உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 10: புல்லின் நுனியில் ஒரு பூச்சி

ஏ.சண்முகானந்தம்

கடந்த 2011-ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற காட்டுயிர் ஒளிப்படக் கண்காட்சி ஒன்றுக்குச் சென்றிருந்தேன். நாங்கள் தங்கியிருந்த புறநகர்ப் பகுதியில் புதர்ச் செடிகளும் புற்களும் வளர்ந்திருந்தன. கண்காட்சி நடைபெற்ற நேரம் தவிர மற்ற நேரத்தில் புற்கள், புதர்ச் செடிகளுக்கு இடையில் பூச்சிகளைத் தேட ஆரம்பித்தேன்.

பல வகையான வண்ணத்துப் பூச்சிகள், வண்டினங்கள், எறும்புகளின் நுட்பமான செயல்பாடுகளைப் பதிவு செய்துகொண்டிருக்கையில், புல்லின் நுனியில் அமர்ந்திருந்த மிகச் சிறிய வண்ணத்துப் பூச்சியொன்று (?) என் கவனத்தை ஈர்த்தது. அடர் மணல் பழுப்பு நிறத்தில், மஞ்சள் நிற வளையங்களுடன், சீப்பு போன்ற உணர்கொம்பு பட்டையாக இருந்தது. நெருங்கிச் சென்ற பிறகுதான், அது வண்ணத்துப் பூச்சியல்ல, அந்திப் பூச்சியென்பது புரிந்தது.

பூச்சிகளை எடுப்பதற்கேற்ற மேக்ரோ லென்ஸைப் பயன்படுத்தினாலும் அந்திப் பூச்சியைத் துல்லியமாகவும், சரியான கோணத்திலும் ஒளிப்படம் எடுப்பதற்குச் சிரமப்பட வேண்டியிருந்தது. சிறு புல்லின் நுனியில் அது அமர்ந்திருப்பது போன்ற காட்சியை எடுப்பதற்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன். கடைசியில் புல்லின் நுனியில் அது உட்கார்ந்த பிறகுதான் எதிர்பார்த்த காட்சி கிடைத்தது. புல்லின் நுனியில் அது அமர்ந்தபோதுதான், அதன் முழு அளவைத் தெரிந்துகொள்ள முடியும். அதன் சிறிய அளவை அப்போது உணர முடிந்தது.

வண்ணத்துப் பூச்சிகள் பகல் பொழுதில் மகரந்தச் சேர்க் கையில் ஈடுபடுகின்றன என்றால், அந்திப் பூச்சிகள் இரவில் அச்செயலைச் செய்கின்றன. இறகுகள் கிடைமட்டமாக இருப்பது, சீப்பு போன்ற உணர்கொம்பு, இலைகளுக்கு அடியில் தங்குவது, அடர்த்தியற்ற நிறம் போன்றவற்றைக் கொண்டு அந்திப் பூச்சிகளை (Moth) அடையாளம் காணலாம். எண்ணிக்கை, வகைப்படுத்துதல் போன்றவை இல்லாததால், அந்திப் பூச்சிகளுக்கான சரியான ஆங்கிலப் பெயர்கள், தமிழ்ப் பெயர்களைக் கண்டறிவது சிரமமாகவே இருக்கிறது.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT