வானில் இருந்து பொழியும் ஒரு சொட்டு நீரையும் சுற்றுச்சூழலைச் சீர்குலைக்காமல் மனிதனுக்குப் பயன்படுத்தக்கூடிய பாரம்பரிய நீர்சேகரிப்பு முறைகளை மீட்டெடுக்க முயற்சித்த சூழலியல் செயற்பாட்டாளர் அனுபம் மிஷ்ரா, கடந்த வாரம் காலமானார்.
1948-ம் ஆண்டு பிறந்த இவர் ஒரு காந்தியவாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர், காந்தி சமாதான நிறுவனத்தை நிறுவிய உறுப்பினர்களில் ஒருவர். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர் மேலாண்மையாளர். சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளுக்காக மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்திரா காந்தி பரியாவரன் புரஸ்கார் விருதை 1996-ம் ஆண்டில் பெற்றார்.
நவீன இந்தியாவின் முக்கியச் சூழலியல் பிரச்சினை தண்ணீர் பற்றாக்குறை. வழக்கொழிந்து வரும் மரபு சார்ந்த மழைநீர் சேகரிப்பு முறைகளை அனுபம் மிஸ்ரா தொடர்ந்து ஆய்வு செய்தார். அதில் கிடைத்த பாடங்கள் மூலம் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள கிராமங்களில் நீர் மேலாண்மை செய்வதற்கு வழிகாட்டியுள்ளார்.
இந்தியப் பாலைவனங்களில் அந்தக் காலத்தில் மக்கள் எப்படி உழவு செய்வதற்காக எளிமையான, அழகியல் மிகுந்த கட்டிட முறைகளைக் கடைப்பிடித்தார்கள் என்பது தொடர்பாகவும் இவர் ஆய்வு நடத்தியுள்ளார்.
இந்தியா முழுவதும் மேற் கொண்ட பயணங்களின் மூலம் மழைநீரைப் பயன்படுத்தியே உழவு நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என்பதைத் தான் வலுவாக நம்புவதாகக் குறிப்பிட்டவர். நவீன இந்தியாவிலும் அதைச் சாத்தியப்படுத்த முயற்சித்தவர்.
- நேயா