இந்திய மல்பெரி பழம் என அறியப்படும் நோனி, தமிழில் நுணா, வெண்நுணா, மஞ்சநாத்தி என அழைக்கப்படுகிறது. தமிழகப் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் அந்த அதிசயத் தாவரம் நோனி. இதன் அனைத்துப் பாகங்களும் பல்வேறு காரணங்களுக்காக மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
பசுமை மாறாத் தாவரமான இது வெப்ப மண்டலப் பகுதியில் பரவிக் காணப்படும்போதும், அந்தமான் நிகோபார், இந்தோனேசியத் தீவுகளில் தோன்றியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தீவுகளில் வாழும் பழங்குடியினர் இதன் பழங்களை உணவாகவும், பிற பாகங்களோடு சேர்த்து மருந்துப் பொருளாகவும் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்திவருகின்றனர். இதுவரை குறைந்தது 200 வகையான பயன்தரும் உயிர்வேதிப் பொருட்களும், ஆற்றல்மிகு உயிர்கூட்டுப் பொருட்களும் இத்தாவரத்தில் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக இத்தாவர வேர்களில் உள்ள டாம்னகேந்தால், மொரின்டோன் புற்றுநோயைக் குணப்படுத்தும் தன்மையுடையது.
பன்முகத்தன்மை
நோனி தாவரத்தின் பயிர் பன்முகத்தன்மை மிகவும் சிறப்பானதெனப் போர்ட்பிளேரில் உள்ள மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. நோனி தாவரத்தின் புறத்தோற்றம், உயிர் வேதிப்பொருட்களின் தன்மை வளரும் சூழ்நிலைக்கேற்றதுபோல் வேறுபடுகிறது. இதுபோன்ற சிறு வேறுபாடுகள் மரபணு மாற்றத்தாலும் பன்முகத்தன்மையாலும் உருவாகின்றன. இப்படி ஏற்பட்ட வேறுபாடுகளால்தான் நோனியானது நுணா, வெண்நுணா, மஞ்சநாத்தி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.
தாவர வகைப்பாட்டியலில் ரூபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த இத்தாவரத் தொகுப்பில் பல்வேறு வகைகள் (Species) இருந்தபோதும் மொரின்டா சிட்ரிபோலியா (Morinda citrifolia) என்ற நோனி வகையே பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம், கேரள மாநிலங்களில் நல்ல மழைப்பொழிவு, மண் வளம் உள்ள இடங்களில் நோனி நன்கு வளரும். நோனி எந்தப் பகுதியில் விளைந்தாலும் வருடம் முழுவதும் புதிய இலைகள், பழங்களை உற்பத்தி செய்வது இதன் சிறப்பம்சம்.
மருத்துவப் பயன்கள்
அந்தமான் நிகோபார் தீவுகளில் நோனி தாவரம் இயற்கையாகவே வளர்ந்து பன்முகத்தன்மையுடன் காணப்படுகிறது. பழங்குடியினரால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த நோனி, சமீபகாலமாக மருத்துவப் பயிராக உருமாற்றம் அடைந்து பயிரிடப்பட்டுவருகிறது.
ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
நோனி பழமானது பசியைத் தூண்டுவதுடன், புத்துணர்ச்சியும் தரவல்லது. மனிதன் மட்டுமின்றி விலங்குகளும் இவற்றை உண்டு பயனடைகின்றன. மனித உடலில் உள்ள இணைப்புகள், அதன் திசுக்களில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து மூட்டு இணைப்புகள் நன்கு வேலை செய்ய நோனி உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலப் பாதிப்பைக் குறைப்பதால் தசைப்பிடிப்பு, ருமாட்டிசம் நோய்களிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது.
நிகோபார் தீவுகளில் வாழும் பழங்குடியினர் நோனி தேநீர் (அ) பிழிந்தெடுக்கப்பட்ட சாற்றை மலேரியா காய்ச்சலுக்கு மருந்தாகத் தொன்றுதொட்டுப் பயன்படுத்திவருகின்றனர்.
நோனி பழச்சாற்றைத் தொடர்ந்து அருந்துவதால் மனிதர்களின் உயிர் சுழற்சி மண்டலம் ஆரோக்கியமடைகிறது. இது கணையம் நன்கு இயங்கவும், நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகிறது. நோனி பழச்சாறு கணையத்திலுள்ள சரியாகச் செயல்படாத பீட்டா செல்களைச் சீராக்குவது (அ) அவற்றுக்கு உதவுவதன் மூலமாக ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக இதய செல்களுக்கு அதிக மக்னீசியத்தை அளித்து, அதன் செயலை ஒழுங்குபடுத்துகிறது.
நோனி உடல் ஹார்மோன்களைச் சமன் செய்து, பல்வேறு உடற்செயலியல் தொடர்பான உபாதைகளிலிருந்து நிவாரணம் தருகிறது. இம்மருத்துவப் பயன்கள் சித்த மருத்துவத்திலும் நன்கு அறியப்பட்டவையாகும்.
பல வகை மருந்து
நோனி தாவரப் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் வடிநீர் மஞ்சள்காமாலைக்கு மருந்தாகவும், இதன் விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தலையில் ஏற்படும் தொற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. நிகோபாரி பழங்குடியினர் இவற்றைத் தொன்றுதொட்டு உணவாகவும், மருந்தாகவும் வீட்டு விலங்குகளுக்கு உணவாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
நோனியிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட களிம்பு பற்றிய ஆராய்ச்சியின் முடிவுகள், கால்நடைகளுக்கு ஏற்படும் தோல் வியாதிகளைக் குணப்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளன. எனவேதான், நோனி எனப்படும் நுணா ‘ஆற்றல்மிகு அதிசயத் தாவரம்’ என்றழைக்கப்படுகிறது.
(அடுத்த வாரம்: நோனி பயிரிடுவது எப்படி?)
கட்டுரையாளர், இந்திய வேளாண் ஆராய்ச்சி மன்றத்தின் முதுநிலை ஆராய்ச்சியாளர்
தொடர்புக்கு: velu2171@gmail.com