‘இயற்கைக்குக் கொடுப்பதால் எதுவும் வீண் போவதில்லை, ஒன்று கொடுத்தால் பலவாகத் திருப்பித் தரும்'
அறக் கோட்பாடுகளுக்குப் பிறகு பண்ணை வடிவமைப்பில் நாம் கவனிக்க வேண்டியவை, பல்வேறு இயற்கை விதிகள். இந்த இயற்கை விதிகளை நன்கு புரிந்துகொண்டால் பண்ணையை வடிவமைப்பது எளிதாகும்.
இயற்கையிடமிருந்து எதை எடுத்தாலும், அதற்கு ஈடாக நாம் திருப்பித் தருவது மிகவும் அவசியம். அது மட்டுமல்ல இயற்கை நமக்குக் கொடுப்பதைப் போல நம்மிடமிருந்தும் எதிர்பார்க்கிறது. நாம் மரங்களை வெட்டி மரத்தாலான சாமான்களைச் செய்கிறோம் அல்லது தாளைத் தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம். வெட்டுகிற மரத்துக்கு இணையாக மரங்களை நடவு செய்கிறோமா என்று பார்க்க வேண்டும். அது தடைபடும்போது நமக்குத் தேவையான மூலப்பொருளான மரம் தொடர்ந்து கிடைக்காது. பண்ணையிலிருந்து தொடர்ந்து விளைச்சலை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். ஆனால், பண்ணைக்கு நாம் எதைத் திரும்பக் கொடுக்கிறோம் என்பதை யோசிக்க வேண்டும்.
தூங்கும் வெடிகுண்டு
அது மட்டுமல்ல, ஒவ்வொருவரும் தாம் உருவாக்கும் கழிவை மறுசுழற்சிக்கு உட்படுத்துகிறோமா என்றும் பார்க்க வேண்டும். ஒரு தொழிற்சாலை உருவாக்கும் கழிவு மற்றொரு இடத்தில் மறுசுழற்சிக்கு உட்பட வேண்டும். அதாவது ஒன்றன் கழிவு மற்றதன் உணவு என்று இருக்கும்போது, மறுசுழற்சி எளிதாகிறது. ஆனால், அவ்வாறு மறுசுழற்சிக்கு உட்படாதவை மாசுகளாக, தீமை செய்யும் கழிவுகளாக மாறுகின்றன.
இந்திய மக்கள்தொகை ஏறத்தாழ 125 கோடி. ஒரு தனியாள் நாளொன்றுக்குச் சராசரியாக 125 கிராம் மலத்தை வெளியேற்றுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆக, நாளொன்றுக்கு 15 லட்சம் டன் மலக் கழிவு இந்தியாவில் உருவாகிறது. ஆண்டுக்கு 5,475 லட்சம் டன். இது முறையாக மறுசுழற்சிக்கு உட்படுவதில்லை. மிக மோசமான மாசுப்பொருளாக சூழலில் கிடக்கிறது. அது ‘பிளஷ்' செய்யப்படும் கழிவுத் தொட்டிகளில் நாள் குறிப்பிடப்படாத வெடிகுண்டுபோல் தூங்கிக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கழிவை முறையாக உரமாக மாற்றினால், ரசாயன உரத்துக்கு வேலையே இல்லை.
கழிவல்ல, ஆற்றல் வளங்கள்
இந்தியா ஆண்டுக்குச் சராசரியாக 80 லட்சம் டன் யூரியாவை இறக்குமதி செய்கிறது. இதற்காக ஆண்டுக்கு ஏறத்தாழ 70,000 கோடி ரூபாயை மானியமாகவும் கொடுக்கிறது. மேலே நாம் பார்த்த கழிவு உண்மையில் வளமான உரமாக மாறிச் சாகுபடிக்கு உதவக்கூடியவை. இதையே வேறு வகையில் கூறுவதானால், இவை நம் ஆற்றல் வளங்கள். இவற்றில் ஆற்றல் மறைந்துள்ளது. இந்த ஆற்றலைப் பயனுள்ளதாக மாற்ற வேண்டியது நமது கடமை.
எல்லாக் கழிவுகளிலும் ஆற்றல் புதைந்துள்ளது. அது பண்ணைக் கழிவாக இருக்கட்டும், சாணக் கழிவாக இருக்கட்டும், ஏன் மனிதக் கழிவாக இருக்கட்டும். இவை இயற்கையிடமிருந்து ஏதோ வகையில் எடுக்கப்பட்டவைதாம். இவற்றைத் திரும்பக் கொடுக்க வேண்டும். இது அடிப்படை விதி. இதை மீறும்போது இயற்கை மோசமான பதிலடியைக் கொடுக்கிறது.
(அடுத்த வாரம்: இயற்கை தருவதை அறுவடை செய்கிறோமா?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com