உயிர் மூச்சு

பூச்சி சூழ் உலகு 07: ஆச்சரியப்படுத்திய வீட்டுத் தோட்டம்

ஏ.சண்முகானந்தம்

காட்டுப் பயணங்கள், நீர்நிலைகள், குளக்கரைகளில் தேடியலைந்து படம் எடுத்த பூச்சிகளின் எண்ணிக்கைக்குச் சிறிதும் குறைவில்லாமல், ஆச்சரியப்படுத்தும் விதமான களமாக திருவொற்றியூரில் நாங்கள் குடியிருக்கும் வீட்டின் சிறு தோட்டம் எப்போதும் இருந்துவந்துள்ளது. இங்குப் பெயர் தெரியாத பல பூச்சி வகைகளைப் பதிவுசெய்துள்ளேன். ஒரு நாள் அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருக்கையில் சுற்றிலும் உள்ள செடிகொடிகளின் மீது கண்களால் துழாவினேன். அப்போது எங்கள் வீட்டு மாடிப் படிக்கட்டுக்கு அருகில் உள்ள கொய்யா மரக்கிளையில் உள்ள ஒரு இலை சற்று வித்தியாசமாகத் தோன்றியது. அருகில் சென்று பார்த்தபோது இதுவரை பார்க்காத பூச்சி இனமாக இருந்தது வியப்பை அதிகப்படுத்தியது.

அருகில் இருந்த சகோதரரை அப்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கும்படி கூறிவிட்டு, விரைவாக அலுவலகம் சென்று ஒளிப்படக்கருவியுடன் திரும்பிவந்தேன். வெட்டுக்கிளி போன்ற தோற்றத்தில் இருந்தாலும், இதன் உடலமைப்பு மேஃபிளை வகையோடு ஒத்துப்போனது. ஆனால் மேஃபிளையில் என்ன வகை, இதற்கான தமிழ் பெயர் என பல கேள்விகள் எழுந்தன. இப்படிப் பல சிந்தனைகள் எழுந்தாலும் அது பறந்து செல்வதற்குள் சில ஒளிப்படங்களை எடுத்துமுடித்திருந்தேன்.

இளம் பச்சை நிற உடலில், தட்டான்களுக்கு இருப்பதுபோல, அடர் மணல் பழுப்பு நிறத்தில் குச்சி போன்று நீண்டிருக்க, அதை மூடியதுபோன்று ஊடுருவும் தன்மையுள்ள இறகுகள் மூடியிருந்தன. உடலின் அடிப்பகுதியில் மெல்லிய இரு முடிக்கற்றைகள், அதன் உடலைவிட நீளமாக இருக்க, மெல்லிய சிறு உணர்கொம்புகள் காணப்பட்டன. நீண்ட வளைந்த முன் கால்களுடன், பின் கால்கள் சற்று சிறிதாக இருந்தன. கண்கள் வெள்ளை கலந்த இளம் பச்சை நிறத்தில் காணப்பட்டன. உடலின் மேல் பகுதியில் தலைப் பகுதி தொடங்கிக் கடைசிவரை பழுப்பு நிறப் பட்டையொன்று தென்பட்டது. இந்த மேஃபிளைக்கான தமிழ்ப் பெயரைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

- கட்டுரையாளர், காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: shanmugam.wildlife@gmail.com

SCROLL FOR NEXT