சென்னை மாநகரில் திரும்பிய பக்கமெல்லாம் வானுயர்ந்த கான்கிரீட் கட்டிடங்களாகவே தெரிகின்றன. இங்கு வயல்கள் இல்லை. என்றாலும் வீட்டு மாடிகளில், தரைத் தளத்தில் கிடைக்கும் சொற்ப இடத்தில் தோட்டம் அமைத்து, ஆரோக்கியமான காய்கறிகளை அறுவடை செய்யும் மாநகர வேளாண் ஆர்வலர்களை ஆங்காங்கே காண முடிகிறது.
நமது ஆரோக்கியமான வாழ்வுக்கு அவசியமான சத்தான காய்கறிகளை, நமது வீட்டு மாடிகளிலேயே உற்பத்தி செய்ய முடியும் என்று ‘தி இந்து’ நாளிதழ் மக்களிடையே வலியுறுத்திவருகிறது.
பெண்களின் கூடல்
‘தி இந்து’ தமிழ் நாளிதழின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’, ஈஸ்டர்ன் நிறுவனம் சார்பில் மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய கருத்தரங்கம், இலவசப் பயிற்சி சென்னை தியாகராய நகர் ராமகிருஷ்ணா மிஷன் மேல்நிலைப் பள்ளியில் கடந்த அக்டோபர் 23-ம் தேதி நடைபெற்றது. ‘வீட்டிலே வெள்ளாமை… விளையுது ஆரோக்கியம்’ என்ற தலைப்பிலான இந்தக் கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பங்கேற்பாளர்களில் பெரும்பகுதியினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் கருத்தரங்கில், மருத்துவர் கு.சிவராமன் பேசினார்.
முழுமையான விளக்கம்
கீரை வளர்க்கும் முறை, பஞ்சகவ்யா உரம், எளிய பூச்சிக்கொல்லி, அமிர்தக்கரைசல் தயாரிப்பு முறைகளை மென்பொருள் பொறியாளரும், இயற்கை வேளாண்மை ஆர்வலருமான பா.செந்தில்குமார் விளக்கினார். வீட்டுத் தோட்டம், விதை தயாரிப்பு, விதை நேர்த்தி, பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது குறித்த பங்கேற்பாளர்களின் சந்தேகங்களுக்கும் அவர் விளக்கமளித்தார்.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டவர்களுக்குத் தக்காளி, கத்தரி, மிளகாய், கீரை நாற்றுகள் வழங்கப்பட்டன. இந்தச் செடிகளைப் பெற்றுச் சென்றவர்களில் பலர் சிறப்பாக அவற்றைப் பராமரித்து வளர்த்துவருகின்றனர்.
ஊக்கப் பரிசு
செடிகளைச் சிறப்பாகப் பராமரித்து வரும் வாசக, வாசகிகளுக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், ஈஸ்டர்ன் சார்பில் ஊக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளன. காய்கறிச் செடிகளைச் சிறப்பாக வளர்த்து வருவோர், அது தொடர்பான படங்களை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். செடிகளைச் சிறப்பாக வளர்ப்பவர்களின் வீடுகளுக்கு இயற்கை வேளாண் ஆர்வலர் பா.செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் வருகை தருவார்கள். செடிகளை நன்றாகப் பராமரிப்பவர்கள் கண்டறியப்பட்டுப் பட்டியல் தயாரிக்கப்படும். அவர்களில் சிறப்பான முறையில் மாடித் தோட்டம், காய்கறிச் செடிகளைப் பராமரிக்கும் வாசக, வாசகிகள் பங்கேற்கும் இன்னொரு கூட்டம் நடத்தப்படும். அந்தக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ஊக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
ஆகவே, ஏற்கெனவே கருத்தரங்கில் பங்கேற்றுச் செடிகளைப் பெற்றுச் சென்றவர்கள் தற்போது தங்கள் வீட்டு மாடித் தோட்டம் எவ்வாறு உள்ளது என்ற தகவலையும், தோட்டம் தொடர்பான படங்களையும் செந்தில்குமாருக்கு அனுப்பலாம்.
தொடர்புக்கு: 99400 28160