பறவையியலாளர் சாலிம் அலியின் 120-வது பிறந்த ஆண்டு இது. அதையொட்டி, இனிதே நடந்துமுடிந்திருக்கிறது ‘தமிழ்ப் பறவை நோக்கர்கள் சந்திப்பு'!
பறவை நோக்கலை, பறவைகளைப் பற்றிய புரிதலை, சூழலுக்கு அவை தரும் நலன்களைத் தமிழர்களிடையே அதிகளவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஒருமித்த எண்ணம் உடைய பறவை நோக்கர்களால் ஏற்படுத்தப்பட்டது 'தமிழ்ப் பறவை நோக்கர்கள்' எனும் குழு.
2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் குழு, தனது முதல் சந்திப்பைத் திண்டுக்கல்லில் நடத்தியது. இரண்டாவது சந்திப்பு, கோவையில். இந்த ஆண்டு சந்திப்பு கடந்த 12, 13-ம் தேதிகளில், திருநெல்வேலியில் உள்ள பி.எஸ்.என். பொறியியல் கல்லூரியில் நடந்தது.
போட்டியான பறவை நோக்கல்
இந்தச் சந்திப்பில் சாந்தாராம், சு. தியடோர் பாஸ்கரன், ‘மெட்ராஸ் நேச்சுரலிஸ்ட்ஸ் சொசைட்டி'யின் கே.வி. சுதாகர், மதுரையைச் சேர்ந்த பத்ரி நாராயணன் போன்ற பிரபலமான பறவை நோக்கர்கள் கலந்துகொண்டனர்.
மாநிலம் முழுவதிலுமிருந்து வந்த பறவை நோக்கர்களை வரவேற்ற சாந்தாராம், “இந்தக் காலத்தில் பறவை நோக்குதல் ஒரு போட்டியாக மாறிவிட்டது. யார் புதிய பறவையினத்தைக் கண்டுபிடிக்கிறார் என்பதுதான் பெரிய கேள்வியாக இருக்கிறது. பறவை நோக்குதலுக்கு இப்படிப்பட்ட போட்டி பயன்படாது. நம்மிடையே பொதுவாகக் காணப்படும் பறவைகள் மீதும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
பத்து வருடங்களுக்கு முன்பு சென்னையில் மஞ்சள் மூக்கு ஆள்காட்டி பறவைகளின் எண்ணிக்கை குறைந்திருந்ததைப் பார்த்தேன். தற்போது மதுரையில் அவற்றின் எண்ணிக்கை குறைவதாக அறிகிறேன். ஒரே நாளில் ஒரு பறவை இனம் முற்றிலும் அழிந்துவிடாது. படிப்படியாகத்தான் அவற்றின் அழிவு நிகழும். அதைத் தடுப்பது நம் கையில்தான் உள்ளது” என்றார்.
இலக்கியத்தில் சூழல் எப்போது?
சு. தியடோர் பாஸ்கரனின் உரை பல கேள்விகளை எழுப்புவதாக இருந்தது. “நான் தற்சமயம் ஆங்கில எழுத்தாளர் அமிதவ் கோஷ் எழுதிய 'தி கிரேட் டிரேஞ்ச்மென்ட்' எனும் புத்தகத்தைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில், சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றி இலக்கியப் புனைவுகளில் பதிவு செய்வது குறித்து அவர் விவாதிக்கிறார். ஆங்கிலத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை அடிப்படையாகக்கொண்டு பல நாவல்கள், கதைகள் எழுதப்பட்டுவிட்டன. தமிழில் அப்படி எத்தனை படைப்புகள் இருக்கின்றன? சா.கந்தசாமியின் ‘சாயாவனம்', ஜெயமோகனின் ‘காடு' ஆகியவற்றைத் தாண்டி நமது நினைவுக்கு வேறு எது வருகிறது? ”.
“இன்றைக்குப் புதிதாக அச்சிடப்பட்டிருக்கும் கரன்சி நோட்டுகளில் செயற்கைக்கோள் படம் அச்சிடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாகக் காட்டுயிர், பறவை படங்களைப் பயன்படுத்தியிருக்கலாமே? இந்தியாவுக்கே உரித்தான ஓரிடவாழ்வி கடமான் படத்தை அதில் அச்சிட்டிருக்கலாம். முன்பெல்லாம் நமது கரன்சி நோட்டுகளில் காண்டாமிருகம், புலி படங்கள் அச்சிடப்பட்டன. நமது ரிசர்வ் வங்கியின் சின்னமே புலிதான். அப்படியிருக்கும்போது, நமது அரசு ஏன் இயற்கை, சூழல், காட்டுயிர்கள், பறவைகளின் படங்களைப் பயன்படுத்துவதில்லை. ஏனென்றால், இயற்கையும் சுற்றுச்சூழலும் அரசுக்குக் கண்துடைப்பு மட்டுமே!” என்று அவர் முன்வைத்த விமர்சனம் சிந்திக்க வைப்பதாக இருந்தது.