உயிரியல் செயல்பாட்டில் கழிவு என்ற ஒன்று இல்லை, ஒன்றன் கழிவு மற்றொன்றன் உணவு என்பதே நிதர்சனம்-கதிரவனிடமிருந்து வரும் ஆற்றல் தொடர்ந்து பூமிப்பந்தில் உயிர்களுக்கான ஊட்டமாக (சத்துகளாக) மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது. கிடைக்கும் முழுமையான ஆற்றலை நாம் பயன்படுத்தாமல் பாழாற்றலாக விட்டுச்செல்கிறோம் என்பது ஒருபுறம் இருக்க, மாற்றப்பட்ட ஆற்றலும் மீண்டும் மீண்டும் மறுசுழற்சிக்கு உட்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆற்றல் ஊட்டமாக, அதாவது சத்துகளாக மாறிய பின்னர் தொடர் சுழற்சிக்கு உள்ளாகிறது. இதை ஊட்டச் சுழற்சி என்கிறோம். ஊட்டச் சுழற்சியைத் துண்டிப்பதன் மூலம், நாம் பெரும் சிக்கலுக்கு உள்ளாகிறோம்.
இடைவிடா சுழற்சி
ஊட்டச் சுழற்சி என்பது தாதுப்பொருட்களும் உயிர்மப் பொருட்களும் உயிரினங்களின் ஊடாகச் சென்று, அவற்றின் வளர்ச்சியிலும் சிதைவிலும் பங்கெடுத்து, அடுத்த நிலைக்கு மாறிக்கொண்டே இருப்பது. ஒரு செடி மண்ணில் இருந்து சத்துகளை எடுத்துக்கொண்டு வளர்கிறது, அதை ஒரு ஆடு தின்று வளர்கிறது, அதைப் புலி தின்கிறது, அந்தப் புலி இறந்த பின்னர் நுண்ணுயிர்கள் அந்த உடலைச் சிதைத்து மீண்டும் மண்ணுக்குள் சத்துகளைத் திருப்பிச் செலுத்திவிடுகின்றன. இப்படி மண்ணில் உள்ள சத்துகள் மாறிச் மாறி சுழன்று வருவதை நாம் உணர முடியும். இப்படி இயற்கையில் பிறப்பும் இறப்பும் தொடர் நிகழ்வாக உள்ளது.
''உறங்குவதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பதுபோலும் பிறப்பு''
-என்று திருக்குறள் கூறுகிறது. இது மெய்யியல் அடிப்படையில் குறிப்பிடப்பட்டாலும், வேளாண்மைக்கும் நன்கு பொருந்தும்.
உயிரினம் வளராது
மார்ட்டின் என்ற அறிஞரின் கூற்றுப்படி ஒரு உயிரினம் சமநிலையான ஊட்டச் சுழற்சியுடன் உள்ள சூழலில் மட்டுமே நன்கு வளர்ந்து செழிக்க முடியும். அந்த ஊட்டச் சுழற்சி தடைபட்டால், அந்த இனத்தில் வளர்ச்சி பாதிப்புக்கு உள்ளாகும். எல்லாவற்றையும் அடக்கி ஆள்வதாக நம்பிக்கொண்டிருக்கும் மனித இனத்துக்கும் இது பொருந்தும். ஊட்டச் சத்துகள் ஓர் உயிரினத்துக்கு உணவாக இருக்கும்போது, மற்றொரு உயிரினத்தின் கழிவாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக மாட்டுச் சிறுநீர் என்பது மாட்டைப் பொறுத்தவரை கழிவு. அது செடிக்கு மிகச் சிறந்த ஊட்டமான தழைச்சத்தை (நைட்ரஜனை) கொடுக்கிறது. மாட்டின் சாணம் மண்புழுக்களுக்கு மிகச் சிறந்த உணவு.
இப்படியாக இயற்கைச் சூழலில் (Physical environment) வாழும் உயிரினங்களுக்குச் சத்துகள் மாறி மாறிப் பயணம் செய்துகொண்டே இருக்கின்றன. இந்தப் பயணம் நடைபெறாவிட்டால் உலகம் இயங்காது. எனவே, இயக்கத்தின் உயிர் நாடியாக ஊட்டச் சுழற்சி அமைந்துள்ளது. இதைப் புரிந்துகொள்வது அவசியத் தேவை.
(அடுத்த வாரம்: சுழற்சி முறையில் இயற்கை அளிக்கும் ஊட்டம்)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: pamayanmadal@gmail.com