வீட்டுத் தோட்ட வேளாண் காடுகளைச் சார்ந்தே அமைந்துள்ளன.
பாக்கும் வாழையும்
அந்தமானில் பின்பற்றப்படும் இம்முறையில் நிலஅமைப்பு, சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் தன்மையைப் பொறுத்து மரங்கள், காய்கறிகள் வேறுபடுகின்றன. இத்தோட்டங்களில் பெரும்பாலும் பாக்கு மரங்கள் அதிகப் பரப்பளவில் வளர்க்கப்படுகின்றன. மேலும், தென்னைக்கு அடுத்தபடியாகப் பாக்கு மரங்களே முதன்மையானவை. சில இடங்களில் தென்னையிடையே பாக்கு ஊடுபயிராகவும் பயிரிடப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக அதிகமாகப் பயிரிடப்படுவது சீனாகேழா எனப்படும் கற்பூரவல்லி வகையைச் சேர்ந்த வாழை. கிழங்கு வகைகளான கருணை, சர்க்கரைவள்ளி, சிறுகொடி, சேம்பு மற்றும் நிகோபார் கொடி வகைகள் பயிரிடப்படுகின்றன. இதைத் தவிர உள்நாட்டு, புதிய ரகக் காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன.
வேலி மரங்கள்
தோட்டத்தைச் சுற்றி கிளைரிசிடியா, காட்டு அகத்தி, வில்வம் போன்றவை வேலியாகப் பேணப்படுகின்றன. தோட்டத்தின் ஒருபுறம் மூன்றுக்கும் மேற்பட்ட பசுமைமாறாக் காட்டு மரங்களான கர்ஜன், படாக், பாதாம் போன்றவற்றைக் காண முடியும். இத்தகைய மரங்கள் அந்தமானில் குடியிருப்புகள் அமைவதற்கு முன்பே பரவியிருந்த காடுகளின் எஞ்சிய பகுதிகள்.
இவற்றைத் தவிரத் தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்தோரின் வீட்டுத் தோட்டங்களில் புளி, இலவம் பஞ்சு மரங்களையும் காண முடியும். நிகோபார் பழங்குடியினரின் வீட்டுத் தோட்டங்களில் உணவுக்காகப் பயன்படும் தாழம்பூ மற்றும் பலவகை மூலிகைகளும் காணப்படுகின்றன.
(அடுத்த வாரம்: உணவுத் தன்னிறைவின் முதுகெலும்பு)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com