உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 09: சிலந்தியின் தட்டான் வேட்டை

ஏ.சண்முகானந்தம்

தன் உடல் எடையைவிட அதிக எடை கொண்ட இரையைப் பிடிக்கும்போது, பூச்சிகள் படும்பாட்டை பலமுறை பார்த்திருக்கிறேன். அவற்றைச் சில முறை ஒளிப்படம் எடுத்தும் இருக்கிறேன். அது போன்ற சந்தர்ப்பங்கள் காடுகளில் மட்டுமின்றி நான் செல்லும் குளம், குட்டைகள், பறவை காப்பிடங்களிலும் காணமுடிகிறது. அந்த வரிசையில் என்னுடைய வீடும் பூச்சிகளின் உலகமாக நாளதுவரை இருந்துவருகிறது. பெயர் தெரியாத பூச்சிகள், பச்சைத் தட்டான், குதிக்கும் சிலந்தி செந்நிற ஊசித்தும்பியை பிடித்திருப்பது எனப் பலப்பல பூச்சிகளை எங்கள் வீட்டுத் தோட்டத்திலேயே பதிவுசெய்திருக்கிறேன்.

பத்தாண்டுகளுக்கு முன்பு, வீட்டிலுள்ள தேன்குழல் பூச்செடியில் குதிக்கும் சிலந்தியொன்று கரும்பட்டைத் தட்டானை வேட்டையாடிக் கொண்டிருந்தது. தன் எடையைவிட கூடுதலான கரும்பட்டைத் தட்டானை இலையின் கீழ் வேட்டையாடிய நிலையைச் சில படங்களில் பதிவு செய்துவிட்டு, குதிக்கும் சிலந்தியின் செயல்பாடுகளைப் பொறுமையாகக் கவனிக்க ஆரம்பித்தேன்.

இலையின் மேற்பக்கம் தட்டானைக் கொண்டுவருவதற்கு, குதிக்கும் சிலந்தி பல முறை முயற்சி எடுத்தும் பலன் கிடைக்கவில்லை. கடைசியாகத் தட்டானின் தலையை அது துண்டித்து, உடல் பகுதி கீழே விழுந்தவுடன் தலையை மட்டும் இலையின் மேற்புறம் கொண்டு சென்றது வியப்பை ஏற்படுத்தியது. குதிக்கும் சிலந்தியின் தொடர்ச்சியான செயல்பாடுகளை ஒளிப்படக்கருவியில் பதிவு செய்துகொண்டிருந்த எனக்கு உதவி செய்துகொண்டிருந்த என் தந்தையும், திக்கும் சிலந்தியின் அந்தச் செயலைக் கண்டு ஆச்சரியமடைந்தார்.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT