வரவேற்கத்தக்க மாற்றம்
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் நடைமுறையை அக்டோபர் மாதம் இந்தியா நிறைவு செய்தது. ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து நிலக்கரியைச் சார்ந்து மின் தயாரிப்பைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டும். காடுகளின் பரப்பை அதிகரிக்க வேண்டும். இப்படிப் பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதில் இந்தியா பங்கேற்றிருப்பது வரவேற்கத்தக்க மாற்றம். அதேநேரம், தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளைத் தொடர்வாரா என்பது மிகப் பெரிய சந்தேகம்தான்.
டெல்லி கார்களுக்குக் கட்டுப்பாடு
நவம்பர் மாதம் கடுமையான காற்று மாசுபாட்டால் திணறிய தலைநகர் டெல்லியில், முன்னதாக நடைமுறைப்படுத்தப்பட்ட கார் எண்ணிக்கைக்கான கட்டுப்பாடு நல்ல பலனை அளித்தது. 15 நாட்களுக்குக் கார்களில் செல்வதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு தொடர்பான ஆய்வுகள் இதைத் தெரிவித்தன. அது மட்டுமில்லாமல் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திக் காற்று மாசுபாட்டை குறைப்பது எப்படி என்பதும் இந்த நடவடிக்கை மூலமாகத் தெரிய வந்தது.
ரியல் எஸ்டேட் விலக்கு
தேசிய அளவில் வளமான நிலப்பரப்பைப் பெருமளவு ஆக்கிரமிப்பதும் அழிப்பதும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான். இந்நிலையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்வதில் இருந்து ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஜூலை மாதம் விலக்கு அளித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அனல் மின் நிலையங்கள் மூடல்
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட அனல் மின்நிலையங்கள் (என்.டி.பி.சி ஃபராக்கா ஆலை, கர்நாடகம் ராய்ச்சூர் அனல் மின் நிலையம், மகாராஷ்டிரா அனல் மின் நிலையங்கள்) மூடப்பட்டன, அல்லது உற்பத்தியைக் குறைத்துக்கொண்டன. இதற்குக் காரணம் தண்ணீர் பற்றாக்குறை. சுற்றுச்சூழலை மோசமாக மாசுபடுத்தும் நிலக்கரி சார்பு மின் நிலையங்கள் குறைவது சுற்றுச்சூழல் மாசுபாட்டை மட்டுப்படுத்தும் என்று செயல்பாட்டாளர்களால் வலியுறுத்தப்படுகிறது.
குழப்பிய தேசிய வனக் கொள்கை
புதிய தேசிய வனக் கொள்கை -2016 வரைவு மசோதாவை மத்திய அரசு திடீரெனத் திரும்பப் பெற்றது. வலைத்தளத்தில் தவறுதலாகப் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதாக அதற்கு விளக்கத்தையும் அளித்தது. இந்த வரைவு மசோதா 2006 வன உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச்செய்து பழங்குடிகளுக்கு எதிரானதாக அமையும், பெரு நிறுவனங்களுக்குச் சார்பாகக் காட்டை அழிக்கும் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்ததை அடுத்து, மத்திய அரசு திரும்பப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொள்கையை வடிவமைக்கும் பொறுப்பைப் போபாலில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்துக்குச் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.