நம்முடைய பழமொழிகளில் வேளாண்மை பற்றிய கருத்துகள் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. அவை உழவர்களின் அனுபவங்களையும் அறிவு மேதமையையும் காட்டுகின்றன.
‘அகல உழுவதில் ஆழ உழுவதே சிறந்தது’ என்பது அப்படிப்பட்ட முக்கியமான ஒரு பழமொழி. உழவின்போது ஆழமாக ஏரின் கொழு இறங்கும்போது, மழை நீர் நன்கு இறங்கி வயலில் ஈரப்பதம் காக்கப்படும். அது மட்டுமல்லாது இப்படிச் செய்யும்போது சில களைகள் வெளியே பிடுங்கப்பட்டுக் காயவிடப்படுவதால், களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன.
‘எள்ளுக்கு ஏழு உழவு’ என்றொரு பழமொழி உண்டு. எள், ஒரு மானாவாரிப் பயிர். அது மழையை நம்பி மட்டுமே பயிர் செய்யப்படுவது. மானாவாரிப் பயிர்களுக்கு அதிக அளவு உழவு தேவை. இதையே திருக்குறளும் உறுதி செய்கிறது.
‘தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்’ (குறள்: 1037)
என்று வள்ளுவர் கூறுகிறார். உழும்போது மண் நன்கு தூளாக்கப்பட்டுவிடுவதால், அதன் நீர்ப்பிடிப்பு ஆற்றல் அதிகமாகிறது. எவ்வளவு அதிகமாக மானாவாரி நிலத்தை உழுகிறோமோ, அந்த அளவுக்கு நன்மை கிட்டும் என்பது உண்மை.
முன்னோடி உழவர்
நம்முடைய பெரிய நிலங்களில் உழவு என்பது ஒரு கூட்டுச் செயல்பாடு. அது மட்டுமல்லாமல், மழை பெய்த உடனே உழுதாக வேண்டும். மழையின் ஈரம் காய்ந்துவிட்டால் உழுவது கடினம். எனவே, அந்த நிலையில் உடனடியாக உழுவதற்கு உழவர்கள் கூட்டாகச் சேர்வார்கள். டிராக்டர்கள் இல்லாத அந்தக் காலத்தில் பெரும் நிலப்பரப்பை எளிதாக உழவு செய்யும் திறனை, கூட்டு உழைப்பு மூலம் உழவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
அப்படிக் கூட்டமாக - கொத்தாக, மொய்யாகச் செய்யும் உழவு வேலைகளில் ஏர்கள் வரிசை வரிசையாகச் செல்லும். அந்த வரிசையில் முன் செல்லும் ஏர் ‘முன்னத்தி ஏர்’ எனப்படும். முன்னத்தி ஏரை ஓட்டுபவர் மிகவும் திறமையானவராக இருப்பார். அப்படி முற்போக்காகச் செல்லும் ஏர் எப்படிக் குழப்பமின்றிப் பின்னால் வருபவர்களும் செப்பமாக முன்னேற உதவுகிறதோ, அதுபோல மற்ற துறைகளில் வழிகாட்டுவோரை ‘முன்னத்தி ஏர்’ என்று குறிப்பிடும் பழக்கம் தமிழில் உருவானது. முன்னத்தி ஏரை அடிப்படையாகக் கொண்ட பழமொழி, ‘முன்னத்தி ஏருக்குப் பின்னாடிதான் பின்னத்தி ஏரும் போகும்’.