இயந்திரங்களின் உதவியுடன் கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஒரே பயிரைப் பயிரிட்டு, அதிக மகசூல் ஒன்றே குறிக்கோளாய் மாறிவிட்ட நவீன வேளாண்மை முறைகள் நிலையற்றவை. இயற்கைக்கு முரணானவை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவரும் கருத்தாக மாறி வருகிறது. இத்தகைய முறைகள் வேளாண்மையின் பன்முகத்தன்மையை குலைப்பதோடு பருவநிலை மாறுபாட்டால் பெரிதும் பாதிக்கப்படக்கூடியவை என்பது முதன்மைக் காரணங்கள்.
அதேநேரத்தில் வேளாண்மைக்குப் பயன்படும் நிலத்தின் மொத்தப் பரப்பளவு குறைந்துவருகிறது. மக்களின் வாழ்க்கை முறை விரைவாக மாறிவரும் இக்காலக் கட்டத்தில் காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள், மருத்துவக் குணமுள்ள மற்றத் தாவரங்களை உணவில் சேர்த்துக்கொள்வதும் பண்பு குறைந்து வருகிறது. மேலும் பல இடங்களில் நிலங்கள் சரியாகப் பயன்படுத்தப்படுவதும் இல்லை.
வீட்டுத் தோட்டங்களின் அவசியம்
இப்படிப்பட்ட சூழலில் அந்தமான் நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினரும், பல்லாண்டுகளுக்கு முன் இந்தியத் துணைக்கண்டத்தில் இருந்து குடிபெயர்ந்தோரும் பயன்தரும் தோட்டங்களைத் தங்கள் வீடுகளைச் சுற்றி உருவாக்கிப் பலன் பெற்று வருகிறார்கள். அதேநேரம், வேளாண்மையின் பன்முகத் தன்மையையும் இவர்கள் பேணிவருகின்றனர். இத்தகைய தோட்டங்களை மற்ற வெப்பமண்டலத் தீவுகளான இந்தோனேசியா, இலங்கை, மாலத்தீவிலும் காண முடிகிறது. லட்சத்தீவிலும் இத்தகைய தோட்டங்கள் காணப்பட்டாலும், அவற்றின் அளவு சிறியது. இத்தகைய வீட்டுத் தோட்டங்கள் இத்தீவுகளின் பாரம்பரியம் என்றே கூறலாம்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் விவசாய நிலங்களின் மொத்தப் பரப்பளவில் 63 விழுக்காடு இத்தகைய வீட்டுத் தோட்ட வேளாண்காடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகையான தோட்டங்களில் பயன்தரும் மரங்களோடு காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், மருத்துவத் தாவரங்களும் வளர்க்கப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான கிழங்கு வகைகள், காய்கறிகள் உள்நாட்டு ரகங்கள்.
இவற்றின் மரபணு வேறுபாடுகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை, இந்த மரபணுக்கள் நோய், பூச்சி தாக்குதலில் இருந்து பயிரைக் காக்கும் திறனைத் தரவல்லவை. இவையனைத்தும் இன்றைய ‘வேளாண்காடு வளர்ப்புமுறை’ தத்துவத்தைப் பின்பற்றியே அமைந்துள்ளதுபோல் காணப்படுகிறது. இந்த வீட்டுத் தோட்டங்கள் இந்த முறைக்கு முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய தோட்டங்கள் அறிவியல்பூர்வமாகப் பருவநிலை மாற்றங்களால் மிகக் குறைந்த அளவே பாதிக்கப்படுவதால் நிரந்தரத்தன்மை கொண்டது.
(அடுத்த வாரம்: பயிரிலும் பன்முகத்தன்மை)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com