உயிர் மூச்சு

மாசுபாட்டால் ஆண்டுக்கு 90 லட்சம் பேர் மரணம்: லான்செட் ஆய்வறிக்கை

க்ருஷ்ணி

ண் முன்னே நிகழும் காலநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்ளாமல் புவி வெப்பமயமாதல் என்பதே தவறான கற்பிதம் என்று வாதிடுவோர் உண்டு. அந்த வாதத்தில் சிறிதும் உண்மையல்ல என்பதை உணர்த்தியுள்ளது ‘லான்செட்’ ஆய்விதழ் அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை. காலநிலை - ஆரோக்கியத்துக்கான ஆணையத்தின் ஆய்வறிக்கையின்படி 2015இல் உலகம் முழுவதும் 90லட்சம்பேர் மாசுபாடு காரணமாக இறந்துள்ளனர்.

2019 வரை இந்த எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்திருக்கும் ‘லான்செட்’, இறப்புக்கான மாசுபாட்டின் வகைமை மாறியுள்ளதே தவிர மாசுபாட்டால் இறப்போரின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்று தெரிவித்துள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் புகை, தண்ணீர் மாசுபாடு போன்றவற்றால் இறப்பவர்களைவிடத் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை, ரசாயனக் கழிவுகள் போன்றவற்றால் ஏற்படும் மாசுபாட்டால் அதிகமானோர் இறக்கின்றனர்.

ஆறு பேரில் ஒருவர்

உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகள் வளர்ச்சியின் பெயரால் இயற்கைச் சுரண்டலிலும் இயற்கை விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகின்றன. மாசுபாடு என்றதுமே தனி மனிதச் செயல்பாட்டையும் சிறு, குறு அளவிலான நிறுவனங்கள் வெளியேற்றும் கழிவையும் மட்டுமே மனத்தில் வைத்துப் புரிந்துகொள்கிறோம். உண்மையில் மாசுபாடு என்பது உலகளாவியது என்பதைத்தான் மாசுபாட்டால் நிகழும் மரணங்கள் உணர்த்துகின்றன.

ஒவ்வோர் ஆண்டும் உயிரிழப்பவர்களில் ஆறு பேரில் ஒருவர் மாசுபாட்டால் உயிரிழக்கிறார் என்கிறது லான்செட் ஆய்வறிக்கை. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளிலிருந்து வளர்ந்த நாடுகள் ஓரளவுக்குத் தப்பித்துக்கொள்கின்றன. ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளும் வளர்ந்துவரும் நாடுகளும்தாம் மாசுபாட்டால் அதிகமான உயிர்களைப் பலிகொடுக்கின்றன. மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் ஐ.நா.வின் முன்னெடுப்பு, தனிமனிதச் செயல்பாடுகள், அரசு சாரா அமைப்புகளின் செயல்பாடு, சூழலியல் ஆர்வலர்களின் ஈடுபாடு, நாடுகளின் கொள்கை வரைவு போன்றவற்றைத் தாண்டியும் வளர்ந்துவரும் நாடுகள் மாசுபாட்டால் பெரும் அழிவை எதிர்கொள்கின்றன.

உலகளாவிய திட்டமிடல் தேவை

தொழிற்சாலைகளின் பெருக்கமும் நகரமயமாக்கலும் உலகளாவிய மாசுபாட்டுக்கு முதன்மைக் காரணங்கள். உலகளாவிய பிரச்சினையான மாசுபாட்டைக் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை தேவை என்பதைத்தான் மாசுபாட்டால் நிகழும் மரணங்கள் உணர்த்துகின்றன. சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றம், பல்லுயிர்த்தன்மை இழப்பு ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை மூன்றுக்கும் ஒரே அளவில் முக்கியத்துவம் அளித்துக் காக்கும்போதுதான் நிலைமையை ஓரளவு கட்டுக்குள் வைக்க முடியும். அதற்கு உலகளாவிய திட்டமிடல், அறிவியல்ரீதியிலான கொள்கை வரவு, ஆராய்ச்சிகள் போன்றவை அவசியம்.

ஆண்களே அதிகம்

ஆய்வு முடிவின்படி மாசுபாட்டால் 2019இல் உயிரிழந்த 90 லட்சம் பேரில் 67 லட்சம் பேர் காற்று மாசுபாட்டால் இறந்துள்ளனர். நீர் மாசுபாட்டால் 14 லட்சம் பேரும் காரீய மாசுபாட்டால் ஒன்பது லட்சம் பேரும், ரசாயனப் பொருட்கள் தொடர்பான வேலைகள், அங்கிருக்கும் பாதுகாப்பு குறைபாடுகள் போன்றவற்றால் எட்டு லட்சத்து 70 ஆயிரம் பேரும் இறந்துள்ளனர். மாசுபாட்டால் இறப்பதிலும் நோய்களுக்கு ஆட்படுவதிலும் பாலினமும் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. காற்று மாசுபாடு, காரீய மாசுபாடு, ரசாயனத் தொழிற்சாலைகளில் பணிபுரிவது போன்றவற்றால் பெண்களைவிட ஆண்களே அதிகமாக இறக்கின்றனர். தண்ணீர் மாசுபாட்டால் ஆண்களைவிடப் பெண்களும் குழந்தைகளும் அதிக எண்ணிக்கையில் இறக்கின்றனர்.

அனைத்துவிதமான மாசுபாட்டால் ஏற்படுகிற மரணங்களை நாம் புறக்கணித்துவிட முடியாது. காரணம், போர், தீவிரவாதம், மலேரியா, எய்ட்ஸ், காசநோய், மது, போதைப்பொருட்கள் பயன்பாடு போன்றவற்றால் நிகழும் மரணங்களைவிட மாசுபாட்டால் நிகழும் மரணங்கள் மிக அதிகம் என்கிறது ‘லான்செட்’ ஆய்விதழ். அதனால், மாசுபாட்டைக் கட்டுக்குள் வைப்பதில் தனிமனித முயற்சியோடு உலக நாடுகளின் அறிவியல்பூர்வ அணுகுமுறையும் உடனடித் தேவை.

SCROLL FOR NEXT