உயிர் மூச்சு

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 04: உள்ளேயே இருக்கிறது ஊட்டம்

பாமயன்

கானகத்திலிருந்து நாம் மட்கு உரம் செய்யும் கலையைக் கற்றுக்கொள்ள முடியும். நல்ல காட்டில் உதிரும் மிகுதியான இலைகளும் குச்சிகளும் காற்றின் உதவியால் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்படுகின்றன. அடுக்கிய இலைகள்/குச்சிகளின் மீது நடந்து செல்கிற விலங்குகளும் பறந்து செல்கிற பறவைகளும் எச்சம் இட்டுச் செல்கின்றன. அது ஒரு சிறிய அடுக்காக மாறுகிறது. அதன் பின்னர் மழையும் பனியும் இந்த அடுக்குகளின் மீது நீரை ஊற்றுகின்றன. இப்படியாக ஓரடுக்கு காய்ந்த தாவரக் கழிவு, ஓரடுக்கு விலங்குக் கழிவு, அதன் மீது நீர் முழுக்கு என்று மிகச் சிறப்பான மட்கை உருவாக்கும் வேலை இயற்கையில் நடக்கிறது.

இதையேதான் நாம் ‘காப்பி அடிக்கிறோம்'. தாவரக் கழிவில் உள்ள கரிமச் சத்து, விலங்குக் கழிவில் உள்ள நைட்ரஜன் சத்து ஆகிய இரண்டும் 30:1 என்ற அளவில் சேர்க்கப்பட்டால், மட்கு உரமாக மாறுகிறது. இந்த வேலையை நுண்ணுயிர்கள் செய்ய வேண்டும். அதற்கு ஈரப்பதம் வேண்டும். அதற்காக நீரைச் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால் சத்து நிறைந்த மட்கு உரம் கிடைக்கும்.

ஒரு காடு தனக்கான உரத்தைத் தானே செய்துகொள்கிறது. எனவே, யாரும் அதற்கு வெளியிலிருந்து உரம் போட வேண்டியதில்லை. இதுவே ஒரு பண்ணையிலும் நடக்க வேண்டும். வெளியிலிருந்து உரம் வராமல் பண்ணைக் கழிவுகளையே உரமாக மாற்றுவது பண்ணை வடிவமைப்பின் அடிப்படைக் குறிக்கோள்களில் ஒன்று.

அணிநிழற் காடு

காட்டில் களைகள் என்று எதுவும் இல்லை. ஒன்றுக்கு ஒன்று உதவும் நண்பர்களாகவே உள்ளன. வேர்கள் நீரைத் தேடி நிலத்துக்குள் ஓடுகின்றன, இலைகளும் கிளைகளும் வெயிலைத் தேடி வானை நோக்கி ஓடுகின்றன. இந்த ஓட்டத்தில் ஒன்றை ஒன்று முந்துகிறது, ஆனால் ஒன்றை ஒன்று முற்றிலுமாக அழித்துவிடுவதில்லை. நெடிதுயர்ந்த மரத்துக்கு அடியில் ஒரு குட்டை மரம் வளர்கிறது, அதற்கு அடியில் ஒரு புதர்ச் செடி வளர்கிறது, அதற்கு அடியில் நிலப்போர்வையான படர் கொடிகள் படர்கின்றன. நிலத்துக்குள் கிழங்குகளும், குமிழங்களான வெங்காயக் குடும்பப் பயிர்களும் வளர்கின்றன, நெட்டை மரங்களின் மீது பற்றுக் கொடிகள் ஏறி அசைந்தாடுகின்றன. இந்த அணிநிழற் காட்டைத்தான், திருவள்ளுவர், நாட்டின் அரண் என்று கூறுகிறார்.

களைகள் என்று நாம் கருதுபவை மண்ணை வளப்படுத்த வரும் முன்னோடிப் பயிரினங்கள். இவை குறிப்பிட்ட காலத்தில் இடத்தை மாற்றிக்கொள்ளக்கூடியவை. அவை நிலத்தில் மடிந்து மட்கி உரமாகின்றன. அதன் மீது அடுத்த - உயரிய பயிரினம் வளரும். காட்டுக்குள் யாரும் களை எடுப்பதில்லை. இந்த நுட்பத்தைப் பண்ணையிலும் பயன்படுத்த வேண்டும். தோட்டத்துக் களைகளைத் தோட்டத்துக்கே திரும்பவும் உரமாக்க வேண்டும். அவற்றை எடுத்து வெளியில் எறிவதும் எரிப்பதும் கூடாது. அவற்றை மூடாக்காகப் பயன்படுத்தலாம். சாண நீருடன் சேர்த்து ‘களைத் திரவ உர'மாக மாற்றலாம். ஏனென்றால், களைகள் நமது மண்ணை வளமாக்கும் பல சத்துகளைக் கொண்டிருக்கின்றன. அவை அடுத்த நிலைப் பயிர்களுக்கான (உணவுப் பயிர்கள்) உணவாக மாறுகின்றன. இதை உணராமல் களைகளை எடுத்து வரப்புகளில் வீசி மிதித்துவிடுகிறோம், வரப்புகளில் பயிர் நன்கு வளர்கிறது, வயலில் பயிர் படுத்துக்கொள்கிறது. ஆக, இயற்கை என்னும் ஆசிரியரிடமிருந்து பண்ணையத்துக்கான நுணுக்கங்களை நாம் ஏராளமாகக் கற்றுக்கொள்ள முடியும்.

அடுத்த இலக்கு தொடர்ச்சியான பண்ணையமா? பருவகாலச் சாகுபடியா? சந்தைக்கான சாகுபடியா? தேவைக்கான சாகுபடியா?

(அடுத்த வாரம்: எப்படி அமைய வேண்டும் பண்ணைய வடிவமைப்பு?)
கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்
தொடர்புக்கு: adisilmail@gmail.com

SCROLL FOR NEXT