உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 11: இதுவும் கரப்பான்பூச்சிதான்!

ஏ.சண்முகானந்தம்

ஏழு அல்லது எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, சென்னையின் மையப்பகுதியான கன்னிமாரா நூலகத்தின் பின்புறம் உள்ள மரங்கள் அடர்ந்த பகுதியை வாழிடமாகக் கொண்டுள்ள வெளவால்களை நோக்குவதற்காக நண்பர்கள் வே.தட்சிணாமூர்த்தி, அ.செந்தில்குமாருடன் சென்றிருந்தேன்.

ஆயிரக்கணக்கில் காணப்பட்ட வெளவால்களைப் பதிவு செய்துகொண்டிருந்தாலும் இடையிடையே அழகிய பூக்கள், பூச்சிகளையும் பதிவு செய்துகொண்டிருந்தேன். அங்கிருந்த புதர்ச்செடியின் இலையில் கரப்பான்பூச்சிகளில் ஒரு வகையான வெண் வளையக் கரப்பான் பூச்சிகள் தென்பட்டன. அவற்றைக் கண்டவுடன் அருகில் சென்று பதிவு செய்ய ஆரம்பித்தேன். மனிதத் தொந்தரவை உணர்ந்துவிட்ட கரப்பான்பூச்சிகளில் சில புதருக்குள் நகர்ந்து செல்ல ஆரம்பித்தன. இலையின் மீதமர்ந்து கொண்டிருந்த நான்கு கரப்பான்பூச்சிகளை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது.

கோள வடிவக் கறுப்பு நிற உடலில் பக்கத்துக்கு மூன்று, நடுவில் ஒன்று என ஏழு வெண்ணிற வளையங்களைக் கொண்டிருந்த அந்தக் கரப்பான்பூச்சிகள் அழகாக அமைந்திருந்தன. கறுப்பு நிற உணர்கொம்புகளையும், முள்முடிகளுடன் கூடிய கறுப்பு நிறக் கால்களையும் கொண்டிருந்தன. வீட்டின் சமையலறை, கழிவறைகளில் காணப்படும் கரப்பான்பூச்சிகளைப் போன்று வெண் வளையக் கரப்பான்பூச்சிகளும் அனைத்துண்ணிகளாக, துப்புரவாளர்களாகப் புதர்ச்செடிகளுக்கு இடையே பங்காற்றுகின்றன.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT