29 சென்னை, சிந்தாதிரிப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் என்னுடைய தமிழாசிரியர் சக்கரபாணி அசை, சீர் பற்றி 1958-ம் ஆண்டு விளக்கம் அளித்தபோது 'நேர் நிரை' என்ற ஈரசை இயற்சீருக்கு கருவிளத்தையும், 'நேர் நிரை நிரை' என்ற மூவசை உரிச்சீருக்கு கருவிளங்காயையும் எடுத்துக்காட்டுகளாக விளக்கியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. அப்பொழுது அவர் கருவிளம் பழத்தின் மகிமை பற்றி கூறியதும் எனக்கு நினைவில் உள்ளது. 1958-ம் ஆண்டுக்கு முந்தைய 13 ஆண்டுகளில் திருச்சிக்கு அருகில் இருந்த என்னுடைய கிராமத்தில் நான் வசித்ததும், என்னுடைய வீட்டுக்குப் பின்புறம் இருந்த தோப்பில் இருந்த இரண்டு விளா மரங்களும் அதன் பழங்களும் அப்பொழுது என் நினைவில் ஓடின.
இழந்த சுவை
சரஸ்வதி பூஜை, விநாயகர் சதுர்த்தி, கண்ணன் பிறப்பு, தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின்போது பூஜைப் பொருட்களாக விளாம் பழங்கள் படைக்கப்பட்டதும், பூஜை முடிந்ததும் அவற்றின் கடினமான ஓட்டையும் சதையோடு ஒட்டி கொண்டிருக்கும் நார்களையும் நீக்கிவிட்டு, சதையை நாட்டுச்சர்க்கரையுடன் சேர்ந்து பிசைந்து என்னுடைய தாயார் எங்களுக்கு உண்ணக் கொடுத்ததும் அப்பொழுது என் நினைவில் ஓடின. பழத்தின் புளிப்புச் சுவையும், நாட்டுச் சர்க்கரையின் இனிப்புச் சுவையும் கலந்த ஒரு புதிய சுவையின் மகிமையை உண்டு அனுபவித்த என்னைப் போன்றவர்கள்தான் அறிவர்.
இந்தச் சுவையைப் பற்றி இன்று எண்ணும்போது, 'கனவும் புளித்தன, விளவும் பழநின' என்ற அகநானூற்றின் (பாடல் 294) வரிகளும், 'தயிரில் காணும் முடை தீரத் தயிர்த்தாழி'யில் (புளிப்புச் சுவைக்காக) பண்டைய தமிழர் விளாம் பழத்தை இட்டுவைத்தனர் என்ற நற்றிணையின் (பாடல் 12) தகவலும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. 1958 முதல் இன்றுவரை நகர (நரக?) வாழ்க்கை விளாம் பழத்தை உண்ணுவதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பை எனக்குத் தரவில்லை என்பதை நினைக்கும்போது,பல நல்ல விஷயங்களை நாம் இழந்துள்ளோம் என்பது தெளிவாகிறது.
வளர்ப்புத் தாவரம்
விளா, விளம், விளவு, விளவம், கருவிளம், வெள்ளில் என்ற தமிழ்ப் பெயர்களாலும், கபித்தம் என்ற வடமொழிச் சொல்லாலும் அழைக்கப்படும் விளாமரம் சங்க இலக்கியத்திலும், தமிழ்க் காப்பியங்களிலும், சித்த மருத்துவ நூல்களிலும், பழங்குடி மக்கள் பற்றிய தகவல்களிலும் பரவலாக சுட்டப்பட்டுள்ளது. இதன் தாவரவியல் பெயர் லிமோனியா அசிடிசிமா (Limonia Acidissima, Rutaceae), ருடாசி என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
கிழக்கு மலைத் தொடரின் இலையுதிர்க் காடுகளிலும், புதர்க்காடுகளிலும் (கடற்கரை மட்டத்திலிருந்து 2,500 அடி உயரம் உள்ள பகுதிவரை) இயல்பாகக் காணப்படும் இந்த மரம், முல்லை மற்றும் முல்லை திரிந்த பாலைத் திணையின் தாவரம். எனினும், இதன் பல்வேறு பயன்களைக் கருதி, பண்டை காலம் முதலே இது வளர்ப்பு மரமாகவும் திகழ்ந்து வந்துள்ளது.
வீடுகளுக்கு அருகிலும், மன்றத்திலும், வீட்டு முற்றத்திலும் இது வளர்க்கப்பட்டுள்ளது. “மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்” (புறநானூறு 18-1), “பார்வையாத்த பறைத்தாள் விளவின் நீழன் முன்றினிலவுரற் பெய்த” (மணிமேகலை 6.8-5) போன்ற தமிழ் இலக்கியப் பாடல் வரிகள் இதற்குச் சான்றாகத் திகழ்கின்றன.
(அடுத்த வாரம்: பித்தம் நீக்கும் புளிப்பு பழம்)
கட்டுரையாளர், ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர்
தொடர்புக்கு: kvkbdu@yahoo.co.in