விடியற்காலையில் சற்றே தூக்கம் கலைந்தபோது, கரிச்சான்களின் குரல் என்னை வெளியே அழைத்தது. வீட்டுக்கு முன்னால் இருந்த மின்கம்பியில் இரண்டு கரிச்சான்கள் உட்கார்ந்திருந்தன. அவற்றில் ஒன்று இளம் பறவை. இடப்புறமிருந்த மாமரத்தின் பின்னாலிருந்து மூன்றாவது கரிச்சான் வாயில் பூச்சியுடன் வந்து, கம்பியில் இருந்த இளம்பறவைக்கு ஊட்ட ஆரம்பித்தது.
பறவை கணக்கெடுப்பு
நாடெங்கும் நடந்துவரும் பறவை கணக்கெடுப்பை ‘இந்தியப் பறவை கணக்கெடுப்பு’ அமைப்பு (BirdCount India - www.birdcount.in) ஒருங்கிணைத்துவருகிறது. அதற்காகக் கிருஷ்ணகிரியில் ஏரிகளைத் தேடிச் சென்றிருந்தேன். சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரிக்கு முன்னதாக உள்ள அவதானப்பட்டி ஏரியில்தான், இந்தக் காட்சியைக் கண்டேன்.
ஊர்ப்புறங்களில் இரட்டைவால் குருவி என்று அழைக்கப்படும் கரிச்சான்கள், ஓர் அரசன் யானையின் மீது பவனி வருவதைப்போல மாடுகளின் மேல் ஒய்யாரமாக வலம் வரக்கூடிய பறவை. நாம் பார்க்கும் பறவைகளுள் தைரியம் மிக்க ஒன்று. இவை மின் கம்பிகளில் உட்கார்ந்து வெட்டுக்கிளிகளையும் மற்றப் பூச்சிகளையும் பாய்ந்து சென்று பிடித்து உண்பதைக் கண்டிருப்போம். கரிச்சான்களின் விருப்ப உணவுப் பட்டியலில் கரையான், குளவி, எறும்பு, புழுக்களும் அடங்கும். சில வேளைகளில் அந்தி சாய்ந்த பின்னும் தெரு விளக்குகளால் கவரப்படும் பூச்சிகளையும் கரிச்சான் வேட்டையாடும்.
கரிச்சான்
விடிந்ததும் போர்
மற்ற பறவைகளில் ஆழ்ந்திருந்தபோது, திடீரென்று கரிச்சான்கள் எழுப்பிய எச்சரிக்கை ஒலியைக் கேட்டுத் திரும்பினேன். கரிச்சான்களை நெருங்கிக் கொண்டிருந்த அண்டங்காக்கை ஒன்றை அவை விரட்டின. காகங்களைக் கரிச்சான்கள் துரத்துவது வழக்கம்தான் என்றாலும், அந்தக் காகம் போன பிறகும் தொடர்ந்து சத்தமிட்டுக்கொண்டே இருந்தன. அடுத்ததாக என்ன பறவை தென்படும் என்று நான் தேடுவதற்குள், சிறிய போர்க் களத்துக்குள் நுழைந்துவிட்டது போலிருந்தது.
அந்த வழியே வந்த அனைத்துப் பறவைகளையும் துரத்திச் சென்று தாக்க முயற்சித்துக்கொண்டிருந்தன கரிச்சான்கள். மைனாக்கள், வல்லூறு, சிறிய பஞ்சுருட்டான்கள், பனங்காடைகள் என எதையும் விட்டு வைக்கவில்லை. அறுவடை செய்த வயலில் தானியங்களை உட்கொண்டிருந்த மணிப்புறாக்களும் அமைதியாக வயலை விட்டு நகர ஆரம்பித்துவிட்டன.
யாராக இருந்தால் என்ன?
அருகிலிருந்த தென்னந்தோப்புக்கு மேல் கரும்பருந்து ஒன்று வட்டமிட்டுக்கொண்டே அந்தப் பக்கம் வந்தது. இவ்வளவு பெரிய பருந்தைத் தாக்கக் கரிச்சானுக்குத் தைரியம் இருக்குமா என நான் நினைத்து முடிப்பதற்குள், கரும்பருந்தையும் அவை விரட்டிவிட்டன! அப்பாடா!, ஒரு வழியாக மோதல் முடிவுக்கு வந்தது என நினைத்துக்கொண்டு, மாம்பழச் சிட்டின் இனிய குரலுக்குச் செவி சாய்த்தேன்.
இம்முறை எங்கிருந்தோ ஒரு செம்பருந்து தாழ்வாகப் பறந்து வந்தது. அவ்வளவு நேரம் மற்ற பறவைகளைத் துரத்திய களைப்பு சிறிதுமின்றி, செம்பருந்தின் பின்னால் பாய ஆரம்பித்தன கரிச்சான்கள். இதைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் செம்பருந்து பறந்தது. அதிகச் சீற்றத்துடன் இருந்த ஒரு கரிச்சான், பருந்தின் வாலைக் கொத்தி இழுத்ததை நேரில் பார்த்தது சிலிர்ப்பாகவே இருந்தது. இவற்றின் ஆக்ரோஷத்தை உணர்ந்த செம்பருந்து, வேகமெடுத்து மலைக்குப் பின்னால் மறைந்தது. அந்த மோதல் களத்தில் இருந்து விடுபட, எனக்குத்தான் சில நொடிகள் தேவைப்பட்டன.
இலவசப் பாதுகாப்பு
‘கரிச்சான்கள் தங்கள் வாழ்விட எல்லையை மிகவும் அக்கறையுடன் பாதுகாக்கும், குறிப்பாக இனப்பெருக்கக் காலத்தில். உத்தரவாதமான இந்தப் பாதுகாப்பை நம்பியே புறாக்கள், தவிட்டுக்குருவிகள், கொண்டைக்குருவிகள் கரிச்சான்களின் கூடுகளுக்கு அருகில் தம்முடைய கூட்டை அமைத்துக்கொள்ளும். உருவில் பல மடங்கு பெரிய பறவைகளையும் தாக்கக் கரிச்சான்கள் தயங்காது’ என்று படித்திருக்கிறேன்.
அன்று அதை நேரில் பார்த்ததும் சிலிர்த்துப் போனேன். உயிரினங்களின் பெற்றோர் உணர்வின் மேல் வைத்திருந்த மரியாதை பல மடங்கு கூடியது. விவசாயத்துக்கு நாசம் விளைவிக்கக்கூடிய ஆபத்தான பூச்சியினங்களை அழித்து, பயிர்களைப் பாதுகாத்து நமக்கு உதவி கொண்டிருக்கின்றன கரிச்சான் போன்ற எண்ணற்ற பறவையினங்கள். அது மட்டுமல்லாமல், நான் பார்த்தது போன்ற அரிய இயற்கை நிகழ்வுகளுக்கும் கரிச்சான்கள் காரணமாக இருக்கின்றன.
கடைசியில் ஆக்ரோஷம் குறைந்த கரிச்சான்கள், பெற்றோர்களாக மாறி மீண்டும் தம் குழந்தைக்கு உணவூட்டத் தொடங்கின. நானும் காலை உணவை நோக்கி நகர்ந்தேன். யாருக்கும் இழப்பில்லாத ‘இயற்கை மோதல்’ ஒன்றைப் பார்த்த நிறைவுடன்.
கட்டுரையாளர், கல்லூரி மாணவர்.
தொடர்புக்கு: enviroganeshwar@gmail.com