உயிர் மூச்சு

அந்தமான் விவசாயம் 03: சுனாமியிலிருந்து மீண்ட நிலங்கள்

அ.வேல்முருகன்

அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்த நிலப்பரப்பில் (8,250 சதுர கி.மீ.) சுமார் 85 சதவீதத்துக்கும் மேல் அடர்ந்த காடு. குறுக்குவெட்டாகப் பார்க்கும்போது தீவுகளின் மையப் பகுதியில் மலைத்தொடர்களும், அடுத்து ஏற்றஇறக்கத்துடன் கூடிய மேட்டுப்பாங்கான மலைச்சரிவுகளும், அதையடுத்துத் தாழ்ந்த கடற்கரைச் சமவெளியும் அமைந்துள்ளன. அந்தமானின் மொத்த நிலப்பரப்பில் சுமார் 15 முதல் 20 சதவீதம் தாழ்ந்த கடற்கரைச் சமவெளி. பெரும்பாலும் மேட்டுப்பாங்கான மலைச்சரிவுகள், கடற்கரைச் சமவெளிகளில் மட்டுமே வேளாண்மை நடக்கிறது.

ஆனால், 2004 டிசம்பர் ஆழிப்பேரலைக்குச் (சுனாமி) பின்னர் பல இடங்களில் கடல்நீர் தேங்க ஆரம்பித்துவிட்டது. கடல் அலைகள் உயரமாக எழும் காலத்தில் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டன. நீர் தேங்குவதாலும் உவர்ப்புத்தன்மையாலும் கடற்கரைச் சமவெளியில் பயிரிடப்பட்ட பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்பட்டது.

நில மேம்பாடு

கடற்கரையோரம் பராமரிக்கப்பட்டுவந்த நன்னீர் மீன் குட்டைகளும் பாதிக்கப்பட்டன. வறண்ட காலத்தில் நன்னீர்ப் பற்றாக்குறை அதிகரித்தது. ஆழிப் பேரலைக்குப் பின்பு இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பல்வேறு நாடுகளின் கடற்கரைச் சமவெளிகள், தீவுகளில் இந்த நிலை நிரந்தரமாகி, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

அந்தமானில் உள்ள இப்படிப்பட்ட நிலப்பகுதிகளைப் புதிய நிலமேம்பாட்டு மற்றும் வடிவமைப்பு முறைகள் மூலம் மீண்டும் விளைநிலங்களாகவும் நன்னீர் சேமிக்கும் குளங்களாகவும் மாற்றுவதற்கு வேளாண் துறையும் மத்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையமும் இணைந்து பணியாற்றிவருகின்றன. இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் மழைநீர் சேகரிப்பு, சீர்கெட்ட நிலத்தை விளைநிலமாக மாற்றுவது, காய்கறி மற்றும் நன்னீர் மீன் உற்பத்தி மூலமாக உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்கி, மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது.

பல்வேறு ஆராய்ச்சிகளின் முடிவில் மூன்று வகையான நில மேம்பாடு மற்றும் வடிவமைப்பு முறைகள் ஆழிப் பேரலைக்குப் பிந்தைய காலத்தில் அந்தமான் தீவுகளில் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அவை: அகலப் பாத்தி - வாய்க்கால் (நாழி), அகலப் பாத்தி நன்னீர் குளங்கள், நெல்லும் மீனும் ஒருங்கிணைந்த முறை.

(அடுத்த வாரம்: நிலத்திலிருந்து உப்பை அகற்றும் நுட்பம்)
கட்டுரையாளர், அரசு வேளாண் அலுவலர்
தொடர்புக்கு: velu2171@gmail.com

SCROLL FOR NEXT